Friday, February 8, 2013

தலீவர் கமல்ஹாசன் வாழ்க!


னது திருமண மண்டபத்தைக் காக்க அரசியலில் குதித்த விஜயகாந்த் போல, விஸ்வரூபப் பிரச்னை காரணமாக அரசியலில் குதிக்கிறார் கமலஹாசன் என்று வைத்துக்கொள்வோம். (கோபம் வராது, இருந்தாலும் எதிர்பார்ப்போம்) என்ன நடக்கும்?


கட்சிக்கு அகில உலக கருத்துச் சுதந்திரக் கட்சி என்று பெயர் சூட்டுவார். கட்சிக் கொடி நிச்சயமாக அமெரிக்கக் கொடியின் சாயலில் இருக்கும். கட்சியின் தொடக்கம் பற்றி தனது ஆழ்வார்பேட்டை வீட்டில் பேட்டி கொடுக்கும் கமல், தான் கட்சி தொடங்குவதற்குக் காரணமான 'புதிய தமிழகம்’ கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியில் ஆரம்பித்து ஜெய்னுலாபுதீன், ஜெயலலிதா வரையிலான அனைவருக்கும் நன்றி கூறுவார். எதிர்க் கட்சிகளைத் திட்டுவதற்காக அடிக்கடி கவிதை எழுதுவார். அவர் நம்மைத்தான் திட்டினார் என்பதுகூட புரியாமல், சில தலைவர்கள் கமல் கவிதைகள் சிறப்பாக இருப்பதாக பேட்டி கொடுப்பார்கள். உதாரணத்துக்கு ஒரு கமல் கவிதை....

'கன்'னோடு 'கன்'னைக் காட்டினால்
கலவரக்காரன் எச்சரிக்கை
உடனே கூட்டணி கை கோர்த்தானா?
ஒழுக்கம் கெட்டவன் எச்சரிக்கை
ஆளைக் கழிக்கையில் கூடுதல் பேசினால்
அனுபவமிக்கவன் எச்சரிக்கை
தேர்தல் முடிந்த பின் கிடந்து பேசினால்
மீண்டும் உறவு மலரும் எச்சரிக்கை
கவிதை இலக்கியம் பேசினாராயின்
கதைக்கு உதவாது எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்று சொன்னால்
உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை

ஆக மொத்தம் ஆழ்வார்பேட்டை வீடுகளில் உள்ள 'நாய்கள் எச்சரிக்கை’ போர்டில் உள்ள 'எச்சரிக்கை’யைவிட கமல் கவிதையில் ஏகப்பட்ட எச்சரிக்கை இருக்கும். இவருடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த கருணாநிதியால் மட்டுமே முடியும். காரணம், இவரைப் போலவே புரிந்தும் புரியாமலும் பேசத் தெரிந்த ஒரே கலைஞன் அவர்தான். ஜெயலதாவிடம் இதே பாணியில் பேசினால், 'கமலஹாசன், எனக்கு சீட்டே வேண்டாம். உங்களுடைய கூட்டணியே போதும் என்றுதான் சொன்னார்' என்று அறிக்கைவிட்டு பீதியைக் கிளப்பிவிடுவார்.
'வேலை வெட்டியை விட்டுவிட்டு வாக்களிக்கச் செல்வதா?’ என்று மக்கள் கருதுவதுதான் வாக்குப்பதிவு குறைவதற்குக் காரணம். எனவே டைரக்ட் டு ஹோம் முறைப்படி செல்போன், லேப்-டாப்பில் இருந்தே ஓட்டுப்போடும் வகையில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்குக் கோரிக்கை வைப்பார் கமல்.
தேர்தல் நேரத்தில் மீண்டும் அதே வீட்டில் பிரஸ் மீட் போட்டு, 'இந்த வீடு என்னுடையதாக இருப்பதும், இதை நான் இழப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. தேர்தல் செலவுக்காக இந்த வீடு உள்பட சென்னையில் உள்ள எனது சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்துவிட்டேன்' என்று கலங்கடிப்பார். ஒருவேளை தேர்தலில் தோல்வி அடைந்தால், "நீதான் உலக நாயகனாச்சே... ஏன் இன்னும் உள்ளுரிலேயே இருக்கிறாய்? என்று கேட்காமல் கேட்டுவிட்டீர்கள். அதனால், நான் அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு போட்டியிடப் போகிறேன்" என்று கண்ணைக் கட்டவைப்பார்.
இப்போது புரிகிறதா, "கமலஹாசனின் அரசியலைத் தாங்க மாட்டீர்கள்..." என்று பாரதிராஜா ஏன் சொன்னார் என்று!
கே.கே.மகேஷ்

No comments:

Post a Comment