"நல்லபடியா எழுதும்மா" என்று குழாயில் நீர் இறைப்பதை நிறுத்திவிட்டு புன்னகையோடு வாழ்த்தினாள் சரஸ்வதி (எ) சரசு. "இன்னைக்கு பரீட்சை முடியுதாம்மா?"
"இல்லம்மா, இன்னும் ஒரு வாரம் ஓட்டனும் எப்டியாது, வரேன் மா" என்று அவரசமாக ஓடினாள் ஷக்தி. சாவித்ரியின் எதிர்'பிளாட்டு'ப்பெண் பிரகாசமான கண்கள், கச்சித உடல், பின்னாத கூந்தல்(சென்னை வெய்யிலில் எப்படி சமாளிக்கிறாள்? கேட்கவேண்டும் ), லட்சணம், சன்னமான கர்வம். ஷக்தி. விரைவில் ஷக்தி எம்.பி.பி.எஸ்.
பேருந்தை பிடிக்க விரைந்தவளை கொஞ்சம் தூரம் வரை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் சரசு. ஏதோ நினைத்தபடி சிரித்துக்கொண்டாள். ஒரு குடத்தை இடையில் செருகி மற்றொன்றை கையில் தூக்கிக்கொண்டு வீட்டை அடைந்தத போது நடராஜன் தன் சீருடையில் இருந்தான். அவளது கணவன்.
"என்னாங்க, சாப்டிங்களா அதுக்குள்ள? சீக்கரம் போகனுமா இன்னைக்கு?"
"ஆமா.."
"இன்னிக்கு உங்களுக்கு புடிச்ச தொவையல் வச்சுருந்தேன் சாப்டிங்களா?"
"நான் பொடி வெச்சு சாப்பிட்டேன்...", என்று அங்கும் இங்கும் எதையோ தேடிக்கொண்டிருந்தான்.
"என்னாங்க, இங்க தான இருக்கு.. " என்று தான் அரைத்த எள்ளு தொகயலை அவன் முன் நீட்டினாள்.
"இப்போ இது ரொம்ப முக்கியமா? சூப்பர் வைசர் வராருடி.. நகரு", என்று சீப்பை கண்டுபிடித்த கோலம்பசாக விரைந்தான்.
முகம் ஒரு கூற்வினாடி சுண்டி, மீண்டு, நிதானித்து.. "இன்னைக்கு நம்ம சக்திக்கு பரிட்சயாங்க. அவல பாத்திங்கன்னா நல்லா எழுதினியா என்ன ஏதுன்னு ரெண்டு வார்த்த கேளுங்க..பொண்ணு சந்தோஷ படும்.." என்றாள்
"அதெல்லாம் நீயே கேக்க கூடாதா?", தலை சீவிக்கொண்டு, பர்ஸ் எடுத்துக்கொண்டு, செருப்பு மாட்டிக்கொண்டிருந்தான்.
"நான்தான் தெனம் கேக்கறேனே..நீங்க ஒரு வார்த்த கேக்கறதுல என்ன கொற வந்துச்சு?"
"ஆங்.. சரி சரி..." , அவள் குடுத்த உணவுக்கூடையை வாங்கிக்கொண்டான் அனிச்சையாக.
"பத்தரமா போயிட்டு வாங்க... "
கால்கள் படி இறங்கும் சப்தம்தான் அவனது - "வீட்ட பாத்துக்கோ.. வெளில போனா பூட்டிட்டு போ..வரேன்."
****
அவன் போன வழியை கொஞ்சம் நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். பின், வீட்டை சுத்தம் செய்து, குளித்து, சமைத்து, சிறிது நேரம் வெறுமென அமர்ந்து, கடனிற்கு சாப்பிட்டு, கொஞ்சம் உறங்கி எழுந்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் இட்டுக்கொண்டு எதிர்த்த வீட்டு சரோஜா மற்றும் மேலும் சில வீட்டம்மாக்களோடு கோவிலுக்கு கிளம்பினாள்.
நாள் முழுதும் ரேடியோ கேட்பாள். டி.வி. இல்லை. பழைய பாடல்கள் என்றால் உயிர். ராகம், தாளம், பாடியவர், இசைஅமைத்தவர், படம் என்று அதைப்பற்றி எதுவும் தெரியாது.
"நல்லா இருக்குல்ல?" , அதனால் கேட்பாள்.
கோவிலுக்கு போவது, தன் புருஷனுக்கு பிடித்ததை சமைத்துப்போடுவது, தன் குடியிருப்பில் விளையாடும் குழந்தைகள், முக்கியமாக எதிர்த்த வீட்டு ஷக்தி, பூரணி ... சந்தோஷமாக இருந்தாள்.
****
இரவு நடராஜன் வீடு திரும்புகையில் அவனுக்கு சுட சுட காபி இருந்தது. அவன் குடித்து இளைப்பாறி, குளித்து வந்தான்.
"இன்னைக்கு எப்டிங்க போச்சு? ஐயா ஏதும் சொன்னாங்களா?"
"இல்லடி...இன்னைக்கு ஒன்னும் சொல்லல.. எதோ நல்லா மூட்ல இருந்தார் போல."
"ம்ம்ம்.."
குழித்து முடித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்,
"கேளம்பரபோ சக்தி பத்தி ஏதோ சொன்னியே.. என்னது?"
"ம்க்க்ம்.. இப்போதான் வீடு நினைப்புக்கு வருதாக்கும்? உங்களுக்கும் அந்த புள்ள மேல பாசம் இல்லாமலா இருக்கு?"
"நா என்னடி பண்ணுவேன்.. அவசரத்துல இருந்தேன் காலைல.. ரொம்ப கத்திட்டேனா என்ன?"
