Friday, November 25, 2011

மயக்கம் என்ன?

(ஆனந்த விகடன் பாணியில் ஒரு முயற்சி)

தனுஷ், தன்னைப்பற்றி எதோ ஒரு படத்தில் சொன்னது உண்மைதான் போலும். அவரை பார்க்கப் பார்க்க பிடித்துதான் விடுகிறது. எனக்கு செல்வராகவநிடத்தில் ஒரு நிச்சயமில்லாத எதிர்பார்ப்பு இருக்கும். காதல் கொண்டேன், புதுப்பேட்டை - மிக நல்ல படங்கள். துள்ளுவதோ இளமை, ரெயின்போ காலனி - பிடிக்கவில்லை. ஆயிரத்தில் ஒருவன் நான் தியேட்டரில் சென்று பார்த்தேன் என்று சொல்லக்கூட கொஞ்சம் கூச்சமாக இருக்கும். கொடூரமான அனுபவம். தனது சகோதரனை வைத்து அவ்வளவு கொடுமையாக படம் எடுக்க மாட்டார் என்ற ஒரு சிறு நம்பிக்கையோடு படம் பார்க்க சென்றேன். நல்லவேளை சென்றேன். இம்மாதிரி படங்களை திரை அரங்கில் பார்ப்பது உசிதம். தனுஷ் பேசும் போது ரிச்சா குரல் வருவது, கொஞ்சம் தலையை கோணலாக வைத்துப் படம் பார்ப்பது, திடீரெண்டு திரையில் ஒரு நிழல் எழுந்து செல்வது/வந்து உட்கார்வது போன்ற அசௌகரியங்கள் இருக்காது. சினிமாடிக் எக்ஸ்பீரியன்ஸ் ரொம்ப முக்கியமாக படுகிறது எனக்கு.

சரி கதை என்ன? எனக்கு படத்தின் கதையை சொல்வது எப்போதும் பிடிக்காது. அதனால் வெறும் அவுட் லைன்.

ஒரு 'வைல்டு லைப் போடோக்ராபராக' தன்னை நிலைநாட்டிக்கொள்ள துடிக்கும் இளைஞனின் கதை. அவன் நண்பர்கள், அவன் சந்திக்கும் மனிதர்கள், அவன் காதல், அவனது ஏமாற்றம், விரக்தி, வீழ்ச்சி, எழுச்சி, இவை அனைத்திலும் அவன் காதல் என்ன ஆனது?.. அவ்வளதுதான்.

இதை எவ்வளவு எளிமையாக,ஆழமாக சொல்ல முடியுமோ அவ்வளவு எ.வும், ஆ.வும் சொல்லி இருக்கிறார் செல்வா. முக்கியமாக திரைக்கதையில் பின்னி எடுத்திருக்கிறார்.

(spoiler alert: if you want to see these scenes in the theater, please skip the next two paragraphs)

முதல் காட்சியில் திரை அரங்கை நோக்கி lights on செய்வது, நம்மை நோக்கி ஒரு காமெரா zoom in செய்வது, தனுஷின் ரெட் கார்பெட் கனவு, தனுஷ் எதோ ஒரு மீசை வைத்த அரசியல் வாதியை போட்டோ எடுக்கையில் கொரில்லா முகத்தை திரையில் பளிச் இடுவதில் தொடங்கி படம் நெடுக ஷொட்டுக்கள்.




எனக்கு மிகவும் பிடித்த பிற காட்சிகள் - 1 . தனது மானசீக குருவின் துரோகத்தால் மனமுடைந்து உட்காரும் போது தனுஷின் பின்னால் ஒரு கருவெள்ளை சுவற்றில் நீல நிறத்தில் திறந்திருக்கும் ஜன்னல். 2. தனுஷும் ரிச்சவும் இடைவேளையில் இணையும் பொழுது, 'சுந்தர் காலிங்' ரிங் டோன் 3. பொக்கைப்பல் பாட்டி 4. entire 'குமுதம்' sequence 5. தனுஷ் பேதலித்து அலையும்போது இரவின் இச்சையை தண்ணீர் குடித்து ஆற்றும் ரிச்சா 6. தண்ணீர் அதிகம் கலந்து சாராயம் குடுக்கும் ரிச்சா 7. தனது ரத்தத்தை ரிச்சா, தானே துடைக்கும் வரை தனுஷ் காத்துக்கிடப்பது 8. புகைப்படங்களால் ஆன சுவர் கலைந்து போவது.. அதே சுவர் மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொள்வது 9. சினிமா சடங்குகள் இல்லாமல், நேரம் வீணடிக்காமல் சில மாதங்களுக்குப் பின், சில வருடங்களுக்கு பின் என்று பார்வையாளர்களை கதை சொல்லி ஆக்கியது 10. தனுஷிடம் பேசாமல் இருந்த ரிச்சா கடைசியில் "ஹலோ" சொன்னவுடன் ... cut..படத்தை முடித்தது....

