Showing posts with label short story. Show all posts
Showing posts with label short story. Show all posts

Thursday, May 7, 2015

வெண்டைக்காய் புளிக்குழம்பு - சிறு கதை | Vendaikkaai PuLikkuzhambu - Tamil Short story


ஆடம்பரங்களுக்கும், அத்தியாவசியங்களுக்கும் அனாவசியங்களுக்கும் வித்யாசம் தெரியாமல் தத்தளிக்கும் தம்பதிகளின் ஜன சந்தையில் புதிதாய் சேர்ந்தவர்கள் ரவியும் நிரஞ்சனாவும். தமிழ் மேட்ரிமோனியில் பல 'கிளிக்'குகளுக்குப்பிறகு, முதல் உரையாடலிலேயே லேசாய் பிடித்துப்போய், பிடிக்காமல் போக அவகாசம் அளிக்காமல் தடாலென திருமணம் முடித்தவர்கள்.  இன்று வரை லேசாய் பிடித்திருப்பது - ஆச்சர்யம்..

 அடர்த்தியான சீராய் ட்ரிம்  செய்த  மீசை, 6 அடி, கோதுமை நிறம், கச்சித உடல், நேற்றித்தழும்பு, ஸ்லீவ்லெஸ்/ஷார்ட்ஸ், ரஹ்மான், எப்போதாவது சரக்கு பார்ட்டி,ரூபிக்ஸ் கியூப், செஸ், ஈ.எஸ்.பீ.என்., கிரிக்கெட் -  ரவி.

மைதா நிறம், பக்க  வகுடு, நெற்றிக்குங்குமம், விண்டோ ஷாப்பிங், சுடிதார், பீச், மிளகாய் பஜ்ஜி, மாவடு, வேலை, சுத்தமான வீடு, ரவி..ரவி..ரவி  - நிரஞ்சனா. 

2BHK வாடகை பிளாட், படுக்கை அறை A/C, வாரம் ஒரு முறை மரினா, நல்ல திரைஅரங்கில் ஒரு படம், அவ்வப்போது ரெஸ்டாரன்ட் , கொஞ்சம் சேமிப்பு, சில்லறை கோபங்கள், சமாதானங்கள் என்று இயல்பாய் வாழும், இன்னும் புதிதாய் இருக்கும் இளைஞர்கள். 

அசோக் - இவர்கள் இருவருக்கும் நண்பன். ஒரு சனிக்கிழமை மாலை ரவியிடம் எதோ பேச வேண்டும் என்று வந்திருந்தான். வந்ததிலிருந்துபெரிதாய் ஒன்றும் பேசவில்லை. வெகு நேரம் கழித்து நிரஞ்சனா குடுத்த காபியை ஒரு சிப் சிப்பிவிட்டு - 

"இது, காபி..இது?.." என்று ரவியைப்பார்த்து கேட்டான்.

ரவி என்ன சொல்வதென்று தெரியாமல் வெற்றுப்பார்வை பார்த்துக்கொண்டிருக்கையில்

"...காபி..." -என்று முடித்தான்,  கோபத்தோடும் விரக்தியோடும்.
"என்னடி சொல்றான்?", என்றன ரவியின் கண்கள். "என்னை கேட்டா?" என்றது நிருவின் பிதுங்கிய வாய்.


"என்னடா ஆச்சு? எதோ பேசணும்ன்னு சொன்ன?

"டேய்..என் பொண்டாட்டி மண்ணு மாதிரி சமைக்கராடா!", என்றான். 

"எனக்கு புரியல... கொஞ்சம் நிதானமா சொல்லு "

"உனக்கு எப்படிடா புரியும்.. நிரஞ்சனாதான் நல்லா சமைக்கராங்களே!"

"என்னடா ஆச்சு?"

"சிஸ்டர்..நீங்களே சொல்லுங்க. ஒரு மனுஷன் வீட்டுக்கு நாயா வேலை பாத்துட்டு வர்றான். வர்றவனுக்கு வாய்லயே வைக்க முடியாத மாதிரி சமைச்சு போட்டா என்ன பண்ணுவான்? கோவம் வராதா?"

ரவியும் நிரஞ்சனாவும் அவன் மேலும் தொடர அமைதியாய் இருந்தார்கள்.

"ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவால்ல. டெய்லி உப்பு சப்பு இல்லாம சாப்படனும்னா நான் என்னதான் பண்றது? தோசை செஞ்சா புளிக்குது.. இட்லி செஞ்சா கல்லு மாதிரி இருக்கு. உப்புமா செஞ்சா வேகாம இருக்கு. சாதம் கொழயுது.. சாம்பாருக்கு பதிலா நெஜம்மாவே மண்ண சாப்டலாம். அதையாவது  மண்ணுன்னு தெரிஞ்சு சாப்பிடுவோம். இது ஏமாத்து வேலை! எப்படி 'அப்படி' ஒரு சாம்பார் பண்ண முடியுதுன்னு தெரியலை..பண்ணி அவளே எப்படி சாப்பிடுறான்னும் தெரியலை. ரவி, நீயெல்லாம் சாப்பிட்டேன்னா ஹாஸ்பிட்டல்ல   அட்மிட் ஆகிடுவ! டெய்லி வெளில சாப்பிட முடியுமாடா?"

"ஹோட்டல்லயா டெய்லி?"

"ஹோட்டல்லயாவது டெய்லி..!"

ரவிக்கு ஓரளவு புரிந்தாலும் இதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. 

நிரஞ்சனா கொஞ்சம் மௌனம் கழித்து நிதானமாக ,"அட்லீஸ்ட் ட்ரை பண்றாங்களா?"

"தெரியல சிஸ்டர். எனக்கு புடிச்சுருக்கா புடிக்கலையா ஒண்ணுமே கண்டுக்கற மாதிரி தெரியலை..."

"சமையலுக்கு ஆள் வேச்சுக்கோயேண்டா?"

"ஆள் புடிச்சு தரியா?"

"இத பேசத்தான் வந்தியா?"

"அது கெடக்கு!! பொலப்பத்த கேளுடா! டேய், நான் பொண்டாட்டி கையால சாப்பிடனும்ன்னு நினைக்கறது தப்பா? பொண்ணு பாக்க போறப்போ சமைச்சு காமின்னா சொல்ல முடியும்?"

"சொல்லலாம்...!"

"நீ சொன்னியா?!"

"இல்லடா.. சொல்லலாம்ன்னு சொல்றேன்.. பசங்களுக்கு  கொஞ்சம் இளகுன மனசுடா.. சிரிச்சு பேசினாலே தலை ஆட்டிடறோம் .. என் அபீஸ்ல ஒரு பொண்ணு, ஒரு பையன ரிஜெக்ட்  பண்ணிட்டா . ஏன்ன்னு கேட்டா, ரொம்ப நல்லவனா இருக்கான்ன்னு சொல்றா ."