"நீங்க கத்தாததா? இன்னைக்கு ஒன்னும் இல்ல.. பட படன்னு இருந்திங்க அவ்வளவு தான்.."
"என்ன சமைசுருக்க?"
"காலைல வெச்ச தொகையல் தான்.."
"எள்ளு தான?" என்று பரபரப்பாக சாப்பிடத்தயாரானான்.
"இப்போ மட்டும் ஜொள்ளு விட்ரிங்களே!" என்று சிரித்தாள்.
*****
இரண்டு மாதங்கள்...
*****
"என்னங்க..இன்னைக்கு நம்ம சக்தி இருக்காளே, அவள பாத்தேங்க.. பொண்ணு முகத்துல என்னைக்கும் இல்லாத சிரிப்பு. என்னவா இருக்கும்?"
"ஏண்டி, அவள்டயே கேட்டிருக்கலாமே. தூங்கரப்போ ஏன் இம்ஸ பண்ற?"
"கேட்டேங்க.. ஆனா ஒண்ணுமே சொல்லல பொண்ணு. வெறுமென ஒன்னும் இல்லம்மான்னு சொல்லிடுச்சு. நாளைக்கு கேக்கணும்.."
"பேசாம படும்மா..நாளைக்கு சீக்கரம் எழுந்துக்கணும். ஊருக்கு போறோம்ல?
"என்னமோ ஒன்னு இருக்குங்க. பொண்ணு சொல்ல மாட்டேங்குது.."
****
ஊரில் திருவிழா. சொந்தங்களின் ஊடேயும் சரசுவிர்ற்கு ஷக்தியின் நினைவு அவ்வப்போது வந்தது. 'எப்பயுமே சிரிச்ச முகம்தான்.. இருந்தாலும் அன்னைக்கு வேற எதோ ஒண்ணு... ம்ம்ம்.. நம்மகிட்ட சொல்லாம விட்டுடுச்சே.. போன ஒடனே இன்னொருக்க கேட்டா சொல்லிடும்.'
*****
ஒரு வாரம்.
*****
"வேலையெல்லாம் போட்டது போட்ட படி இருக்கு... இந்த மணி ஒழுங்கா பாத்துக்கிட்டானான்னு தெரியல.. கொஞ்சம் லேட் ஆகும் வரதுக்கு.. தேடாத. அப்டி வர ரொம்ப நேரம் ஆச்சுன்னா நானே போன் பண்றேன்."
"சரிங்க. நிதானமா வாங்க. நான் மொத சக்திட்ட பேசணும்.. பொண்ணு எதோ சேரி இல்ல.."
"இதோ பாரு சரசு.. நீ எல்லார் மேலயும் உரிமை எடுத்துக்காத. பலருக்கு புடிக்காது."
"என்ன இருந்தாலும் நம்ம பொண்ணுங்க சக்தி.."
"நம்ம பொண்ணு இல்ல.. அது செல்வராஜோட பொண்ணு. அந்த ஆளு சும்மாவே சிடு சிடுன்னு இருப்பன். வீனா வம்பு பண்ணாத."
"ம்ம்ம் சரிங்க.. நான் கேக்கல அப்போ.."
****
அன்று மாலை ரயில்வே காலனியில் இருந்த பெருமாள் கடைக்கு சென்றிருந்த போது, சக்திக்கு ஒரு போன் கால் வந்திருந்தது. இவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. சரி, கேட்டு விடுவது என்று காத்துக்கொண்டிருந்தாள்.
போனை வாங்கிய ஷக்தி ஒன்றுமே பேசவில்லை. கண்களில் நீர் ததும்பியது. 'படக்'கென்று துண்டித்துவிட்டு வீட்டை நோக்கி ஓடத்தொடங்கினாள்.
இதை அனைத்தையும் கடையின் மர பெஞ்ச்சில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த சரசு, "யம்மா சக்தி.. கொஞ்சம் நில்லும்மா.."
ஷக்தி நின்றாள். திரும்பவில்லை. அவசர அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டாள். சரசு அருகே சென்றவுடன், "சொல்லுங்கம்மா" என்றாள். கண்களில் ஒட்டிக்கொண்டு இன்னும் கண்ணீர். முகத்தில் சோகம்.
"என்ன கண்ணு? என்ன ஆச்சு? என் கிட்ட சொல்லலாம்ல?", என்று கண்களைப்பார்த்து கேட்க்கையில் ஷக்தி, துவண்டு சரஸ்வதியின் மார்பில் விழுந்து அழத்துவங்கினாள். கார்த்திக் என்று ஒரு பையனை தனக்கு பிடித்திருப்பதாகவும் அவனது பெற்றோர் தன் வீட்டிற்கு வந்தபோது அவனது அப்பாவிற்கும் இவள் அப்பாவிற்கும் நடந்த பிரச்சனைகளை கூறினாள். அதனால் அவர்கள் பிரியப்போகிறார்கள் என்றும் விம்மிக்கொண்டே கூறி முடித்தாள்.
"அட கிருக்குப்புள்ள!! இதுக்குதான் அழுவியா நீயி? உலகத்துல எத்தனையோ பேருக்கு எவ்வளவோ பிரச்சனைங்க வருது.. அதெல்லாம் சமாளிக்க வேண்டாமா? அந்த பையன் நல்ல பையனா?"
"ம்ம்ம்.. "
"அழக்கூடாது.. கண்ண தொடைச்சுக்கோ. இதோ பாரு.. அவன் உன்ன தேடி வருவான். அப்போ அவன விட்டுடாத.. அப்டி பயந்து வராத பையன் தேவை இல்ல.. நீ இப்டி வருத்தபட்ரன்னு தெரியமா அவனுக்கு?"