மற்றும் பல! நான் சொன்ன காட்சிகள் அனைத்தும் ஒரு frame அல்லது இரண்டு frame மட்டுமே. அதற்க்கு மேல் இருக்காது. ஆனால் அதில் தான் அழகு அப்பிக்கிடக்கிறது.

தனுஷின் எக்ஸ்ப்ரஷன் பாங்கில் எவ்வளவு பாவங்கள் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. தனது புகைப்படம் இந்தியாவிலேயே நோ.ஒன் ஆக வந்தும், அதன் அங்கீகாரம் தனக்கு கிடைக்காமல் போனதால், அழுகையின் ஊடே பெருமிதத்தில் அவர் சிரிக்கும் ஓரிரு வினாடிகள் போதும். ராயல் சல்யூட்.

"என் குழந்தையை இப்படி பண்ணிட்டியேடா பாவி" என்ற தனது கோபத்தை தனுஷிடம் பேசாமல் கதறும் காட்சியில் ரிச்சா - பஹுத் அச்சா.

இவ்வளவு நிறைகள் இருந்தாலும் குறைகள் இல்லாமல் இல்லை. முதல் நாற்பது நிமிடங்கள் படம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. முதல் பாதியில் வரும் இரண்டு பாடல்கள் - தேவை இல்லை. அல்லது சரியாக பயன்படுத்தப்பட வில்லை. அதுவும் - காதல் என் காதல் பாடலின் சிச்சுவேஷன் கடுப்பேற்றுகிறது - வை திஸ் கொலைவெறி செல்வா?

வசனங்கள் மிக எதார்த்தம். "எனக்கு போட்டோ எடுக்கரப்போதாங்க சந்தோஷமா இருக்கு. புடிக்காத வேலைய பாக்கறதுக்கு செத்துடலாம்." என்று தனுஷ் கூறும்போதும், "ரொம்ப ரசிச்சு பாக்கற நீ பண்ற வேலைய.. அதான் அழற" என்று ரிச்சா சொல்லும்போதும் கதையின் ஆழம் வசனத்திலும் இருக்க முடியும் என்று உணர்த்துகிறார் .

ஜி.வீ.பிரகாஷின் சிறந்த பின்னணி இசை, ராம்ஜியின் ஒளிப்பதிவு, கோல பாஸ்கரின் எடிட்டிங் - flawless! ராம்ஜிக்கும் பிரகாஷுக்கும் விருதுகள் வரலாம்.

மொத்தத்தில், காதல் என்றால் என்னவென்று உணர்ந்தவர்களுக்கும், வாழ்க்கையில் ஏதோ ஒன்றின் மீது தீராக்காதல் உள்ளவர்க்கும் 'மயக்கம் என்ன' - திரையரங்கில் பார்ப்பதில் - தயக்கம் என்ன?!

மதிப்பெண்கள் : 52/100

Wednesday, November 16, 2011

கரையாமல் இருக்கிறது


நினைவுகளோடு,
விட்டுச்சென்ற சோப்புக்கட்டியும்.
- அப்பா அம்மா ஊருக்குத் திரும்பிவிட்டார்கள்.

Monday, November 14, 2011

மாணிக்கம்... ஒரு பீர் குடு..

for (i=1; i<0 ; i++)

{

"இன்னும் ஒரு ரவுண்ட் போச்சுன்னா அவ்ளோதான் சார்.. நீங்க என்ன பண்றிங்கன்னு உங்களுக்கே தெரியாது.", என்றான் மாணிக்கம். குடிப்பவர்களைப்பற்றி அவர்களுக்கே தெரியாத அளவு மாணிக்கத்திற்கு தெரிந்திருக்கும். அனால் என்னைப்பற்றி இவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருந்தாலும், புரிந்திருக்க வாய்ப்பில்லை.அவளிடம் என்னை மீண்டும் மீண்டும் இழுந்த்துச்செல்லும் இந்த அகிலத்துவழ்ச்சி பற்றி அவனுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.

