(இந்தத்தளத்தில் இனி மாதம் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று எண்ணி இருந்தேன். அதை ஒரு தொடராக அமைத்தால் என்ன என்று தோன்றியது. இதோ - முதல் பதிவு. பரப்பார்வை - 1 )
சில நாட்களுக்கு முன்பு எனது 'ப்ளாக்' பதிவு ஒன்றில் உங்கள் கருத்துக்களை வெளியே சொல்லியே தீர வேண்டிய அவசியம் இல்லை என்று எழுதி இருந்தேன். அதை இப்போது நானே மீறுகிறேன்.
நான் இது வரையில் யாரிடமும் எப்போதும் எனது அரசியல் பார்வைகளை பகிர்ந்து கொண்டதில்லை. காரணம், இங்கு அரசியல் என்பது - கட்சிகளையும், தலைவர்களையும் பற்றி பேசுவதாக மட்டுமே இருக்கிறது. அரசியல் என்பது அது மட்டும் அல்ல. எனக்கு அரசியல் வாதிகள் மீதோ, கட்சிகளின் மீதோ என்றைக்கும் நம்பிக்கை இருந்ததில்லை. இப்போதும் அப்படித்தான். ஒன்றன் மீதான அவநம்பிக்கையை; அதை நம்புகிறவர்களிடமோ, அதில் ஆதாயம் தேடுபவர்களிடமோ, சொல்லிப்புரியவைக்க, அதீத பொறுமை வேண்டும். அவநம்பிக்கையே ஒரு விதத்தில் நம்பிக்கைதானே? நம்பிக்கை சார்ந்த வாதங்களில், வாதி, பிரதிவாதி இருவரும் சார்பற்ற நிலையில் இருந்து வாதம் செய்வது அரிது. ஆகையால் நான் அரசியல் பெரும்பாலும் பேசுவதில்லை.
ஆனால் இப்போது பேச வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றைய twitter-உம், facebook-உம் அரசியலை நமக்கு மிக அருகில் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இவ்வளவு அருகில் நடக்கும் நாடகங்களை பார்த்தும், பலர் தங்களது தளத்தில் இருந்து தளராமல் இருப்பதுதான் - என்னை இந்தப்பதிவை எழுதத் தூண்டுகிறது.
இது அனைத்துக்கட்சிகளுக்கும், போர் வரும் வரை காத்திருப்பவர்களுக்கும் எதிரான பதிவே. யார் மனதையும் "தனித்து"ப் புண் படுத்தும் நோக்கம் இல்லை.
======= நாள் 12/04/2018 =====
காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடு தெளிவாகவேத் தெரிகிறது. எத்தனைக் கட்சிகள், எத்தனை அமைப்புகள் எத்தனை விதமாகப் போராடினாலும் செவி சாய்ப்பதாக இல்லை. திட்டவட்டமாக இது அரசியல். கர்நாடகத் தேர்தலை வைத்து அதிகாரப் போக்குடன் நடத்தப்படும் அரசியல். கீழே இருக்கும் இந்திய அரசியல் வரைபடத்தைப் பார்த்தால் அவர்களது நோக்கம் தெளிவாக புரிந்துவிடும்.
"வாழ்க்கையும் எழுத்தும்" என்ற புத்தகத்தில், என் வாத்தியார் சுஜாதா அன்றே சொன்னார் - கர்நாடகம், தமிழகம் இரண்டிலும் ஒரே கட்சி ஆச்சிக்கு வந்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று. அதனால் இது கர்நாடகத்தை மட்டும் குறி வைத்து நகர்த்தப்படும் அரசியல் காய் அல்ல. "நாங்கள் இல்லை என்றால் நீங்கள் பிழைக்கவே முடியாது" என்று சூசகமாக நமக்கு சொல்லும் பிஜேபி-யின் தந்திரம்.தமிழகத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப பிஜேபி-யும் (அதிகார பலத்துடன்) வருகிறார்கள்.