"ம்ம்.. அவன் தான் போன் பண்ணான்.. ஒரு வார்த்த கூட பேசல.. வள வளன்னு பெசுவான்ம்மா." என்று சொல்லும்போதே மறுபடி அழுதாள்.
இருவரும் அருகில் இருந்த பெஞ்ச்சில் அமர்ந்தார்கள்.
"இதோ பாரு கண்ணு.. நீ அவன மனப்பூர்வமா காதலிக்கரப்போ எவனும் உங்கள பிரிக்க முடியாது. கண்ண தொடைச்சுக்கோ.. அவன்ட பேசு. எல்லாம் செரியா போயிடும். உன் அப்பா கெடக்காரு. எப்போ பாரு வீராப்பா. பொண்ணுக்கு புடிச்சுருக்குன்னு விட்டுக்குடுப்பாரா அத விட்டுட்டு.. நீ அழாத புள்ள..ம்ம்ம்.. இப்போதான் புரியுது என்னடா பொண்ணு கொஞ்சம், கூட சிரிக்குதே இப்போல்லாம்ன்னு நானும் யோசிச்சுட்டே இருந்தேன்.. வா கண்ணு.. படுத்துக்கோ..வா...", என்று தனது மடியில் படுக்க வைத்துக்கொண்டாள் சரசு.
தன் கணவனிடம் இந்த விஷயத்தை சொல்லக்கூடாது என்று தீர்மானித்தாள். 'கோவிச்சுக்குவாரு'..
****
அடுத்த வாரம் ஷக்தி எதோ மெடிக்கல் கேம்ப் என்று கேரளா சென்றாள்.
அதற்கடுத்தவாரம் ஷக்தி வீடு திரும்பி முதல் காரியமாக சரசுவைப்பார்த்து,
"அம்மா.. நீங்க சொன்ன மாதிரி அவன் வந்தான். கேரளாவுக்கே..."
"சொன்னேன் பாத்தியா?? என்ன சொன்னார் மைனரு?"
"என்ன சொல்வான்..ரொம்ப மிஸ் பண்ணானாம். பாக்கணும் போல இருந்துதாம்..வந்துட்டான்." என்று பூரித்தாள்.
"இன்னும் உன்னை புடிச்சுருக்கு தான?"
"என்னம்மா இப்டி கேட்டுடிங்க.. கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்.. சரின்னு சொல்லிட்டான் டக்குன்னு.." என்று சிரித்தாள்.
"நல்ல பசங்க போங்க.. இப்டி சிரிப்ப பாத்து எம்புட்டு நாள் ஆச்சு புள்ள.. உம்ம்ம்ன்னு உக்காராத. உனக்கு அது நல்லாவே இல்ல."
"நீங்க இருக்கிங்களேம்மா" என்று இறுகக் கட்டிக்கொண்டாள்.
"அது சரி.." என்று ஷக்தியின் அணைப்பில் கொஞ்சம் வெட்க்கித்தான் போனாள்.
****
மறுதினம் சரசு, திருப்பதி கடையில் எதோ வாங்கச்சென்றவளின் எதிரில் ஷக்தி அனைவருக்கும் "குட் நைட்" சொல்லிக்கொண்டே வந்தாள். விளையாடிக்கொண்டிருந்த மணல் வீடு இன்ஜினியர், வாக்கிங் ஸ்டிக் தாத்தா, குல்ஃபீ சிறுவன் என்று அவள் வருகையில் சந்தித்த அனைவருக்கும். சரசுவைப்பார்த்ததும் "வெரி குட் நைட்ம்மா" என்று கூறிவிட்டு துள்ளிக்குதித்து ஓடினாள்.
'இம்புட்டு சந்தோஷமா பிள்ளைய பாக்கறத விட்டுட்டு ஏன்தான் இந்த அப்பன்காரங்க நச்சு பண்றாங்களோ' என்று தனக்குள்ளேயே எண்ணிக்கொண்டு, "அண்ணாச்சி, ரெண்டு முருங்கக்கா குடுங்க" என்று வாங்கிசென்றாள்.
****
ஒரு மாதம்..
****
அன்று நடராஜன் வீடு திரும்பிய போது அவனுக்கு காபி தயாராக இல்லை.
"என்னடி ஆச்சு?"
"இன்னைக்கு நிறைய நடந்துடுசுங்க."
" என்ன நடந்துச்சு?"
"அப்புறம்...உங்ககிட்ட.. உங்ககிட்ட.. ஒரு விஷயம் மறைச்சுட்டேன்."
"நீயா?", ஹாஸ்யம். "சொன்னத மறந்துருப்ப.. உன்னால மறைக்க கூட முடியுமா என்ன? எதோ விஷயம் நடந்துதுன்ன .. மறைச்சுட்டேன்னு சொல்ற..என்னதான் நடந்துது?" என்றான்.
"இல்லைங்க.. உங்களுக்கு புடிக்கலன்னு தெரிஞ்சும் நான் சக்தி கிட்ட கேட்டேன். என்ன ஏதுன்னு... பொண்ணு யாரோ ஒரு பையன வீட்டுக்கு தெரியாம கல்யாணம் கட்டிக்குச்சுங்க!"
"என்னடி சொல்ற?"
"ஆமாங்க..அன்னைக்கு நீங்க வேண்டாம்ன்னு சொன்னாலும் அந்த புள்ளைட்ட கேட்டேன்.. என்னம்மா எதோ சரி இலையே நீன்னு.. அப்போதான் எல்லாம் சொல்லிச்சு.. இன்னைக்கு நம்ம பூரணிக்கு பையன் பாக்கறோம் வாம்மான்னு கூப்ட்டாங்க எதிர்த்த வீட்டு சரோஜாக்கா.. பையன் நல்லா வெள்ள தோலும் அதுவுமா நல்லாத்தான் இருந்தான். எல்லாம் கூடி வர்ற நேரத்துல, அந்த ரகுப்பயலோட அப்பா..."