"அது சரி.." என்று சன்னமாக சிரித்தான்.

அவனை கொஞ்சம் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான். அவன் பேசவேண்டும் என்று வந்த விஷயம் பற்றி பேசாமலேயே சென்றான். சமையலுக்கு ஆள் தேவை விளம்பரம் நாளை தினமணியில் வரும். உங்களுக்கு யாரையாவது தெரிந்தால் 9098767890க்கு அழைக்க சொல்லுங்கள். பாவம்.

                                                                   * * *

அன்று இரவு - 

"கீதா அவ்வளவு மோசமாவா சமைப்பாங்க?"

"தெரியலையே.. ஒருத்தன் இவ்வளவு நொந்து போயிருக்கான்னா மோசமாத்தான இருக்கணும்?"

"ம்ம்.."

"சரி..வெளியில போய் சாப்பிடலாமா?"

"வீட்ல பழசு நிறையா இருக்குடா."

"நல்ல்லா மொரு மொருன்னு தோசை சாபடனும் போல இருக்கு..ப்ளீஸ்!"

"நான் சுட்டு தர்ரேன்.. சாம்பார் எப்படியும் காலி பண்ணனும். நாளைக்கு வரைக்கும் தாங்காது."

"நான் மொரு மொருன்னு சொன்னேன்.. உனக்கு அது வராது. நாளைக்கு ஆபீஸ்க்கு குடுத்து விடு. கடமை தவறாத கணவனா சாப்டுர்றேன்."

"அதெல்லாம் நல்லாத்தான் வரும்.முந்தாநாள்தான் போனோம். அதுக்குள்ள என்ன? என் தோசை போதும் இன்னைக்கு...அதெல்லாம் சரி..நீ அசோக் மாதிரி இப்படியெல்லாம் வெளில யார்டயாது போய் சொன்னன்னு தெரிஞ்சுது.."

"ச்ச..ச்ச.. உனக்கு என்ன. ஓரளவு சுமாரா..."

முறைத்..

".. நல்லாவே சமைக்கற. இன்னும் கொஞ்ச நாள்ல பக்குவம் வந்துடும்.."

...துக்கொண்டே, "ஏன் சொல்ல மாட்ட.. உங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட்டாலும் இப்படிதான் பேசுவிங்க.."

"வாய்ல வைக்கற மாதிரி சமைக்கறதே இந்த காலத்து பொண்ணுங்களுக்கு பெரிய விஷயம்... ருசின்னு நீங்களா சொன்னா? நாங்க ஒத்துக்க வேண்டாமா?"

"டேய் உனக்கு சமைச்சு போடத்தான உன் அம்மாட்ட ட்ரெய்னிங்லாம்  போனேன்!?"

"அதுனாலதான் எதோ சுமாரா இருக்கு..ம்ம்ம்..எனக்கு ஏன்னு தான் புரிய மாட்டேங்குதுடி..ஒரே ரெசிபி. என் பாட்டி காலத்துல இருந்து. ஆனா என் பாட்டி ஓட ருசி என் அம்மாகிட்ட இல்லை.. என் அம்மாவோட ருசி உன்கிட்ட இல்லை.. ஏன் உங்களுக்கெல்லாம் அந்த பக்குவம் வரல?"

"அது சேரி! என் தாத்தா வைரம்.. என் அப்பா தங்கம்.. நீ பித்தளை.. அது மாதிரிதான்!"

அடுப்பில் தோசைக்கல் தன் கடமையாற்ற தயார்.

"உன் பாட்டி அவ்ளோ நல்லா சமைப்பாங்களா?", என்றாள் திடீரென்று.

"சொத்த எழுதித்தரலாம்.."


"ம்ம்க்கும்.."

தோசை-இரவுகளில், இவள் சுட, சுட அவன் திண்டின் மேல் அமர்ந்து சுடச்சுட சாப்பிடுவது வழக்கம்.

"சாம்பார் வேணுமா வேண்டாமா? சுட பண்ணட்டா?"

ரவி விட்டத்தை நோக்கிக்கொண்டிருந்தான்.

"ரவி!" - கலைந்து திரும்பினான்  - "சாம்பார் சுட பண்ணட்டா வேண்டாமா? அது வேண்டாம்னா போடிதான் இருக்கு. ஓகேவா?"

"சாம்பார் இல்லாத தோசையும் கெட்டி சட்னி இல்லாத இட்லியும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை..ப்ளீஸ் சுட வை"

"இப்படி பேசி பேசியே..ஏ..." என்று அவன் காதை திருகி, தலை கோதினாள்.

மீண்டும் விட்டம்...

ஒரு தோசை... மௌனம்... இரண்டாம் தோசை...

"என்ன சார் யோசிக்கறிங்க?"

"என் பாட்டி வைக்கற புளிக்குழம்ப பத்தி யோசிச்சுட்டு இருக்கேன்.."

"இன்னுமா?" என்று அவள் கேட்டதை கவனிக்காமல் - 

".. .. என் பாட்டி வீட்டுக்கு போனாலே என்ன சமையல் பண்ணுவான்னு தான் மண்டைக்குள்ள ஓடும்..எழுந்த உடனே ஒரு பில்டர் காபி. அளவா ஒரு டிபன் முடிச்சுட்டு வெட்டியா டி.வீ. பாத்துட்டு இருக்கப்போ என்னென்ன யாராருக்கு வேணுமோ அந்தந்த காய் கறி வாங்கிட்டு வந்துடுவா.. வெல்லம்  வாங்கிட்டு வந்தா  சர்க்கரைப்பொங்கல்... முள்ளங்கி வாங்கிட்டு வந்தா சாம்பார்.. வெண்டைக்காய் வாங்கிட்டு வந்தா.."

"பில்ட்-அப்ப கொரைடா!"


"பொரியலுக்கா? கூட்டுக்கா? பச்சடிக்கா ? குழம்புக்கான்னு குழப்பம் .. நான் நைஸா 'பாட்டி, குழம்புதான?'ன்னு கேட்ருவேன். இல்லைன்னு சொன்னதே இல்லை."

"ம்ம்.."


"மல்லி, கருவேப்பிலை, பூண்டு, பட்டவத்தல், வடகம் போட்டு நல்லெண்ணையில அவ வறுக்கும்போது ஒரு வாசம் வரும் பாரு.. ஐயய்யோ! மூச்சுக்கும் வாசனைக்கும் சண்டை வரும்.,வீடே கம கமன்னு!"

"ச்சை...ஏன்டா மானத்த வாங்கற!?"