"சரி வரட்டுமே! இங்கே அ. தி. மு. க-வும் சரி இல்லை.. தி.மு.க-வும் சரி இல்லை - புதுசா அவங்க வந்தாதான் என்ன?" என்று யோசிக்க முடியவில்லை. அவர்களது வலது சாரிக் கொள்கைகளும், மதவாதத் தத்துவங்களும் நம்மை பீதி அடையச் செய்கின்றன. அது தமிழ்நாட்டிற்குச் சரிப்பட்டு வராது. இங்கே சமீபமாகத்தான் சாதிகளால் பிரிந்திருப்பதை ஓரளவு சரி செய்து இருக்கிறோம். இவர்கள் வந்தால், அது அனைத்தும் வீணாகி, அதற்கு மேல் மதவாதமும் தலை விரிக்கத் தொடங்கும்.
வாட மாநிலங்களில் பி.ஜெ.பி. கையில் எடுத்த "divide and conquer" (இந்து vs முஸ்லிம்) தமிழ் நாட்டில் அவ்வளவு சுலபமாக செல்லுபடி அக வில்லை. அது செல்லுபடி ஆகத்தேவையான அவர்களது "ஹிந்துத்வா" கொள்கையும் இங்கு வேகவில்லை. தமிழ் நாட்டில் 90 விழுக்காடு கடவுளை நம்புகிறவர்கள். ஆனால் கடவுள் இல்லை என்று சொன்ன "பெரியாரை" அவமதித்தால், அதில் 89 விழுக்காடு மக்களுக்கு கோவம் வருகிறது. இந்தப் புதிர் அவர்களுக்கு விளங்கவில்லை. விளங்காது. காரணம், பெரியாரை கடவுள் மறுப்புக்காக மட்டும் மக்கள் நேசிக்க வில்லை.
நடிகர் விஜய்-யை ஜோசப் விஜய் என்றார்கள், ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டதற்கு கடவுளை நம்பாததே காரணம் என்றார்கள், ஆண்டாளுக்கு கொந்தளித்தார்கள் (வேறொருவரின் மேற்க்கோளை கூறியதற்கா இத்தனைக் கூச்சல்?), நியூட்ரினோ, நெடுவாசல், வாடிவாசல், என்று 'நீட்'டி முழக்கினாரகள், விவசாயிகளின் நிர்வாணப் போராட்டத்திற்குக் கூட செவி சாய்க்க மறுத்தார்கள்... கடைசியாக இது காவேரி மேலாண்மையில் வந்து நிற்கிறது. இவை அனைத்தும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் அரங்கேறியவை. பெரும்பாலும் ஜேஜே-வின் மறைவிற்குப்பிறகு. 'மாநில அரசால் உங்களுக்கு பைசாவிற்கு பிரயோஜனம் இல்லை.. எங்களிடம் வாருங்கள், இவை அனைத்திலிருந்தும் விடுபடலாம்' என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.
கடந்த 60 ஆண்டுகளாக திராவிட காட்சிகள் மட்டுமே ஆண்ட மாநிலம் இது. மற்ற மாநிலங்களைப்போல இடது வலதெல்லாம் இங்கு இருந்ததில்லை. தி மு க, ஆ தி மு க - இரண்டுமே (தன்னளவில்) இடதுசாரிகள் தான் (மத்தியில் கூட்டணிகளை மாறி மாறி அமைத்துக்கொண்டது வேறு கதை) இப்படி வளர்ந்த இந்த தலைமுறைக்கு, ஹெச். ராஜா, தமிழிசை, எஸ்.வீ. சேகர் போன்றவர்கள் பேசுவதைக் கேட்டாலே கூசுகிறது. இவர்களை எல்லாம் யாரும் பேட்டியே எடுக்கக்கூடாது. இந்த வரிசையில் கடைசியாக சேர்ந்தது Y.G. மகேந்திரன். மக்கள் இவரை மறந்து வெகு நாட்கள் ஆகிறது. இவரை தூசி தட்டி இந்த மீடியாக்கள் வெளியே எடுத்து வரக்காரணம் இவரது 'கோ-பிரதர்', ரஜினி.
மதவாதத்தை முன்னிறுத்தாமல் இருந்தால் பிஜேபி ஒரு நல்ல ...