"யாருடி ரகு?"
"அதாங்க..பூரணிய பாக்க வந்தானே.. அவன். அவனோட அப்பா, வாய வெச்சுகிட்டு சும்மா இல்லாம, என் ரெண்டாவது மகனும் டாக்டர் படிக்கிறான்.. உங்க பொண்ண குடுக்க சம்மதமான்னு கேக்க, போட்டாளே பாருங்க. இவ காதலிக்கிற பண்ற பையனோட வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிருக்கா!"
"அடக்கொடுமையே!"
"எனக்கு என்ன சொல்றது என்ன பண்றதுன்னே தெரியல.. அவ அப்பா அவள அடி அடின்னு அடிக்கிறாரு. பாக்க வந்தத பையனோட அப்பாவும் வேண்டாம்ன்னு போயிட்டாரு... பூரணிய பாக்கவும் பாவமா இருக்கு.. அவளுக்கு தெரியும் போல."
"அக்காகாரிக்கு எங்க போச்சு புத்தி?"
"நீங்க சும்மா இருங்க! சக்தி அழகுபெத்த பொண்ணு.. அவ தப்பு முடிவே எடுக்க மாட்டா. இவ அப்பா இப்படி இருக்கறப்போ இவ என்ன பண்ணுவா?"
"என்னவோ போ.. நீ சக்திய விட்டுக்குடுக்க மாட்ட.. இப்போ எங்க இருக்கா? நீ ஒன்னும் தலையிடலையே!?"
"நான் ஒண்ணுமே பேசலைங்க.. அவங்க சண்டை போட ஆரம்பிச்சொன்னே நான் வந்துட்டேன். என்னால பாக்க முடியல..எனக்கும் முன்னமே தெரியுமா, அதுனால எனக்கு குத்த உணர்ச்சியா இருந்துது.."
"உன்ன யாருடி அவங்க வீட்டு சமாச்சாரத்துல மூக்க நோளைக்க சொன்னது? நீ பேசாம போயிருக்கலாம்ல? உன்ன எவன் போய் போய் கேக்க சொன்னது?! வர வர என் பேச்சுக்கு மரியாதையே இல்ல.. இப்போ அவ அப்பா என்கிட்டே வந்து கேட்டா நான் என்ன சொல்றது? 'ஆமா சார் தெரியும்,உங்க மேல தான் தப்பு'ன்னா?? உன்னோட பெரிய ரோதனடி"
"நம்ம பொண்ணு இப்டி எதுனா பண்ணினா பேசாம இருந்துருவின்களா?!" என்றாள் சற்றே பொறுமை இழந்து. அவளுக்கு ஷக்தி செய்த செயல், அவள் அப்பா அதற்க்கு அடித்தது,பூரணியுடைய சம்பந்தம் நின்று போனது - எல்லாம் சேர்ந்தது கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தாள்.
நடராஜனுக்கு விருட்டென்று கோபம் வந்த்தது... ஒன்றும் பேசாமல் எழுந்து சென்றான். இரவு வெகு நேரம் கழித்தே திரும்பினான்.
****
அடுத்த நாள் இன்னும் ரகளை ஓயாமல் இருந்தது. சக்தியின் அப்பா அவளை வீட்டிர்ற்குள் அனுமதிக்கவில்லை. முந்தின இரவு நடராஜன் வரும் வரைக்கும் அவர்கள் அவளை கசக்கிக்கொண்டிருந்தார்கள். யாரும் தூங்கவில்லை.
அதிகாலை சரசு வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டாள். ஷக்தி அழுதுகொண்டிருந்தாள். அவள் அப்பா திட்டிக்கொண்டும், அவள் அம்மா திட்டி/அழுதுகொண்டும் இருந்தார்கள். சரசு அவர்கள் வீட்டின் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள்..
ஷக்தி வீட்டை விட்டு கிளம்புவதற்கு ஆயத்தமாகிறாள் போலும். பெட்டியில் தனது துணிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த சத்தம் கேட்டது. அவ்வப்போது விசும்பிக்கொண்டே தன் அப்பாவிடம் வாக்குவாதம்.
தூரத்தில் கெட்ட சண்டை சத்தம், அவசர அவரசமாக கதவின் பக்கம் வந்து திறந்தது ...
கண்கள் வீங்கி முகம் சிவந்து ஷக்தி வெளியில் வந்தாள். கதவை உடனே மூடினார் செல்வராஜ். எதிரே நின்றிருந்த சரசுவைப்பார்த்தவுடன், கட்டிக்கொண்டாள்.
"அழாதம்மா..அழாத.. எல்லாம் சரியா போய்டும்..காலம்தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்.." என்று அவள் கூறிக்கொண்டிருக்கும்போதே, "ஷக்தி! எங்க இருக்க?!" என்று கீழே இருந்து குரல் கேட்டது. இருவரும் எட்டிப்பார்த்தார்கள். கீழே அவள் அப்பா தூக்கி எறிந்த பெட்டியையும் துணியையும் சரிபடுத்திக்கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.
"இவருதான் அவரா?" என்றால் சரசு.
மெளனமாக தலை அசைத்தாள் ஷக்தி.
"பையன் நல்லா ஜம்முன்னு இருக்கான்..." என்று சரசு சொன்னதும், கலவரத்தினூடே ஓரமாக புன்னகை எட்டிப்பார்த்து உடனே அடங்கியது.