"நல்லா வத்த விட்டு சுட சுட அதை சாதத்துல பிசஞ்சு, நல்லெண்ணெய் விட்டு, நார்த்தங்காய் ஊறுகாய் தொட்டு சாப்பிட்டா.. அடடடடா!! அடுத்த க்ஷணம் அப்படியே செத்து போயிடலாம். நேரா சொர்க்கம்தான்"  - என்று கூறும்போதே வாய் கலங்கியது.. கண் ஊறியது.."ஸ்ஸ்ஸ்ஸ்ல்ரப்" என்று எச்சிலை விழுங்கினான்.

"டேய்.. பேசாம சாப்புடு..!"

"உண்மைதான்..நேரா சொர்க்கம்"

"அட.. இந்த பசங்க கொஞ்சம் சமையல் தெரிஞ்சு வேச்சுக்கிட்டு ரொம்ப ஆட்டம்.."

"ஹலோ..சமையல் பெரிய விஷயமே இல்ல. நீங்கதான் அதுக்கு ஓவரா சீன் போடறிங்க.. எங்களுக்கும் தெரியும்

"என்ன தெரியும்?"

 "பருப்பில்லாத சாம்பார் - ரசம்னும்; பருப்பு போட்ட ரசம் - சாம்பார்ன்னும்.."

"அட ராமா!"

"இந்த புளிக்குழம்புதான் சிக்கலா இருக்கு அந்த பதம். அந்த மனம். வர மாட்டேங்குது."



"டேய் நிம்மதியா சாப்டுடா.. புளிக்குழம்பு வரல..சாம்பார், பருப்புனுட்டு.. எனக்கு ஒரு வண்டி வாங்கணும்ன்னு பிளான் பண்ணோமே அதுக்கு யோசிச்சியா? கொடைக்கானல் போகலாம்ன்னு யோசிச்சோம்.. அதுக்கு பிளான் போட்டியா? செல் போன் பில் கட்டினியா? போன மாசம் பைன் போட்டான் அது என்ன ஏதுனு கேட்டியா?"

"அடடா! அதெல்லாம் காசு குடுத்தா அன்னைக்கே வந்து நிக்கும்மா.. இதெல்லாம் அப்படியா?! உனக்கு எப்போதான் தெரிய போகுதோ?"

அதன் பிறகு இருவரும் உறங்கச்செல்லும் வரை பேசவில்லை. அசௌகர்ய மௌனம். தூக்கத்தில் அணைத்துக்கொண்டாள். அணைக்க விட்டான்.

-------------

மறுநாள் ஒன்றும் நடக்காததுபோல் இருவரும் தமது அலுவலகம் சென்றார்கள்.

ரவிக்கு அன்றும் பாட்டியின் ஞாபகம் அகலவில்லை. ஒரு வேளை வீட்டில் வளர்த்த கருவேப்பிலையா? வெங்காயம் நறுக்கும் விதமா? மில்லில் அரைத்த மிளகாய்த்தூளா? எதிலிருந்து அந்த புளிக்குழம்பு ருசி பெற்றது? அல்லது அவளது கைமணமா? பெண்களின் கைகளுக்கு இயற்கையிலேயே  மணம் உள்ளதா?சொக்கா! பதில் கூறும்!

கம்ப்யூட்டர் மானிட்டரில் கடுகு வெடித்தது.

சதீஷிடம் (ரவியின் மேனேஜர்) அவசர வேலை ஒன்று இருப்பதாய் கூறிவிட்டு கிளம்பினான்.
-------------

வீட்டிர்க்குச் செல்லும் வழியில் அவன் சிறு வயதில் பரிச்சயமான ஒரு மில் இருந்த இடத்திற்கு சென்றான். மில் இல்லை. 'கொஞ்சம் காஸ்ட்லி ஆனா ப்ரெஷ்ஷா இருக்கும்' என்று அடிக்கடி நிரஞ்சனா சொல்லும் நீல்கிரிசிற்கு சென்றான். புளி, தக்காளி, வெங்காயம், பூண்டு, மல்லி விதை என்று அனைத்தையும் ஆர்கானிக்காக வாங்கினான். அவன் தனியாக வந்து கறிகாய் வாங்கி வருடங்கள் ஆகிறது. விலை அவனை மிரட்டியது. மிரட்டலுக்கு அன்று அவன் அஞ்சுவதாய் இல்லை.

-----------

அவன் குர்கானில் தனியே வீடெடுத்த போது  அவன் அம்மா அவனுக்கு எழுதிக்கொடுத்த சமையல் குறிப்பை எதோ ஒரு கம்ப்யூட்டர் தலையணைப் புத்தகத்தின் நடுவிலிருந்து எடுத்தான். ஐந்தாம் பக்கத்தில் பிள்ளையார் சுழியுடன் ஆரம்பித்தது -

############ ரவியின் பாட்டி ரெசிபி தெரிந்தவர்கள் இதை படிக்கத்தேவை இல்லை. தாவுக. ############



வெண்டைக்காய் புளிக்குழம்பு
============================
1. புளியை வெந்நீரில் ஊரவைத்து கரைத்துக்கொள்ளவும். அதில் மஞ்சள், உப்பு, பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும் .
2. வெண்டைக்காய் சிறிது சிறிதாக வெட்டி வதக்கவும்.
3. சின்ன வெங்காயம் + தக்காளியை வதக்கி தனியே வைத்துக்கொள்ளவும். சூடு தணிந்ததும் அரைத்துக்கொள்ளவும்.
4. கடுகு, கரிவேப்பிலை மற்றும் பூண்டை லேசாக வதக்கி, அதன் மேல் வதக்கிய வெண்டைக்காயை சேர்க்கவும்.
5. மேலும் கொஞ்சம் வதங்கியவுடன், புளி கரைசலை சேர்த்து கொஞ்சம் கொதிக்கவிடவும்.
6. அரைத்து வைத்த வெங்காயம் + தக்காளி மிக்ஸ்சை தலையில் தட்டி, போதிய அளவு மஞ்சள், காரப்போடியோடு, சாம்பார் அல்லது குழம்பு மிக்ஸ் சேர்க்கவும்.
7. 3 நிமிடம் கொதிக்கவிட்டு, போதிய அளவு உப்பு சேர்க்கவும்.

#########################################################################################################

கரைத்தான், வதக்கினான், நுகர்ந்தான், கொதிக்கவிட்டான், உப்பு சேர்த்தான், மீண்டும் நுகர்ந்தான், சுவை பார்த்தான், மெய் சிலிர்த்தான்.

இதோடு சேர்த்து உருளைகிழங்கு ப்ரை செய்து முடித்தான்.