இவர்கள் செய்யும் இந்த குளறுபடியால், ஒரே ஒரு நன்மை மட்டும் நடந்து கொண்டு இருக்கிறது. மாநிலக் கட்சிகள், அதன் தலைவர்களின் முகங்கள், அனைத்தும் அம்பலமாகிறது. EPS, OPS பிஜேபி-யின் பிடியில். இவர்களுக்கு பம்மிப் பம்மியே பழகிவிட்டதால், பம்முவதற்கு அம்மா இல்லாமல் போனவுடன், பதறிப்போனார்கள். தியானம் எல்லாம் செய்து, அம்மாவிடமே கேட்டு தெளிந்தவுடன், இப்போது மோடியைப்பார்த்து பம்முகிறார்கள். ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
சரி - தி.மு.க-வில் என்ன நடக்கிறது? சத்தியமாக தெரியவில்லை..! மிகவும் அமைதியாக இருக்கிறார்கள். ஒரு விதத்தில் அமைதியாக இருப்பது நல்லதே. தற்போது உள்ள சூழலில் வாயைத் திறந்து அசிங்கப்படுவதற்கு வாய் பேசாமல், இருக்கும் செல்வாக்கை/பெரும்பான்மையை காப்பாற்றிக்கொள்ளலாம். அமைதியையும் மீறி - "சொடக்கு போடும் நேரத்தில் ஆட்சியை கவிழ்ப்பேன்" என்று சொன்ன ஸ்டாலினுக்கு, பாவம் சொடக்கு தான் போடத்தெரியவில்லை. தெரிந்திருந்தால் என்றோ கவிழ்த்தி இருப்பாரோ?
நாம் தமிழர் அண்ணன்கள் புதிதாய் எதோ செய்தார்கள்..அனால் இப்போது எதற்க்கெடுத்தாலும் இல்லுமினாட்டி என்கிறார்கள். இதற்கு தி மு க பரவாயில்லை.. உளறினாலும் அவர்கள் பைத்தியங்கள் இல்லை.
மக்கள் நீதி மய்யம் என்ன செய்கிறது? தலைவன் இருக்கிறான் என்று நினைத்தால் - "தூத்துக்குடிக்கு அழைப்பு விடுத்தால் செல்வேன்" என்கிறார் உலக நாயகன். அதற்க்கு மக்கள் சிணுங்கி, "சரி முதல் பால், trials.. இனிமே all-reals.. சரியா?" என்று மன்னித்தார்கள். வேறு என்ன செய்தார் என்று பார்த்தால் நடந்த காவேரி பிரச்சனையில், மௌன போராட்டத்தில் கலந்து கொள்கிறார். சிம்பு-விற்கு இருந்த தைரியம் கமலுக்கு இலாமல் போனது வருத்தமே.
மௌனப் போராட்டத்தைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்: அறப்போராட்டத்திற்கு புதிய இலக்கணம் சொல்லியிருக்கிறார்கள் திரை உலகத்தினர். ஒருவருக்கொருவர் கதை பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், அலைபேசியில் பேசிக்கொண்டும் இருக்கத்தான் போராட்டமா? சமோசா பிஸ்கட்-எல்லாம் கொடுக்காதது மட்டும் தான் அங்கு குறை! இப்படி இருந்த இவர்களை வலதுசாரிகள் பயன் படுத்திக்கொண்டார்கள். எதோ ஒரு யூ டியூப் பதிவில், தமிழ்த் தாய் வாழ்த்தை யாரோ பாட, இவர்கள் எல்லாம் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பதைப்போல் யாரோ fake வீடியோ ஒன்றை பரப்பி "இவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா" என்று கொழுத்திப் போட்டு குளிர் காய வசதியாய் அமைந்தது இந்த சம்பவம்.
இப்படித்தான் தமிழ் திரை உலகம் மக்கள் உரிமைக்காக போராடும் என்றால், அது வாயை மட்டும் இன்றி மற்ற அனைத்தையும் மூடிக்கொண்டு வீட்டிலேயே அமர்ந்து இருப்பது நல்லது.
மீண்டும் உலக நாயகன்:
எல்லாம் முடிந்த நேரத்தில், "நமஸ்தே மோடிஜி" என்று யூ டியூப் பதிவு ஒன்றை ஏற்றுகிறார். கொஞ்சம் கோவப்படுங்கள் நாயகரே. உங்களிடம் "tenacity" - தீர்மானம் இருந்தாலும், கொஞ்சம் உணர்ச்சி கம்மியாக இருக்கிறது. "எனது நடிப்பில் அரசியல் இல்லை.. அரசியலில் நடிப்பு இருக்காது" என்பதெல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது. அனால் இந்தப்பக்கம் "பாசம்மிக்க தம்பிகளே!" என்று சீமான் முழங்க, நீங்கள் மய்யத்தில் நின்று பேசுவது சொத சொதவென்று இருக்கிறது.
செயலில் சொத சொதப்பு இல்லாமல் இருந்தால் சரி.
பலர் - கமல் பி.ஜெ.பி ஆள் தான் என்கிறார்கள். அதனால்தான் "சவுண்ட்" கம்மியாக இருக்கிறது என்கிறார்கள். அதற்க்கு அவர் "தமிழ்நாட்டில் திராவிடத்தை யாரும் அழிக்க முடியாது" என்று பதிலளித்தார். அதை அவர் சொல்லாவிட்டாலும், கமலின் ஹே-ராம் படமே அவர் பிஜேபியை நாட மாட்டார் என்பதற்கு ஒரு உதாரணம். அந்தப்படத்தில் வரும் ஸ்ரீ ராம் அப்யங்கர் கதாபாத்திரம் RSS அமைப்பை உருவமை படுத்தியே அமைக்கப்பட்ட ஒன்று. அதில் இருந்து அவர் அன்றே விடு பட்டவர். மேலும் அவரது கடவுள் மறுப்புக்கொள்கை பிஜேபியுடன் என்றும் ஒத்துப்போகாது. நம்புவோமாக.
கொசுறு: காந்தியை கொன்ற கோட்ஸே-யும் RSS உறுப்பினர்தான். காந்தியை கொன்றதற்கு அவரது இந்து-முஸ்லிம் ஒருங்கிணைப்பு கொள்கைகளைத்தான் கோட்ஸே காரணமாகச் சொன்னான். காந்தி இறந்த பிறகு RSS அமைப்பை நேரு "தீவிரவாத இயக்கம்" என்று 1948-ல் தடை செய்தது வரலாறு. 35 ஆண்டுகள் கழித்து, RSS இயக்கம் பிஜேபி என்ற புதிய முன்தோற்றத்துடன் மீண்டும் வலம் வந்தது. ஏறத்தாழ 50 ஆண்டுகள் கழித்து 1998-ல் ஆட்சியைப் பிடித்தது. அன்று காந்தியைக்கொன்ற RSS, இன்று வரை இந்துக்களை முன்னிலைப்படுத்தியே அரசியல் நடத்தி வருகிறது.
பிஜேபியுடன் கூட்டு வைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள நபர் - ரஜினி! எடுத்த உடனேயே ஆன்மீக அரசியல் என்கிறார். அவர் சொல்கிற ஆன்மிகம் "நேர்மையான" என்பதைக் குறித்தாலும், மக்களுக்கு அது புரியாது. தெரியாது. "துக்ளக்" ஆசிரியர் குருமூர்த்தி மோடியும் ரஜினியும் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்கிறார். தமிழிசை ரஜினியை வரவேற்கிறார். என்னதான் ரஜினி எனக்குப் பின்னால் பிஜேபி இல்லை என்று கூறினாலும், அது அவ்வளவு நம்பும்படியாக இல்லை. திடீரென்று எம்.ஜீ.ஆர்.மீது பாசம் வருகிறது; திடீரென்று இமையம் போய் விடுகிறார். ஒன்றும் விளங்கவில்லை. போர் வரும் பொது பார்த்துக்கொள்ளலாம் என்கிறார். அப்போ, இப்போ நடக்கறதெல்லாம் என்ன தலைவரே?