"வரேன்ம்மா.."
"இரு..", என்று உள்ளே சென்று ஐந்நூறு ரூபாய் எடுத்துவந்து, "நல்லா இரும்மா.. என்னவா இருந்தாலும் நாங்க இருக்கோம். சரியா?"
தலை அசைத்தாள்.. இருவரும் கீழே இறங்கினார்கள். கார்த்திக் ஒரு ஆட்டோவில் வந்திருந்தான். சிகப்புச்சட்டை, கருப்புக்கண்ணாடி, தெத்துப்பல், சிவப்பு. இருவரும் அவர்கள் வாழ்க்கையை தொடங்க மீட்டருக்கு மேலே பத்து ரூபாய் குடுத்து கிளம்பினார்கள்.
*******
அன்றிலிருந்து சரசு, தினமும் ஷக்தியைப்பார்க்காமல் எதோ ஒன்றை இழந்தது போல் உணர்ந்தாள்.
"என்னங்க சக்திய பத்தி எதுனா தெரிசுக்கணும் போல இருக்கு. அந்த பொண்ணு எண்ண பண்றா? எங்க இருக்கா? ஒன்னுமே தெரியலை..."
"விடேன்டி.. அவளை பெத்தவங்களே தண்ணி தெளிச்சு விட்டாங்க.. எல்லாம் சரியா போய்டும்.." என்று நடராஜன் சொல்வதை அவள் பொருட்படுத்தவில்லை.
"...அந்த பையன் அவளை நல்லா வசுருக்கானான்னு தெரியலையேங்க.. படிப்புக்கு காசு வேணுமா? அந்த பையன் வீட்ல எண்ண சொன்னங்க? சேத்துக்கிட்டாங்களா? அவன் என்ன வேலை பாக்கறான்? அவங்க எங்க இருக்காங்க? ஒன்னுமே தெரியலையே! எப்டித்தான் பெத்த மனசு கல்லா கெடக்கோ?! நமக்கே இப்டி இருக்கே!"
"இதோ பாரு.. உனக்கு தெரியவரும். சக்தியே வருவா. கொஞ்சம் பொறுமையா இரு. உனக்கே இவ்வளவு பதபதைப்பு இருக்கறப்போ அவங்களுக்கு இருக்காதா? வெளியில காமிச்சுக்க மாட்டங்க அவ்வளவுதான்.."
"என்னமோ போங்க. நாம அந்த பையனோட அப்பாவ போய் பாத்து பேசுவோமா?"
"என்ன ஒளர்ற?"
"உங்களுக்கு நான் என்னைக்கு தெளிவா பேசின மாதிரி தெரிஞ்சுருக்கு.."
"இவ்வளவு பதட்டப்படாத. கொஞ்சம் நிதானமா யோசி. இப்போ நான் வேலைக்கு போயிட்டு வரேன். வீட்ல தனியா இருக்காத. வேணும்னா மதியம் சினிமா போயிட்டு வா. இதப்பத்தியே யோசிச்சுட்டு இருக்காத."
"ம்ம்ம்.... என்ன சமைச்சு வைக்கட்டும்?"
சிரித்துக்கொண்டே... "போயிட்டு வரேன்..."
"ம்ம்ம்..."
===================
மூன்று மாதங்கள்...
===================
ஷக்தியின் அப்பா மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். ஷக்தியின் அம்மாவும் அக்காவும் வீடும் மருத்துவமனையுமாக அல்லாடிக்கொண்டிருந்தார்கள். சரசு முடிந்த அளவு உதவினாள். மருத்துவமனைக்கு சாப்பாடு கட்டிக்கொடுத்தாள். யாரும் இல்லாத நேரம் வீட்டைப்பார்த்துக்கொண்டாள். பூரணி அலுவலகம் செல்லும்போது டிபன் செய்து தந்தாள். அவ்வப்போது ஷக்தியைப்பற்றிக்கேட்டாள். இருவருக்கும் தெரியவில்லை.
ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருக்கையில், ஷக்தியின் அம்மா, சுவற்றில் மாட்டியிருந்த ஷக்தி,செல்வராஜின் புகைப்படத்தை பார்த்தவுடன் அடக்கி வைத்திருந்த சோகம் வெடித்து அழத்துவங்கினாள்.
"என்னம்மா நீங்க மனசு ஒடைஞ்சா எப்படி?"
"நீங்களே சொல்லுங்க.. ஆசை ஆசையா பொண்ண டாக்டருக்கு படிக்க வச்சாரு. இப்போ இவரு இப்டி படுத்துக்கேடக்கரப்போ அவ எங்கங்க போனா? அவள பத்தி பேசாத நாளே இல்லைங்க..."
"அழாதிங்கம்மா.. நீங்க இப்போ அழக்கூடாது. கொஞ்சம் தைரியமா இருங்க.."
"என்னனவோ சொல்றாங்கங்க.. ஸ்கான்.. டெஸ்ட்.. எல்லாம். அவரு நாளுக்கு நாள் தளண்டுட்டே வராருங்க.. நமக்கு என்ன தெரியும்.. டாக்டருக்கா படிச்சுருக்கோம்?"
"சக்திக்கு தெரியுமாம்மா? தெரிஞ்சா பாக்க வராம இருக்காது."
"அவளுக்கு தெரியாதுங்க.. அவள பாத்தா இவரு சரியா போய்டுவாரு. அவரு மனசு பூரா அவள பாக்கனும்னு தான் இருக்கு."