உங்களுக்கும் புரியவில்லைதனே? அது ஒருவிதத்தில் எனக்கு வசதிதான்.பாருங்கள், உங்களிடம் நான் ஒரு ரகசியம் சொல்லப்போகிறேன்.நான் நிறைய வாழ்ந்துவிட்டேன். அதினும் நிறைய பார்த்துவிட்டேன். உலகின் சிருஷ்டியில் இருந்துது இந்நாள் வரை வாழ்ந்த மனிதர்களின் மொத்த ஆயுளைவிட அதிகம் என் ஆயுள். பிளஸ் ஆர் மைனஸ் எ மில்லியன் இயர்ஸ்.

குழந்தையாக இருந்த போதே எனக்கு ஒரு வினோதம் நிகழ்ந்தது. என்னால் காலத்தில் முன் பின் செல்ல முடியும். பக்கவாட்டாகவும். பக்கவாட்டாக எப்படி என்று கேட்பவர்கள் இன்னும் கொஞ்சம் யோசித்தால் புரிந்துவிடும். கேட்க்காதவர்களைப்பற்றி எனக்குக்கவலை இல்லை. என் குடும்பத்தார் என்னை 'ஏசோசியல்', ஸிக்.. என்று ஒதுக்கிவிட்டார்கள்.அவர்களிடம் நான் என்றும் வாக்குவாதம் செய்ததில்லை. வீட்டை விட்டு 13 வயதில் ஓடிவந்துவிட்டேன்.இதில் எது ரகசியம்? ம்ம்ம்.. எல்லாமே.

என்னடா இவன் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுகிறான் என்று யோசிக்கிறீர்கள?.. அதுவும் சரியான கேள்விதான். சரி..நாம் விட்டதைத் தொடரலாம்.

என்னை எனது சிப்பந்தி எச்சரித்துக்கொண்டிருந்த வேளையில், அவள் நுழைந்தாள். ஆயிரம் முறை பார்த்தாலும் அலுக்காத முகம். அசரடிக்காத அழகு. கரு கரு விழிகள். அடக்கி வாசிக்கும் ஒப்பனை. கச்சித உடல். அதற்கென்று தைத்தார்ப்போல் உடைகள். தேஜஸ்வினி. அவளோடு வந்தவன் யாரென்று தெரியவில்லை. ஒல்லி. உயரம். பெரிய பெரிய பற்கள். பச்சை நரம்பு தெரியும் கைகள். அவளோடு இவனா?

அவர்கள் அமர்ந்தார்கள்.

"வில் கெட் யு எ டிரிங்க்" என்று அவன் எழுந்து சென்றான்.

நான் அவள் பக்கம் சென்றேன். அவள் காத்து படும் படி அமர்ந்தேன். ம்ம்ம்ம்...அதே நறுமணம். முன் ஒரு நாள் அது 'ஷநெல்' என்று சொல்லிய ஞாபகம். அப்போது சிப்பந்தி ஒருவன் அங்கு அருகில் வந்து மெனு கார்டை நீட்டினான். நான் வேண்டாம் என்று சைகை செய்து ,

"ட்ரை மார்டீனி...ஒன்", என்றேன். உடனே திரும்பினாள். அது அவளுக்கு பிடித்த பானம். ஓரிரு வினாடிகள் என்னைப்பார்த்தாள். அவளது கண்களில் 'அட!'வை ஊர்ஜிதம் செய்துவிட்டு,

"டூ.. ஆன் ராக்ஸ்" என்றேன்.



இன்னும் நெருக்கமாக அமர்ந்தேன். எவ்வளவு கரிய கூந்தல்!

மெளனமாக சில நிமிடங்கள். எப்படியும் பேசப்போகிறாள். எனக்குத்தெரியும். அவளுக்கு தெரியாது. பொறுத்தேன்.

அசோக் எங்களிடம் இரண்டு ட்ரை மார்டீனியை கொடுத்துச்சென்றான்.


அவள், "உங்க பேரு..."

"லீலா.."

"அது..."

"உன் பெயர்"

"உங்களுக்கு..."

"தெரியும்"

அவள் கண்கள் விரிந்தன. அவளிடம் ஆயிரம் பேர் பேசியிருப்பார்கள். ஏன்? நானே பல நூறு முறை பேசி இருக்கிறேன். ஆனாலும் அவளது கண்கள் ஒவ்வொரு முறையும் விரிந்தே அடங்குகிறது. லீலா.. ஒவ்வொரு செல்லிலும் அழகுக்கென்று ஒரு க்ரோமொசோம் இருக்கிறதா என்ன?

"எப்படி?", என்றாள்.

என்ன செய்வது? என்ன சொல்வது? என்ன சொல்ல வில்லை இவளிடம்? உண்மையைத்தவிர?

"லீலா. உன்னிடம் நான் ஒன்று சொல்ல வேண்டும்"

சில வினாடிகள் கழித்து ஒரு சந்தேகத்தோடு "என்ன?", என்றாள்.

"நீ என்னை நம்புவாயா இல்லையா என்று தெரியவில்லை. நம்பவேண்டும் என்று அவசியமும் இல்லை. அனால் நாம் இதற்க்கு முன்னால் சந்தித்திருக்கிறோம். நான் இதே இடத்தில் உன்னை ஆயிரம் முறை சந்தித்து பேசி இருக்கிறேன்."

அவள் விருட்டென்று எழுந்து அந்த பல்லனிடம் செல்லத் தயாரானாள்.

"நில். சொல்வதைக்கேள். நாம் இருவரும் இந்த பிரபஞ்சத்தின் வெவ்வேறு instanceல் இருக்கிறோம். இணைக்கோட்டு பிரபஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறாயா? அப்படி. உண்மை என்னவென்றால், உலகில் எல்லோரும் அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அது ஒவ்வொன்றும் மேற்க்குவியும் போது ஒரு மாயை ஏற்ப்படுகிறது. உனக்கு எதாவது புரிகிறதா? அந்த மாயையைத்தான் உலகம்,குடும்பம், வாழ்க்கை என்கிறோம். என் பிரபஞ்சமும் உன் பிரபஞ்சமும் ஒன்றாக சேரும் ஒரே தருணம் இதுதான். இது மட்டும்தான். எனக்கு ஏன் என்று தெரியவில்லை. பட் வீ பிலாங் டுகெதர். எல்லாவற்றையும் விட்டு விட்டு வா. என் கரம் சேர். நமது
சம்பாவித சமன்பாடுகள் ஒன்றாகிவிடும். இருவரின் பிரபஞ்சமும் இணைந்துவிடும். உலக மாயையில் உண்மையை மறந்து வாழலாம் வா!"

நான் பேசும்போது நான் எவ்வளவு வேகமாக பேசுகிறேன் என்று தெரிந்தது. உடம்பெல்லாம் பட படத்தது. உலகில் இந்த உண்மையை தெரிந்த மனிதர்கள் சிலர். இவள் என்னை நம்புவாளா?

அவள் என்னை எதோ வீடற்ற பரதேசி போல் பார்த்தாள். ஏளனமாக சிரித்துவிட்டு,

"நீ நிறைய்ய குடித்திருக்கிறாய். ஒழுங்கா வீடு போய் சேரு" என்று முதுகில் தட்டிக்கொடுத்து விட்டு திரு.பல்லனிடம் சென்றுவிட்டாள்.

"நில்.போகதே! உனக்கு புரியவில்லையா? இதற்க்கு முன்னால் என்னோடு ஒரே ஒரு முறை வந்தாயே. அந்த ஞாபகம் வர வில்லையா? நில்! நாம் இருவரும் ஒரு ஜென்மம் வாழ்ந்திருக்கிரோமே! நில்!" என்று கூறிக்கொண்டிருந்தபோதே கண் முன்னால் நிஜம் குழைந்தது... மயங்கி விழுந்தேன். ட்ரை மர்ட்டீனி. இருட்டு.லீலா..இருட்டு..லீலா..லீலா..லாலீ..லாலீலாலீ..இருட்டு. ..இருட்டு...இருட்டு..

*************************

வெறுமையின் துகள்கள் ஒவ்வொன்றாக சேர்ந்து தன்னைத்தனே சீர்படுத்திக்கொண்டு மெது மெது வாக கண் முன் விரிந்தது..
மாணிக்கம் எதோ சொல்லிக்கொண்டிருந்தான். என்னவென்று சரியாகக்கேட்க்கவில்லை.

கொஞ்சம் தெளிந்தது. நான் எங்கிருக்கிறேன். பாரில். என்ன செய்துகொண்டிருக்கிறேன். குடித்துக்கொண்டிருக்கிறேன். இதோ.. வந்துவிடுவாள். இன்னும் கொஞ்சம் நேரம் தான்.

"மாணிக்கம்... ஒரு பீர் குடு.."

}