Friday, March 9, 2012

கவிதை: பெருங்கருணை


ஏற்றுமதி ஜவுளி நிறுவனத்தில்
பிசிறு நறுக்கி பட்டன் கட்டும்
பிஞ்சுகளைக் கணக்கிட்டு
உரிமையாளரை வார்த்தையால்
கத்தரித்து அபராதம் விழுந்தது

பள்ளி செல்லும் வயதில்
புத்தகக் கட்டுகளை நிரப்பி
தள்ளுவண்டியை இழுத்துவரும்
சிறார்களைக் கண்டு
பைண்டரை துளைத்துத் தைத்தார்


உணவு விடுதியில்
எச்சில் இலை எடுத்து
குவளை கழுவும்
பிள்ளைகளை நிறுத்தி
முதலாளியின் முகம் தீய்த்தது
அவர் நடவடிக்கை

தீப்பெட்டி ஆலைக்குள்
லேபிள் ஒட்டும் சிறுமிகளை எண்ணி
நெருப்பாய் சுட்டது அவர் குரல்

விரைந்து விரைந்து துரத்தி
வீடு வந்தவரின் கார்
ஹாரன் ஒலி எழுப்ப..
சற்று தாமதமாக
வாயிற்கதவு திறந்த சிறுவனை
'எங்கடா போன' என
ஓங்கி அறைந்தார்
குழந்தைத் தொழிலாளர் தடுப்பு அதிகாரி

'ஜிம்மிக்கு பந்து எடுத்துப் போட்டேன்'னு
புதைந்தது வார்த்தை
தொண்டைக்குள்.

- சிவராஜ்
படம்: கே.ராஜசேகரன்
 

1 comment: