வெகு நாட்கள் ஆகிவிட்டது நன் blog எழுதி. வணக்கம் மக்களே... ஓகே கண்மணியோடு மீண்டும் riddikilus..
இந்நேரம் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். கதை - இல்லை என்பதே உண்மை. இருவர் பார்த்தவுடன் பழகுகிறார்கள்; மேலும் பழகுகிறார்கள், கல்யாணம் செய்து கொள்கிறார்கள். சுபம்.
படம் பார்த்தவுடன் 'அலைபாயுதே' மாதிரியான கிளர்ச்சி ஏதும் உண்டாக வில்லை. காதலில் ஆழமோ, பதபதைப்போ, ரகசியமோ, கண்ணாமூச்சியோ, சேர்வார்களா மாட்டார்களா போன்ற tension-ஓ இல்லை. அதனாலேயே படம் அவ்வளவாக ஒட்டவில்லை. அனைவரும் கர்நாடிக் பாடுகிறார்கள், கேம் டெவலப்புகிரார்கள், பாடாவதி லாட்ஜு கூட அழகாய் இருக்கிறது, திரையில் வரும் அனைவரும் அம்சமாக இருக்கிறார்கள் - யாருக்கும் வேர்க்கக்கூட இல்லை - பிரகாஷ் ராஜ் தவிர; அனைவரும் நல்லவர்களாக, சிரித்துக்கொண்டே, சந்தோஷமாகஇருக்கும் - unidimensional கதாப்பாத்திரங்கள். ஓரளவிற்கு மேல் அலுப்பூட்டுகிறது.
இரண்டாம் பாதியில் 'இனி 10 நாள் நாம சந்தோஷமா இருப்போம்' என்று சபதம் எடுக்கிறார்கள் ஹீரோ-வும் ஹீரோயின்னும். டிஸ்கோ போகிறார்கள், ஷாப்பிங் போகிறார்கள், பீச்சில் ரொம்பவும் கத்தி பேசுகிறார்கள்.. முடிவில் "இன்னும் 8 நாள் இருக்கு" என்கிறார்கள் - மேலும் கத்தி கத்தி நிறைய செய்கிறார்கள். "இன்னும் 6 நாள் இருக்கு" என்கிறார்கள். அலுப்பூட்டும் திரைக்கதை. வசனங்கள் பயங்கர மோசம். சுஜாதா விட்டுச்சென்ற இடத்தை இன்னும் தமிழ் திரை உலகம் ஏக்கத்துடன் பார்த்துக்கோடு மட்டும் இருக்கிறது.
இவ்வளவு இருந்தும் - படத்தை மொக்கை என்று ஒதுக்க முடியவில்லை.
காரணம் ஒன்று:
ரஹ்மான் / பி.சி. ஸ்ரீராம். உணர்வுப்பூர்வமான இசை, இதமான ஒளிப்பதிவு (Photography கொஞ்சம் படித்ததால் PCயின் ஒளிப்பதிவில், GND filter பயன்படுத்துவது தெரிந்தது. இதையே மற்றவர்களும் பின்பற்றலாம். ஏன் பற்றவில்லை என்று தெரியவில்லை. தவறாய் இருந்தால் மன்னிக்க).
இது மட்டும் அல்ல, மணிரத்தினத்தின் அனைத்துப்படங்களுமே ஒளிப்பதிவின் உச்சங்கள். படங்களின்படிமங்கள் நம்முள் பதிந்துவிடும் தன்மை உடையவை. வண்ணங்களும் composition-களும் தரம் வாய்ந்தவை. நீங்கள் மௌன ராகம் நாட்களில் இருந்தே இதை கவனிக்க முடியும். ரேவதியின் விரக்தியான பார்வை, நாயகன் வேலுநாயக்கர் காட்சிகள், அஞ்சலி பாப்பா சுவற்றில் கை ஊன்றி வரும் காட்சி, தளபதி ரஜினி pose - இன்றும் பல இடங்களில் பார்க்க முடியும், ரோஜா திருநெல்வேலி, பம்பாய் - மீண்டும் திருநெல்வேலி, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் - உதாரணங்கள் ஏராளம். இந்தப்படத்திலும் அப்படிப்பட்ட காட்சி அமைப்புகள் நிறைய.ஒட்டிக்கொள்ளும் வண்ணங்கள். தங்கிவிடும் அழகு. அதனாலேயே படமே நம்முள் பாதிப்பு ஏற்படுதியதாய் உணர்வதை தவிர்க்க முடியாது.அனைத்தும் மாயம்.
காரணம் இரண்டு:
படத்தில் 'tension' இல்லை என்று கூறியிருந்தேன். கொஞ்சம் நிதானமாக யோசிக்கையில், இன்றைய அதி மேல்தட்டு காதல்கள் இவ்வாரே உள்ளது என்று தோன்றுகிறது. பெற்றவர்களின் அனுமதிக்காக பயம் இல்லை. 'Independent' என்கிறார்கள். காதலில் விழுவதே 'depend' ஆவதற்கு என்று உணர மறுக்கிறார்கள். பிரிந்தும் செல்கிறார்கள். அதில் ஏற்ப்படும் உளவியல்சேதங்களை தெரிந்தோ தெரியாமலோ ஏற்கிறார்கள். அவர்களின் அதிகபட்ச பிரச்சனை 'இன்னைக்கு என் friend முன்னாடி என்னை கிண்டல் பண்ணிட்ட. பேச மாட்டேன்' என்றோ 'ஏன் இன்னைக்கு chocolate வாங்கி தரலை' என்றோ அன்றே ஆரம்பித்து அப்போதே முடிந்துவிடும் சில்லறை கோபங்கள்.
அன்றைய 'லெட்டெர்' தவிப்போ, நேற்றைய SMS எதிர்பார்ப்போ இன்றைய காதலில் இல்லை. அனைவரும் அனைவரோடும் எப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களின் நிஜக்காதல்களே பக்கோடா சாப்பிடுவதுபோல் சுலபமாக இருப்பதால் திரையிலும் அவ்வாறே இருப்பது ஆச்சர்யம் இல்லை.
சின்ன விஷயங்களில் சுவாரஸ்யம் இல்லாமல் போனதால் பெரிய விஷயங்களில் சுவாரஸ்யப்படுத்திக்கொள்கிரார்கள். பெரும்பாலும் அவை விபரீதமாகவே முடிகிறது. உம்: 'ஆதலால் காதல் செய்வீர்'.
காரணம் மூன்று:
இறுதியாக - துல்கர் சல்மான் தன் வாயில் இருக்கும் ஹேங்கரை கழட்டி வைத்துவிட்டு கொஞ்சம்இயல்பாக நடித்தால் தேவலை. அடுத்த 'மேடி' என்று கூறுவதெல்லாம் டூ மச். நித்யா மேனன் மிக மிக அருமை. இருவரும் நிறைவாகவே நடித்திருக்கிறார்கள்.
ஓகே கண்மணி - மேட்டரை சப்பை ஆக்கிவிட்டு, சப்பை மேட்டருக்கு சண்டை போடுகிறார்கள். இந்தபடத்தை பாத்துட்டு நான் பறந்தேன், மெதந்தேன்னு சொல்றதெல்லாம் சுஜாதா சொல்றது மாதிரி 'சும்மா உள்ளுள்ளாய்'
No comments:
Post a Comment