"என்னங்க நீங்க.. இம்புட்டு பிரியம் வச்சுட்டு அவள தொரத்திட்டிங்க.. தப்புத்தான். அதுக்குன்னு இவ்வளவு பெரிய தண்டனையா? அவள ஒரு எட்டு பாத்து விஷயத்த சொல்லிட்டு வந்துடலாம்ல?"
"அவ வர மாட்டாங்க.."
"உங்க பொண்ண பத்தி உங்களுக்கே நான் சொல்லனுமா? அப்பாவுக்கு ஒண்ணுன்னா தலைகீழ நிப்பாங்க. நீங்க ஒருக்க சொல்லிப்பாருங்க. வருவா..நான் யாருங்க. எதிர்த்த வீட்டுக்காரி. என் மேலயே அவ எவ்வளவு பாசமா இருக்கா? அப்பாவ பாக்க கண்டிப்பா வருவாங்க."
அடுத்த நாள் ஷக்தியை, பூரணியும் சரோஜாவும் மெட்ரோவில் பார்த்து பேசி இருக்கிறார்கள். அவள் வருவதாகக் கூறினார்கள். சரசுவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஷக்தி வரவில்லை.
அடுத்த நாள் அவள் அப்பா இறந்துபோனார்.
============
அடுத்த நாள்
============
"சக்திக்கு என்ன நெஞ்சழுத்தம் பாத்திங்களா? என்னங்க இப்படி மாறிடுச்சு பொண்ணு?"
"அவசரப்பட்டு ஒரு முடிவுக்கும் வராத. அவளுக்கு என்ன வேலையோ. நாளைக்கு வரலாம்னு நேனைச்சுருப்பா.
"என்னவா இருக்கட்டும்...பெத்த அப்பாவுக்கு உடம்பு சரி இல்லன்னா வர மாட்டாளா மகராசி? அப்படி என்ன வீம்பு? அப்படி என்ன அந்த புருஷன்காரன் மயக்கி வச்சுருக்கான்? நேத்தி வந்தாளே. நல்லா வேலை எழவுக்காவது வந்தா. அந்த அம்மா ஒத்தைல என்ன பாடு படுது. இவ அக்கா ஒண்டியா இப்போ அம்மாவ பாத்துக்கணும். அவ அம்மா கோவத்துல அப்படித்தான் பேசுவாங்க.. இவ இல்ல பொறுத்துக்கணும்? அவசர அவசரமா வளந்தா போதுமா. பெத்தவங்களுக்கு வயசாகுதுன்னு தெரிய வேண்டாமா? இப்படி மதிக்காம இருந்தா எப்படி நல்லா இருப்பா? அவ்வளவு என்ன அகங்காரம்?"
நடராஜன் ஒன்றும் பேசவில்லை.
"என்னங்க ஒன்னும் சொல்ல மட்டேங்கரிங்க?"
"என்ன சொல்லனும்னு எதிர்பாக்கற?"
"நான் சொல்றதுல எதுவும் தப்பு இருக்காங்க? அவ அம்மா போன்னு சொன்னா போயிடுவாளா? அப்பாவைத்தான் பாக்க வரல. அம்மாவை தேத்தாலாம்ல?"
"சரசு... நீ சொல்றதெல்லாம் சரிதான். அதுக்கு நாம என்ன பண்ண முடியும்?"
"நாம ஒன்னும் பண்ண முடியாதுங்க. நம்ம சக்தி ஏன் இப்படி மாறிட்டா?"
"பாரு... நீ ஏன் அவசர அவசரமா வார்த்தைய விடற? அவள் நல்லா பொண்ணுதான்.. அவளோட ஞாயம் நமக்கு புரியாது. அவள்ட்ட பேசாமலே எப்படி நீ முடிவுக்கு வரலாம் மாறிட்டான்னு?"
"மாறிட்டாங்க.. எனக்கு என்ன வந்துது...அவ என்ன நம்ம பொண்ணா?", என்று விசும்பினாள்.
நடராஜன், செய்வதறியாமல், வேகுநாட்களுக்குப்பிறகு சரஸ்வதியை அணைத்துக்கொண்டார். "ஏன் அழற நீ? நம்ம பொண்ணாத்தான் அவள பாக்கறோம். அவளும் பிரியமாத்தான் இருக்கா.. புரியுதா? அவளோட வாழ்க்கைலயே நிறையா பிரச்சனைகள் இருக்கு. அதெல்லாம் முடிஞ்ச உடனே, உன்கிட்ட தான் வருவா. அவ நமக்கு பிறக்கலைன்னாலும் அவ நம்ம பொண்ணுதான்.."
"தெரியலைங்க.. அவ, அம்மா அப்பாவையே மறந்துட்டாளே. நம்மல்லாம் எந்த மூலைக்கு?"
கண்களைத்துடைத்தவாறு சமைலறைக்குள் சென்றாள். பெண்களுக்கு சமையலறையில் நிம்மதி,சந்தோஷம்,துணை என்று எல்லாமே கிடப்பது எப்படி என்று தெரியவில்லை.
நடராஜன் சொல்வதரியாமல் நின்றார். 'இவளுக்கு எப்படி புரிய வைப்பது? சக்தி நம் குழந்தை இல்லை. நம் ஜெயா நம்மிடம் வர மாட்டாள். அவளே நம்மிடம் இருந்தாலும் நாம் அவளிடம் ஒரு வயதிற்கு மேல் உரிமை எடுத்துக்கொள்ள கூடாது. சக்தி என்னதான் பிரியமான பெண்ணாக இருந்தாலும் அவள் மீது நீ அளவு கடந்து அன்பைப்போழிகிறாய் . சரசு.. அனைவரையும் அவ்வளவு எளிதாக நம்பாதே. நம்பிக்கை ஏமாற்றம் தரும். உனக்கு நான். எனக்கு நீ. நமக்கு ஜெயா. இப்போது இல்லையென்றாலும் ஜெயா. உனக்கு ஏன் புரியவில்லை? துவண்டுவிடுவாய். வேண்டாம். விடு! சக்திக்கு இப்போது அவள் கணவன் இருக்கிறான். அவனோடு தான் இருக்கப்போகிறாள். அவள் நினைவில் நீ இருக்கிறாயா இல்லையா என்று கூட தெரியாது. அவளைப்பொறுத்த வரை நீ எதிர்த்த வீட்டில் இருக்கும் ஒரு நல்ல பெண்மணி. அம்மா அல்ல. புரிகிறதா? ஆற்றில் போட்டாலும்...' என்று .சொல்லத்தெம்பில்லை; நினைத்துக்கொண்டிருக்கும் போதே சரசு வெளியே வந்தாள்.
"நான் ஒரு எட்டு கோவிலுக்கு போயிட்டு வந்துடரேங்க... மனசு பாரமா இருக்கு.." என்று கிளம்பினாள்.
===============
ஓரிரு...
===============
ஷக்தியின் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கை திரும்ப ஆரம்பித்தது. சரசுவிற்கு ஷக்தி மேல் இருந்த கோவம் மறுநாளே தனியத்துவங்கியது.
"அவளுக்கு எண்ண சோலியோ என்னவோ... பொண்ணு அழுதுட்டே தாங்க போச்சு.. பாவம். எண்ண பண்ணுதோ...". நடராஜன் சிரித்துக்கொண்டார்.
"பூரணி இப்போலாம் ரொம்ப போருப்பாகிட்டங்க.. வீட்டு கணக்கு எல்லாமே அவ தான் பதுக்கரா.. அந்த புள்ளைக்கு மட்டும் அந்த ரகுவோட கல்யாணம் அகிருந்துதுன்னா நல்லா இருந்துருக்கும் இல்ல?"
===============
மாதங்...
===============
.................
"என்னங்க... அன்னைக்கு சொல்லிடு இருந்தேன்ல.. அந்த ரகு பையன் இன்னைக்கு வந்தாங்க. பூரணிய பாக்க.."
"பூரணி அம்மாவும் இவனும் நல்லா பேசிட்டு இருந்தாங்க... நான் போகல ஆனாலும் கேட்டுது. நல்லா பையன் தான். ஆனா அவன் அப்பா இப்போ பிரெச்சனை பண்றாராம். ஆனா சரி பண்ணிடறேன்னு சொன்னான். இது மட்டும் அமைஞ்சதுன்னா ரொம்ப நல்லா இருக்கும்.. கடவுளே."
"எப்படி இப்போ த்டீர்னு வந்தான் அவன்?" என்றார் நடராஜன்
"நம்ம பூரணிக்கு என்னங்க கொறை.. அதான் கேரங்கிட்டு வந்துட்டான்." என்று பெருமிதப்பட்டாள்
............
"சக்திக்கு இந்த விஷயத்த சொன்னாங்களா?", என்று முதன் முறையாக ஷக்தியைப்பற்றி திடீரென்று தனாகக்கேட்டார் நடராஜன்.
"தெரியலைங்க."
"இன்னும் ஏன் வீண் ஜம்பம்..சுமூகமா போகலாம்ல?"
.............
"என்ன கேட்டா சக்தியோட புருஷன் தான் வீம்பு பண்றான்னு தோணுது. அவன் வந்து ஒரு வார்த்த பேசிருக்கலாமே? எல்லாம் முடிஞ்சுருக்கும்.. இல்லையாங்க?"
"யாருக்குடி தெரியும்...ம்ம் பாப்போம்.. என்னதான் நடக்குதுன்னு.."
===============
கள்...
===============
நடராஜனை அன்று வெகுநாட்கள் கழித்து அலுவலக தொலைபேசி அழந்த்தது.
"ஹலோ"
"ஹலோ..என்னங்க, நம்ம சக்திக்கு ரோட்ல அடி பட்ருச்சாம்.. பயங்கர ரத்தமாங்க.."
"என்னடி சொல்ற?"
"ஆமாங்க.. நம்ம அரசாஸ்பத்திரிலதான் இருக்கலாம். நீங்க ஒரு எட்டு பாத்துருங்க போய்... நான் வெளில போயிருந்தேங்க..."
"இருடி இரு.. நான் வேலைல இருக்கேன்.."
அவன் சொல்வதை மதிக்காமல், ".. அப்போ இவங்களுக்கு போன் வந்துருக்கு.. பக்கத்து வீட்ல சொல்லிடு போயிருக்காங்க .. என்னாச்சோ ஏதாச்சோ தெரியலைங்க.. நீங்க ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுங்க.. நான் பக்கத்து வீட்டுக்கு வந்து பேசிட்டு இருக்கேன்.. நீங்க அங்க போய் பாத்துருங்க.. நான் கோவிலுக்கு போயிடு ஒரு வேண்டுதல் பண்ணிட்டு வர்றேன்.."
"கொஞ்சம் இரு சரசு.. எனக்கு வேலை..."
"நீங்க அங்க போய் சேந்ததும் நம்ம அன்பு .."
"இருக்கும்மா... அவளுக்கு..."
"..வீட்டுக்கு போன் பண்ணி சொல்லுங்க நான் ஒரு வேளை இங்க.."
"ஒன்னும்.."
"..இருந்தா பேசறேன்.... போயிருங்க...வரேன்.." .. பட்...
"..ஆகிருக்காது.." என்று துண்டிக்கப்பட்ட தொலைபேசியை காதில் இருந்து எடுத்து ஒரு வெற்றுப்பார்வை பார்த்து, பின், வைத்தான்.