---

மணி 3:30 ஆகி இருந்தது. நிரஞ்சனா வருவதற்கு எப்படியும் 7 மணியாவதாகும். அதற்குள் அருகில் இருந்த ஹோண்டா டீலரிடம் சென்று சமீப மாடல்கள் பற்றி கேட்டு வந்தான். 125 cc நிரஞ்சனாவிர்க்கு கொஞ்சம் அதிகம்தான். Test Drive போக வேண்டும் என்று தீர்மானித்தான். Airtel ஆபீசிற்கு சென்று போன மாத பைன் பற்றி விசாரித்தான். Reimburse செய்தார்கள். வீட்டிற்கு வந்து கொடைக்கானல் அஸ்டோரியா ஹோடேலில் ஹோட்டல் புக் செய்தான். காலிங் பெல் அடித்தது. மணி 7:40.

"என்ன சார்.. சீக்கிரம் வந்துட்டிங்க போல..!"

"எஜமானியம்மா நேத்து சொன்ன வேலை எல்லாம் செஞ்சுட்டேன்."

"என்னல்லாம் பன்னிங்க சார்?"

"ஹோண்டா டீலர்கிட்ட பேசினேன்.."

"ம்ம்..", வாட்ச்சை டிவி மேல் வைத்தாள்..

"கொடைக்கானல்ல ரூம் போட்டாச்சு.."

"அட!", ஹாண்ட் பேக்கை சோபா மீது அக்கறையின்றி வைத்தாள்.

"கிரெடிட் கார்டு பில்?"

"போன் கம்பெனிகிட்ட பேசிட்டேன்.. "

"கிரெடிட் கார்டு?"

"அது..வந்து.. சொல்லவே இல்லையே!.. நாளைக்கு..அதெல்லாம் இருக்கட்டும். ப்ரெஷ் ஆகிட்டு வா. சாப்பிடலாம்."

"இவ்ளோ சீக்கிரமாவா?"

"வா.. வா.. ஒரு மேட்டர் இருக்கு!"

சிரித்துக்கொண்டே குளிக்கச்சென்றாள். அவள் ஆடை மாற்றி வருவதற்குள், இவன் தயாரித்த குழம்பு, கிழங்கு, சாதம் அனைத்தயும் மைக்ரோ வேவில் சுட வைத்து உணவு மேஜை மேல் அடுக்கினான். நிருவிர்க்குப்பிடித்த வடுமாங்காவை மறக்காமல் எடுத்து வைத்தான்.

குளித்து வந்தவளின் நாசியில் புளியை குழைத்த மனம்.. பொடியை வறுத்த மனம்.. வெண்டைக்காய் வதக்கும் மனம். கண்கள் விரிய கேட்டாள் -

"ஆஹா! என்னடா சமைச்ச? மனம் தூக்குது!"

"ஹாஹாஹா! என் பாட்டியின் புளிக்குழம்பு ரெசிபி! சுட சுட எடுத்து வெச்சுருக்கேன். சாப்பிடலாம் வா!"

"துறை இததான் பண்ணிட்டு இருந்திங்களா?"

"ய்ய்யா!"

"மணி எட்டரை கூட ஆகல. அதுக்குள்ளே நீ எப்படி சாப்பிடலாம்னு சொல்ற?"

"ரொம்ப நேரம் waiting. பொறுமை இல்லை!"

"சரி சரி.. இரு தண்ணி எடுத்துட்டு வரேன். சாப்பிடலாம். லேப்டாப்ல ஏதாவது போடு. புதுசா.. நீ ரொம்ப நாள் ஆச்சு சமைச்சு.", என்று கூறிக்கொண்டே அடுமனை சென்று தண்ணீர், உப்பு எடுத்து வந்தாள்.

"ஹலோ! உப்புலாம் கரெக்டா இருக்கு!"

"சும்மா எடுத்துட்டு வந்தேன்டா!.. வா சாப்பிடலாம்."

லேப்டாப்பில் ஓடிய சூப்பர் சிங்கரை அவ்வளவாக கவனிக்கவில்லை.

ஆவி பறக்க சாதம் போட்டு, குழம்பை ஊற்றிப் பிசைந்து, நல்லெண்ணெய் கிளறி, உருளைக்கிழங்கை சேர்த்து வாயில் போட்டான்.

"ம்ம்ம்ம்.. சூப்பர் டா!" என்றாள்.

ரவி மெல்லிதாய் சிரித்து ஒன்றும் சொல்லாமல் இருந்தான்.

மேலும் இரண்டுவாய் சாப்பிட்டுவிட்டு, "டேய் நீ சமைச்சதுலேயே இதுதான் பெஸ்ட்", என்றாள். அமர்ந்துகொண்டே மெலிதாக ஆடினாள். உதட்டோடு சேர்ந்து கண்களும் புன்னகைத்தது.

இவன் ஒன்றும் சொல்லாமல் மேலே சாப்பிட ஆரம்பித்தான்.

"என்னடா ஒன்னுமே சொல்ல மாட்டேங்கற?"

"ம்ம்ம்..."

"ம்ம்ம்.. ன்னா?"

"ஒன்னும் இல்லை.."

"சொல்லுடா", என்று சாபிட்டுக்கொண்டே மூன்று விரல்கள் நீட்டி 'சூப்பர்' என்று சைகித்தாள்.

"சுமாராதான் இருக்கு.. அவ்வளவு நல்லால்லாம் இல்லை."

"அடேய்! நிஜமா சொல்றேன். ரொம்ப நல்லா இருக்கு. காரம், உப்பு, புளி எல்லாமே perfect!"

"நீ சொல்ற.. but நீ என்னோட பாட்டி வெச்ச புளிக்குழம்பு சாப்பிட்டது இல்லை. So உனக்கு தெரிய வாய்ப்பு இல்லை..This has no consistency!"

வேகமாய் சவைத்த வாய்.. slow-mo ஆனது. சட்டென்று சுதாரித்து மீண்டும்

"டேய் விடுடா.. டேக் மை போன்.. Instagram ல போட போறேன்!"

"ப்ச்ச்.."

"சீர் அப் டா.. திஸ் இஸ் அமேசிங்!"

"ம்ம்ம்.."

"அதே டேஸ்ட் வருமா என்ன?"

"அதான் ஏன்?"

"டேய் நீ படிச்சவன்தான?.. இப்போ எவ்வளவோ மாறி இருக்கு.. Fertilizers, pollution, GMO, ஏன் - மண்ணு கூட வேற இப்போ. உன் பாட்டி காலத்துல எல்லாமே ப்ரெஷ். இப்போ ஸ்டோர் பண்ணி விக்கறான். Frozen food வந்தாச்சு. இப்போ இவ்ளோ நல்லா வந்ததே பெரிசு.. புரிஞ்சுக்கோ.."

"இல்ல.."



"ரவி.. easy! இட் ஹாப்பன்ஸ். Change is inevitable.  நீதானே சொல்லிகிட்டே இருப்ப? அப்பறம் என்ன? ஒரு போட்டோ எடு. இன்ஸ்டாகிராம்ல போட்டே ஆகணும். மினிமம் 100 லைக்ஸ்! ஐயம் ஸோ ஹாப்பி!"

யோசித்து புன்னகைத்தான். நிரு, ஆனந்தமாக போஸ் குடுக்கத் துவங்கினாள் 

சாப்பிட்டவாறு. கண்கள் மூடி புளிப்பை ரசித்தபடி.  கண்கள் விரிய ஒரு தம்ஸ் அப். நாவை வைத்து உதட்டை சுவைத்தபடி. கிளிக். கிளிக். கிளிக். கிளிக்.

"தமஸ் அப் நல்லா இருக்குல்ல? ஓகே ஐ வில் போஸ்ட் இட்!"
எல்லாம் மாறத்தான் செய்கிறது..பாட்டிகள் வைக்கும் புளிக்குழம்பைத் தவிர எல்லாம் மாறத்தான் செய்கிறது..

                                                              ---------- * -----------

Wednesday, July 25, 2012

The most mind boggling example of time travel paradox..

Its a story by Robert Heinlein titled -  All You Zombies.. The summary goes like this! - 

A baby girl is mysteriously dropped off at an orphanage in Cleveland in 1945. "Jane" grows up lonely and dejected, not knowing who her parents are, until one day in 1963 she is strangely attracted to a drifter. She falls in love with him. But just when things are finally looking up for Jane, a series of disasters strike. First, she becomes pregnant by the drifter, who then disappears. Second, during the complicated delivery, doctors find that Jane has both sets of sex organs, and to save her life, they are forced to surgically convert "her" to a "him." Finally, a mysterious stranger kidnaps her baby from the delivery room.

Reeling from these disasters, rejected by society, scorned by fate, "he" becomes a drunkard and drifter. Not only has Jane lost her parents and her lover, but he has lost his only child as well. Years later, in 1970, he stumbles into a lonely bar, called Pop's Place, and spills out his pathetic story to an elderly bartender. The sympathetic bartender offers the drifter the chance to avenge the stranger who left her pregnant and abandoned, on the condition that he join the "time travelers corps." Both of them enter a time machine, and the bartender drops off the drifter in 1963. The drifter is strangely attracted to a young orphan woman, who subsequently becomes pregnant.

The bartender then goes forward 9 months, kidnaps the baby girl from the hospital, and drops off the baby in an orphanage back in 1945. Then the bartender drops off the thoroughly confused drifter in 1985, to enlist in the time travelers corps. The drifter eventually gets his life together, becomes a respected and elderly member of the time travelers corps, and then disguises himself as a bartender and has his most difficult mission: a date with destiny, meeting a certain drifter at Pop's Place in 1970.

The question is: Who is Jane's mother, father, grandfather, grand mother, son, daughter, granddaughter, and grandson? The girl, the drifter, and the bartender, of course, are all the same person. These paradoxes can made your head spin, especially if you try to untangle Jane's twisted parentage. If we draw Jane's family tree, we find that all the branches are curled inward back on themselves, as in a circle. We come to the astonishing conclusion that she is her own mother and father! She is an entire family tree unto herself.





Thanks : Quora

For movie lovers - please do watch the below movie : http://www.imdb.com/title/tt0910554/ - Severely underrated time travel movie!


Wednesday, February 8, 2012

இப்படியும் சில மனிதர்கள்

பரத்:

ஏழாம் செமஸ்டர் விடுமுறைக்கு எனது மாமா(க்கள்)/சித்தி வீட்டிற்கு சென்றிருந்தேன். எனது தம்பி/தங்கைகளுக்கு மிட் டெர்ம் பரீட்சை நடப்பதால், பொழுது போகாமல் நான்கு நாட்களில் கிளம்ப முடிவு செய்தேன். வைகை. தட்க்கலில் பயணச்சீட்டு வாங்கி நாளை புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருக்கிரேன்.

நாளை:

"பயணிகள்-கவனத்திற்கு-வண்டி-எண்- ஒன்று-இரண்டு-ஆறு-மூன்று-ஐந்து-இரண்டாம்-பிளாட்பாரத்தில்-இருந்து-இன்னும்-சிறிது-நேரத்தில்-புறப்பட-இருக்கிறது"

ஒலி பெருக்கிப்பெண்ணின் வெட்டிய தமிழ், மனிதன் எவ்வளவு இயல்பாக இயந்திரத்தனத்திர்க்கு பழகிவிட்டான் என்று நினைவுப்படுத்தியது.

ஒரு நாள் பொழுதை கழிக்க, ஒரு லிம்கா - 500 எம்.எல்., புதிதாய் வாங்கிய புத்தகம் - 'கடவுள்' - சுஜாதா,  ஐ-பாட், மற்றும் இளையராஜாவை நம்பி இருந்தேன்.

S3 கோச்சில் நான் கொண்டு வந்திருந்த பெரிய்ய்ய பையை ["எதுக்கும் இருக்கட்டும், மழை கிழை வந்தா மாத்து துணி வேண்டாமா?" என்று அம்மா வைத்துவிட்ட துணி உபயோகப்படாமல் இடத்தை அடித்துக்கொண்டிருந்தது] நுழைக்க சிரமமாக இருந்தது. ஒருவழியாக 43 வந்தடைந்தேன். ஜன்னல் சீட். புழுக்கம் கம்மி. இயற்பியல் விதிகளுக்கு நன்றி. 

மணி: 12:45pm.. ரயில் கிளம்பியது.

என் ஜன்னலோர பிரபஞ்சம் என்னை சூழ்ந்துகொண்டது.



ஸ்ரீனிவாஸ் @ ஸ்ரீனிவாசன் 


Bloody hell! What am I supposed to do in THIS compartment? இவனுங்கள நம்பவே கூடாது. ஏ.சி ல புக் பண்ண சொன்னா,செகண்ட் கிளாஸ்ல புக் பண்ணிருக்கான். பார்வதி, உனக்கு ஏன் சிக்குன்குனியா வர வேண்டும்? நான் எப்படி அர்ச்சனாவை [வயது - ஒன்று] ஒரு நாள் பூரா சமாளிக்க போகிறேன்? இந்த க்ளையன்ட் மதுரைல ஏன் இருக்கான்? என் கம்பெனி ஆட்கள் என்னை ஏன் அனுப்பனும்? இந்நேரம் பாத்து உன் அம்மா அப்பா ஏன் யு.எஸ்.ஸில் இருக்க வேண்டும்? ச்ச!

லேப்டாப் - இருக்கிறது
டிக்கட் - இருக்கிறது
செல் போன் - இருக்கிறது
லுக்கேஜ் - இருக்கிறது
டாக்குமெண்ட்ஸ் - இருக்கிறது 
குழந்தை - இருக்கிறது

ஒரே ஒரு பகல். என் இனிய அர்ச்சனா, உறங்கிவிடு.

என் இருக்கையில் சென்று அமர்ந்தேன்.ஜன்னலோரம். எதிரே ஒரு வாலிபன் எதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தான். தமிழ் புத்தகம். அட!

அர்ச்சனாவை அவளுக்கென்று வாங்கிய இருக்கையில் [வேறு வழி?], அவள் அம்மாவின் சில்க் புடவை விரித்து படுக்கச்செய்தேன். ட்ரெயின் புறப்பட்டு விட்டது. இணையத்தில் என்னை இணைத்துக்கொண்டேன்.

பரத்:

மிக சுவாரஸ்யமாய் ஆரம்பிக்கிறது - கடவுள். சற்று நிமிர்ந்து என் சக பயணிகளை ஒரு நோட்டமிட்டேன். எனக்கெதிரே, லேப்டாப்பில் உலகம் தேடும் மனிதர். அருகில் அவர் குழந்தை [என்று நினைக்கிறேன்]. எனதருகில் ஒரு இளைஞர் தூக்கத்தின் விளிம்பில் அமர்ந்திருந்தார். பக்கவாட்டு இருக்கையில் குறுக்காக ஒரு இளம் ஜோடி. அப்போதுதான் திருமணம் ஆகி இருக்க வேண்டும். காதல் திருமணம். பாசாங்குகள் இல்லை. கொஞ்சம் எட்டிப்பர்தேன். பல முகங்கள். சில பின்னல்கள். சில சொட்டைகள். அதில் அற்ப மயிர்கள்.

காதில் "தில்லுபரு ஜானே.." என்று மனோ காதலித்துகொண்டிருந்தார். மீண்டும் 'கடவுளில்' மூழ்கினேன்.

அந்த ஜோடி:

[ நீண்ட மௌனம்..]

"சுரேஷ், என்னை நீ ஒழுங்கா பாத்துப்பேல்ல?"

"ம்ம்ம்ம்.. வேற வழி?"

"விளையாடதடா..எனக்கென்னாவோ பயம்மா இருக்கு. என்னதான் அப்பா அம்மா ஒத்துக்கிட்டாலும்..."

புன்னகைத்தான்.

தோளில் சாய்ந்துகொண்டாள். கண்களினோரம், வரட்டுமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்த கண்ணீர், "ரமா.. ஐ லவ் யூ.. உன்ன விட்டு எங்க போயிட போறேன்?" என்று சுரேஷ் சொன்னவுடன், வந்துவிட்டது...

மீண்டும் மௌனாலோகம்..

அருகில் தூக்கதிதின் விளிம்பில் இருந்த இளைஞர்:

தூங்கிவிட்டார். அவ்வப்போது பரத்தின் மீது சரிந்து கொண்டு..

ஸ்ரீநிவாஸ் @ ஸ்ரீனிவாசன்.

ஐ டோன்ட் வான்ட் டு நோட்டிஸ் தீஸ்...பட்... கண்ணு முன்னால நடக்குது..தட் பெல்லோ இஸ் ஸ்லீப்பிங் ஆன் திஸ் கைஸ் ஷோல்டர்... மெட்ராஸ் ஜனங்களுக்கு மானர்ஸ் சொல்லி தரணுமா? இப்படி இருந்தா எப்டி உருப்படுவோம்? பர்சனல் ஸ்பேஸ் இலாம எப்படி பப்ளிக்ல இருக்க முடியும்? இட்ஸ் அன் ஈசி! சொல்லி விடலாமா? என்னால் சொல்லாமல் இருக்க முடியுமா?

"சார்!"

"ரம்..பம்..பம்.. ஆரம்பம்..."

"சார்..எக்ஸ்க்யுஸ் மீ!"

 "ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே.."

அவன் கண் முன்னே கை அசைத்து அழைத்தேன்.

"சாரி சார்.. பாட்டு கேட்டுட்டு இருந்தேன்.நீங்க கூப்பிட்டது கேக்கல." என்றான்.

"இட்ஸ் ஓகே... அது வந்து.."

"எஸ்.. சொல்லுங்க.."

"உங்க பக்கத்துல இருக்கறவர்..உங்க மேல வந்து வந்து விழறார். நீங்க சொல்லலாமே. இட்ஸ் மேக்கிங் மீ அன் ஈசி.."

"என்ன சார் நீங்க.. எதோ அசதியா துங்கறார். பாவம் தூங்கட்டுமே"

"இல்லை சார்.. அவன் உங்க மேல மேல வந்து விழறான். அவன் பாக்கவும் அவ்ளோ சரியான ஆசாமியா தெரியலை. நீங்க அவன் விழ விழ தள்ளி விட்டுட்டு இருக்கீங்க.. இந்த காலத்து ஜனங்கள நம்ப முடியாது சார்... ஹி இஸ் டிஸ்டர்பிங் யூ. ரைட்?"

"நோ!"

"சார்.நீங்க இவன மாதிரி ஆட்களை ஒன்னுமே பண்ணாம விடரதுனாலதான் இந்தியா இன்னும் முன்னேறாம இருக்கு. தவறுகள் நடக்குது. நாம இவனை சகிச்சுட்டே இருந்தோம்னா, இது மாதிரி உதவாக்கரைகள் அதிகரிச்சுட்டே இருப்பாங்க! தே ஆர் ஸ்கம்!"

பரத்:

"சார். என்ன இப்படி பேசறிங்க?! அவர் உங்களுக்கு என்ன பண்ணார்? சாயறது என் மேல. நானே ஒன்னும் சொல்லல. நீங்க ஏன் உணர்ச்சிவச படறிங்க? எனக்கு அவரோட அசதி பெரிசா தெரியது. உங்களுக்கு ஏன் அது தெரியலை? விடுங்க சார் பாவம்" 

பக்கத்து இருக்கை நண்பர் மீண்டும் பரத்தின் மேல் விழுந்தார். இந்த முறை அவன் ஒதுக்கி விட வில்லை.

ஸ்ரீநிவாஸ் @ ஸ்ரீனிவாசன்:

என்னடா இது. ச்ச! இட்ஸ் எம்பாரசிங்! இவனிடத்தில் நாற்றம் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? அவன் எக்கேடும் கேட்டு போகட்டும். வை டூ ஐ பாதர்.காஷ்! ஐ நீட் எ ஸ்மோக் டெஸ்பரேட்லி. 

