Showing posts with label vikatan. Show all posts
Showing posts with label vikatan. Show all posts

Friday, March 9, 2012

கவிதை: பெருங்கருணை


ஏற்றுமதி ஜவுளி நிறுவனத்தில்
பிசிறு நறுக்கி பட்டன் கட்டும்
பிஞ்சுகளைக் கணக்கிட்டு
உரிமையாளரை வார்த்தையால்
கத்தரித்து அபராதம் விழுந்தது

பள்ளி செல்லும் வயதில்
புத்தகக் கட்டுகளை நிரப்பி
தள்ளுவண்டியை இழுத்துவரும்
சிறார்களைக் கண்டு
பைண்டரை துளைத்துத் தைத்தார்


உணவு விடுதியில்
எச்சில் இலை எடுத்து
குவளை கழுவும்
பிள்ளைகளை நிறுத்தி
முதலாளியின் முகம் தீய்த்தது
அவர் நடவடிக்கை

தீப்பெட்டி ஆலைக்குள்
லேபிள் ஒட்டும் சிறுமிகளை எண்ணி
நெருப்பாய் சுட்டது அவர் குரல்

விரைந்து விரைந்து துரத்தி
வீடு வந்தவரின் கார்
ஹாரன் ஒலி எழுப்ப..
சற்று தாமதமாக
வாயிற்கதவு திறந்த சிறுவனை
'எங்கடா போன' என
ஓங்கி அறைந்தார்
குழந்தைத் தொழிலாளர் தடுப்பு அதிகாரி

'ஜிம்மிக்கு பந்து எடுத்துப் போட்டேன்'னு
புதைந்தது வார்த்தை
தொண்டைக்குள்.

- சிவராஜ்
படம்: கே.ராஜசேகரன்
 

Wednesday, January 18, 2012

மழை வகை - Vikatan Kavithai


நேற்று பெய்த மழை
ஸ்ருதியினுடையது.
'தண்ணி நூல்’ என்று
பெயர் வைத்திருந்தாள்.

இன்றைய மழை
அமுதா பாப்பாவினுடையது.
'டம் டம்’ என்பது
அதன் பெயர்.

நாளைய மழைக்கு
'ரெயின்’ எனப் பெயர்வைத்துக்
காத்திருக்கிறான்
டிச்சாங்கா எனப்படும்
த்ரிஷாங்கன்.

காலங்காலமாக
கனகோடி நூற்றாண்டாக
வையத்தை வாழ்விக்க
பெய்யெனப் பெய்யும்
இந்தப் பெருமழை
புன்னகையோடு
பிள்ளைகள் வைக்கும்
பெயருக்காகவும்
பெய்யுமோ!

- ஸந்த்யா ஸ்வரூபன்