மற்ற சில்லறை காட்சிகள் சில்லறைகளாகவே இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் மக்கள் பிரச்னையை தங்கள் கட்சிக்கு ஆள் சேர்க்கும் ஆயுதமாகவே பயன் படுத்துகிறார்கள். அதில் தவறொன்றும் இல்லை, ஆனால் அது மட்டுமே நோக்கமாக இருப்பதுதான் வருத்தம். தங்கள் கட்சியின் தர்மமே நியாயம் ஆகி விடாது.
தர்மம் வேறு. நியாயம் வேறு. நியாயத்திற்க்காக போராடுபவர்கள் மக்கள் மட்டுமே.
இதற்க்கு நடுவில் IPL பிரச்சனை. மஞ்சள் சட்டை அணிந்தவர்களைத் தாக்கியது தவறென்றால், அடுத்தநாள் #GoBackModi-யின் போது கருப்பு சட்டை போட்டவர்களைத் தாக்கியதும் தவறுதானே?
"என்னதான்டா சொல்ல வர்ற?" என்கிறீர்களா? :)
இதை எல்லாம் பார்க்கிற போது - நம்மால் முடிந்தது ஒன்றே ஒன்று தான் என்று தோன்றுகிறது. மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் - முதலில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். Viktor E. Frankl தனது "Man's search for meaning" என்ற புத்தகத்தில், "உன் சூழ்நிலையை மாற்ற முடியாத பொது, நீ உன்னை மாற்றிக்கொள்ளும் சவால் மட்டுமே உன் முன் இருக்கிறது" என்கிறார்.
காவிரி வரட்டும், வராமல் போகட்டும். அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். இன்னும் எத்தனை நாளைக்கு இதை நம்பிக்கொண்டு இருப்பது? கிட்டத்தட்ட 130 ஆண்டுகளாக நடக்கும் இந்த அரசியல் விளையாட்டில் இனிமேலும் நம் தலைகள் உருளக்கூடாது.
யாரையும், எந்த அரசியல் கட்சியையும் எதிர்பார்க்காமல் நமக்கு நாமே செய்துகொள்ளும் நன்மைகளில்தான் வருங்கால தமிழகம்வாழும். யாரும் வரப்போவதில்லை. உதவப்போவதும் இல்லை. இந்தச் சமூகத்திலே பிறந்தோம், சமூக மனிதனாக வளர்ந்தோம், இந்தச்சமூகத்திற்கு என்ன செய்தோம்? என்ற கேள்வியை இனி ஒவ்வொருநாளும் கேட்க வேண்டும்.
அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்
இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம்?
என்பதைநாம் நினைத்துப் பார்ப்பதுவு மில்லை.
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்
இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம்?
என்பதைநாம் நினைத்துப் பார்ப்பதுவு மில்லை.
இன்றைக்கு கறிஎன்ன? செலவு யாது?
ஏகாலி வந்தானா? வேலைக் காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்பது எந்நாள்?
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம்நிறையக் கறப்ப துண்டா?
கொடுக்கலென்ன வாங்கலென்ன இவைதாம் கண்டோம்.
ஏகாலி வந்தானா? வேலைக் காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்பது எந்நாள்?
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம்நிறையக் கறப்ப துண்டா?
கொடுக்கலென்ன வாங்கலென்ன இவைதாம் கண்டோம்.
- பாரதி தாசன்
மரங்களை வளர்க்க, ஏரிகளை தூர்வார, மழை நீர் சேமிக்க என்னென்ன வழிகள் உண்டோ அவை அனைத்தையும் அனைவரும் உடனே செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு குறைந்தது ஐந்து மணி நேரம் ஊருக்காக செலவிடலாம். குழுக்களாக கூடலாம், தெருவை சுத்தம் செய்யலாம்.. அருகில் இருக்கும் கிராமத்திற்கு சென்று வேண்டியதை கேட்டுச் செய்யலாம். குறைந்த பட்சம் - நகரத்தில் இருப்பவர்கள் தினம் shower-ல் குளிக்காமல் வாளியில் குளிக்கலாம்... இப்படிச் சின்னச் சின்னத் துளிகளை சேமிப்போம்.
பெருவெள்ளம் வரும்.
(தொடரும்..)