விருட்டென்று எழுந்து கதவோரம் சென்று தனது மால்போரோவை  [இறக்குமதி] நெஞ்சில் பரவ விட்டான். அர்ச்சனா தனியாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

அந்த ஜோடி:

"ரமா நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா?"

"எவ்வளவு?" 

அவள் காதில் ஏதோ குசுகுசுத்தான். வெட்கி, அவன் கைகளை கவ்விக்கொண்டாள். இன்னும் நெருக்கமாய் அமர்ந்துகொண்டார்கள்.

பக்கத்து இருக்கை இளைஞர்:

தன்னால் இருவர் அடித்துகொள்கிறார்கள் என்று தெரியாமல் பரத்தின் தோள்களில் உறங்கிக்கொண்டிருந்தார்.



பரத்:

மனுஷங்க ஏன் இப்படி இருக்காங்க? ஒருவன் பார்க்க நன்றாக இல்லை என்றால், அவனை உடனே ஏன் எடை போடுகிறார்கள்? அவனுக்கும் ஆசைகள், உணர்வு, குடும்பம், வேலை, கடன் எல்லாம் இருக்கத்தானே செய்கிறது? இவர்களுக்கு தெரிந்து இப்படி நடக்கிறார்களா இல்லை இவர்கள் இருப்பிலேயே ஏதும் கோளாறு இருக்கிறதா? ஐ.டி ஜனங்கள் இப்படித்தான் இருப்பார்களோ?

வெளியே புயல் அடிக்கும்போது கான்க்ரீட் வீட்டில் இருப்பவனுக்கு கூரைகள் பிய்த்து எறியப்படுவது எப்படித்தெரியும்? எப்படி புரிய வைப்பேன் நான்? ஒரு வேளை என் மீது தான் கோளாறா? மனுஷ.... 'க்ரீஈஈஈச்'...

இவனது எண்ண ஓட்டத்திற்கும் சேர்த்து பிரேக் போட்டது ரயில். 

பட்டுச்சேலை, இருக்கையின் வள வளப்பில் வழுக்கி, அர்ச்சனா கீழே விழுந்... அதற்குள் பரத் அவளை பிடித்துவிட்டான்.

கண் விழித்த குழந்தை, "ஓஒ..ஓஒ.." என்று அழத்துவங்கியது.

ஸ்ரீனிவாஸ் @ ஸ்ரீனிவாசன்:

அர்ச்சனாவா அது? என்ன ஆனது? இருக்கைக்கு விரைந்தான். பரத், அழும் குழந்தையை ஏந்தியிருந்தான்.

"சேலை வழுக்கிடுச்சு சார். விழறதுக்குள்ள புடிச்சுட்டேன். ஆனா அழ ஆரம்பிச்சுட்டான்."

"ஆரம்பிச்சுட்டா", என்று சரி செய்தேன்.

"ஓ.." என்று கொஞ்சம் வழிந்தான்.

என்னடா இது எழவாப்போச்சு. இவள் அழுகையை எப்படி சரி செய்வேன்?

"ஓஓ...ஊஉ...ம்ம்மம்பா...." என்று அர்ச்சனா அலறினாள். 

என்ன செய்ய வேண்டும் நான்? அழுகையை எப்படி நிறுத்த வேண்டும்? பார்வதீ... எவ்வளவு நாளா வேண்டுதல் இதுக்கு? டாம்! இந்த கம்பார்ட்மென்ட்டில் இருக்கும் அனைவரும் என்னையே பார்க்கிறார்கள். தி வொர்ஸ்ட் டே ஆப் மை லைப்! அர்ச்சனா அழுவதை நிறுத்து.

என்னவோ செய்தான் ஸ்ரீ. குரங்கு மாதிரி முகம் வைத்து காண்பித்தான். வினோதமாக சத்தம் செய்தான். அர்ச்சனா எதற்கும் மடியவில்லை.

"எக்ஸ்க்யூஸ் மீ.. மிஸ்டர்.."

"பரத்"

"பரத், இந்த பையில் ஒரு பால் புட்டி இருக்கும்.. எடுத்துத் தருவீர்களா?"

எடுத்துத்தந்தான்.

ரயில் மீண்டும் கிழம்பியது.

பரத்:

"சார்.. அவசரப்படாதிங்க. அம்மாக்களைத்தவிர நமக்கெல்லாம் கொஞ்சம் கஷ்டமான காரியம் தான்." என்று புன்னகைத்தேன்.

நான் சொன்னது அவருக்கு பிடிக்கவில்லை.

அப்போது திடீரென்று ஒரு குரல்..

 "அம்மம்மா...தம்பி என்று நம்பி... அவன் உன்னை வளர்த்தான்.."
என்று கணீர் குரலில் பாட்டு கேட்டது. என்னவென்று எட்டிப்பார்த்தேன். கண் பார்வை இல்லாத ஒருவர், கையில் ஜல்..ஜல்.. என்று தான் இதுவரை சேகரித்த சில்லறைகளை தெரிவித்துக்கொண்டு எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

"தாய் என்றும்..தந்தை என்றும்..."

என்று அவர் பாடப்பாட, அவரது குரல்,  என்னை ஏதோ செய்தது..திடீரெண்டு என்னைச்சுற்றி எல்லாம் இருண்டது. கண் பார்வை மட்டும் இல்லை என்றால் எவ்வளவு கஷ்டம்? நிறம் - தெரியாது. உருவம் - தெரியாது.. தெரிந்த நிறம் - கருமை..மற்றனைத்தும் - வெறுமை.

நான் என் கண்களை மூடினேன். என் முகத்தில் அறைந்த காற்றை கண் பார்வை இல்லாதவர் எப்படி வர்ணிப்பார்? பார்வை இருக்கும் நமக்கே அதை வர்ணிக்கத் தெரியாதே! அழகு? சூரியன்? - தெரியாது. எழுத்துகள்? தெரியாது. ஆண் பெண் வித்தியாசம்? - தெரியாது. அடுத்த அடி எடுத்து வைப்பது பள்ளமா மேடா? தெரியாது. தன் முகம் எப்படி இருக்கும்? தெரியாது? என்ன ஆடை அணிந்து கொண்டிருக்கிறோம்? தெரியாது.

எனக்கு அடிவயிற்றில் சோகம் கவ்வியது. ஒரு வேளை எனக்கு எதிரே அமர்ந்திருந்த மனிதருக்கு கண் பார்வை இல்லாமல் இருந்திருந்தால் எங்களுக்குள் நடந்த வாக்குவாதங்கள் இருந்திருக்காது இல்லை?

"அம்மம்மா..."