...........
அரசு மருத்துவமனை.
நடராஜனுக்கு எதோ ஒட்டவில்லை. அவன் ஏன் அங்கு வந்தான்? எங்கே, யாரிடம் கேட்பது? வாசலிலேயே கொஞ்ச நேரம் நின்றான். நூற்றுக்கணக்கில் மக்கள். துக்கம் இழந்த கண்கள். மஞ்சள் பை உறவுக்காரர்கள். உள்ளே ஹார்லிக்ஸ் அல்லது ஆரஞ்சு பழங்கள் . டிபன் கேரியர் மனைவிமார்கள். ஒரு கண் மூடிய தாத்தா/பாட்டிகள். பொதுவாக கொஞ்சம் மருந்தும் சாக்கடையும் பினாயிலும் கலந்த காற்று. அழுக்கு.
இதில் யாரைப்பார்ப்பது? எப்படி ஷக்தியை கண்டுபிடிப்பது?
சிப்பந்தி ஒருவரிடம் கேட்டதில் "நேர போயி பீச்சாங்கையாண்ட திரும்பினேன்னா வெள்ளை குல்லா பொட்டுனு ஒரு அம்மா உக்கானுருக்கும். அதாண்ட கேளு". என்றார்.
வெள்ளை குல்லா பெண்மணி சொன்ன இடத்தில் போய் பார்த்தார் நடராசன். 'அது சக்தியின் அம்மாதானா?' அவளையும் பூரணியையும் நன்றாக தெரியும் அவருக்கு. அவர்கள் அம்மாவை அவ்வளவாக பழக்கம் இல்லை.
அருகில் வாட்ட சாட்டமாக ஒரு இளைஞன் இருந்தான். இவன்தான் சக்தியின் கணவனா? போய் கேட்கவும் தயக்கமாக இருந்தது. அருகே மெதுவாக சென்றார்.
அப்போது நல்லவேளையாக பூரணி வந்தாள். இவரை கவனிக்கவில்லை. நேரே அம்மாவிடம் சென்று ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் கண்ணாடி வழியே உள்ளே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
தனது பயத்தையும் தயக்கத்தையும் மீறி அவர் கார்த்திக்கிடம் சென்று ,"தம்பி நீங்க தான் சக்திய கட்டிகிட்டவரா?", என்றார்
"ஆமாம்"
"கவலை படாதிங்க தம்பி.. சக்தி நல்ல பொண்ணு. ஒன்னும் ஆகாது..", அவனது தோளில் கை வைத்து ஆறுதல் சொன்னார்.
"சார் யார் சார் நீங்க? எனக்கு தெரியும் எல்லாம்.. நேரம் கெட்ட நேரத்துல.." என்று அவரது கையை சிலுப்பிக்கொண்டு உதறி, விருட்டென்று வெளியே சென்றான்.
அவர் பூரணியைப்பார்த்தார். பூரணி,"ஒரு பத்து நிமிஷம் இருங்க அங்கிள் இதோ வரேன்" என்று தனது அம்மாவை சமாதானப்படுத்த சென்றாள்.
கவலையும் நிராகரிப்பும் சேர்ந்து எதோ செய்தது நடராஜனை. கதவின் வழி ஷக்தியைப்பார்த்தார். தலையில் கட்டு போட்டிருந்தார்கள். மூக்கில் கையில் எல்லாம் எதோ குழாய் வைத்திருந்தார்கள். பார்க்க முடியவில்லை.
அங்கிருந்து வெளியே வந்துவிட்டார். 'அவள சொல்லணும்.. எதோ ரொம்ப ஆடினாளே.. சக்தி சக்தின்னு.. இப்போ நம்மள யாருமே மதிக்கல. அவங்கவங்களுக்கு அவங்க அவங்க வாழ்கை.இது ஏண்டி உனக்கு புரியலை? அடுத்தவன் மேல எதுக்கு அவ்வளவு அக்கறை? ', என்று சரசு விடம் மானசீகமாக பேசிக்கொண்டே ஒரு தொலைபேசி பூத்தில் இருந்து அவரது பக்கத்து வீட்டு அன்புவை அழைத்தார்.
"சொல்லுங்கண்ணே ", அன்பு.
"சரசு வந்தாளாப்பா.."
"அண்ணி வந்துச்சு.. சக்தி எப்டி இருக்குண்ணே?"
"கொஞ்சம் மோசமாத்தான் அடி பட்டிருக்கு. சரசுவை கூப்பிடேன்"
"அண்ணி கேளம்பிருச்சே! எதோ கோவில்ல பூச பண்ணி துண்நூருலாம் கொண்டு வருது."
"ஓ.. சரிப்பா."
"ஏதும் பிரச்சனையாண்ணே?"
"இல்லப்பா வரட்டும்."
தொலைபேசியை துண்டித்துவிட்டு "எப்போ சரசு திருந்தப்போற?" என்று காற்றோடு பேசினார்.
...................
"எங்கம்மா போகணும்?"
"ஆஸ்பத்திரி."
"ரெண்டம்பது"
கைகளில் பிரசாதத்தை இறுக பிடித்துக்கொண்டு வெற்றுப்பார்வையோடு - சரசு. பேருந்து அரசு மருத்துவமனையை நோக்கி சென்றது.
********
படம் முடிந்து அனைவரும் மகிழ்ச்சியாக திரும்பினார்கள். 2000 வருடத்தின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.விகடனில் 44 மார்க்.
*******
"என்னங்க.. சக்தி கொழந்தைக்கு இன்னைக்கு காது குத்தாம். போயிட்டு வந்துடலாமா?"
====================================================================