ஸ்ரீனிவாஸ் @ ஸ்ரீனிவாசன்::

என்ன செய்ய வேண்டும்? அழுகையை நிறுத்து அர்ச்சனா! நீ வளர்ந்த பிறகு உனக்கு நிறைய பாக்கெட் மணி தருகிறேன். இப்போது தயவுசெய்து நிறுத்து.

 "அம்மம்மா...தம்பி என்று நம்பி... அவன் உன்னை வளர்த்தான்.."

என்ற கணீர் குரலில், அர்ச்சனா திடுக்கிட்டாள்.' என்னதிது? யார் அது? ' என்று திரும்பினேன்.

'ஓ! கடவுளே. இந்தியாவில் இன்னும் ஏன் இவர்கள் இருக்கிறார்கள்? அரசாங்கம் எதாவது செய்யலாமே! நாம் எப்படி முன்னேறுவது? '

என்று நினைத்துகொண்டிருந்த வேளையில் அர்ச்சனா, அழுகையை திடீரென்று நிறுத்தினாள். இன்னும் கண்ணீர் ததும்பிய கண்கள். ஆனால் கண்கள் விரிய எதையோ கவனிக்க தொடங்கினாள். அந்த குரல் அவளது கவனத்தை திசை திருப்புகிறது. அடடா! அவன் பாடுவது இவளது அழுகையை நிறுத்துமோ? பார்வதீ.. நீ இவளை தணிக்க பாடுவாயா என்ன?

அவள் அவனையே உற்று பார்த்துக்கொண்டிருக்கிறாள். இவனை வைத்தே இவளை சமாளித்துவிட வேண்டும்.'

அவள் பிஞ்சுக்கைகளை தனது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, "அதோ பாரு.. பூ...பூச்சாண்டி மாமா! அழுத புடிச்சு குடுத்துடுவேன். பாரு உன்னை பிடிக்கத்தான் வர்றார். பூ!"

அர்ச்சனா, பாடும் அவரை ஒரு வித வசீகரத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது அழுகையை முழுதாய் நிறுத்திவிட்டாள். அப்போது அவர் காலில் ஏதோ பட்டு, கொஞ்சம் தடுக்கினார்.

"கே..ங்..கூ..கி.." அர்ச்சனா சிரித்தாள்.

'அட! சிரிக்கிறாளே! அப்பாடா!'

"ஹாய்..பூச்சாண்டி மாமா விழுந்துட்டாரு..பூச்சாண்டி மாமா..ஹாய்.. ஜாலீ.." என்று தனது கைகளைத்தட்டினான். அர்ச்சனா மேலும் சிரித்தாள். அவர் மறுபடி கொஞ்சம் தடுமாற, ஸ்ரீ, மேலும் அர்ச்சனாவை குதூகலித்தான்.

பரத்:

'ஐய்யோ! இது என்ன கொடுமை!?.. எவ்வளவு தவறான வழிகாட்டியை இவள் தந்தையாக பெற்றுரிக்கிறாள் ? நினைக்க நினைக்க பதபதைப்பாக இருக்கிறது. நாளைய தலைமுறைக்கு இவரைப்போல எத்தனை தவறான தந்தைகள்? எத்தனை தவறான தாய்மார்கள்? ஒரு தலைமுறையே இப்படி பார்வையற்றுப் போனால் என்ன ஆவது?

பார்வை இழந்தது அவர் குற்றமா? 

ஏன் சிலருக்கு மற்றவர்கள் படும் அவலங்கள் புரிய மாட்டேன் என்கிறது? கொஞ்சமே கொஞ்சூண்டு பணத்தில் இவ்வளவு அலட்சியத்தை இலவசமாக பெறுகிறார்களா  ? அவருக்கு என்ன தெரியும்? தெரிந்ததெல்லாம் ரயிலின் இரைச்சல், இரண்டு அல்லது மூன்று பாடல்கள், 'சில்லறை இல்லை' குரல்கள், சில்லறை சத்தம். அவ்வளவு தான் அவரது உலகம்.

அவர் கடவுள் - இனிதாய் பேசும் யாரும். நண்பர்கள் - கைகளும், கால்களும்... மனிதர்கள் - அவர்களது குரல்கள்.. எல்லாமே பாதி பாதியாக இருக்கும் அவரை ஏன் இப்படி கேலி செய்து அவர் குழந்தையை சிரிக்க வைக்க வேண்டும்? இவ்வாறான செயல்கள் அந்த  குழந்தைக்கு என்ன அறிவுறுத்தும்? என்ன பண்பு கொடுக்கும்?

யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் எங்கள் அருகே வந்துவிட்டார். என்னால் இயன்றதை குடுத்தேன். பார்வை அற்றவர்களின் கண்களை பார்த்திருக்கிறீர்களா? பார்த்ததில்லை என்றால், ஒருமுறை பாருங்கள். அது உங்களில் ஏற்ப்படுத்தும் அதிர்வுகளை சொல்ல சொற்களும் சொர்ப்பம்தான்.

என் எதிர் இருக்கைக்காரர் இன்னும் அர்ச்சனாவை குதூகலப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

எனக்கு உலகின் மேல் வெறுப்பு வந்தது. மனுஷனை மனுஷனா பாக்க நமக்கு எப்போ தெரியாம போனது? ஏன் இவரைப்போன்றவர்கள் பச்சாதாபத்தை இழக்கிறார்கள்? காரணம்தான் என்ன? சுயநலமா? வளர்ப்பா? attitude? என்ன காரணம்?

அந்த ஜோடி:

"சுரேஷ். என்கிட்டே உனக்கு புடிச்சது என்ன?"

"எல்லாமே"

"எல்லாத்துலயும் ரொம்ப புடிச்சது எது?"

"உன் கண்ணு.. அதை பாத்துட்டே செத்துடலாம் ரமா!"

மீண்டும் எங்கேயோ வெறித்துப்பார்த்து காதலிக்க ஆரம்பித்தார்கள்.

பக்கத்து இருக்கை இளைஞர்:

...கொர்ர்...கொர்ர்...

ஸ்ரீனிவாஸ் @ ஸ்ரீனிவாசன்:

அப்பாடா.. இவள் சிரித்து விட்டாள். படுக்க வைத்தால் கொஞ்ச நேரத்தில் தூங்கி விடுவாள். உறங்க வைத்து விட்டு டாக்குமண்டேஷனை முடிக்க வேண்டும். பி.எல். கத்துவான்!

பரத்:

மனிதன் பரிணாம வளர்ச்சியில் மீண்டும் மிருகமாகிறானா?

எனக்கு இந்த அக்கறை அற்ற சமுதாயத்தை பார்க்க விருப்பமில்லை. புத்தகத்தை மூடி வைத்தேன். 

இளையராஜா "அன்பிலாதவரைக்கண்டால், அம்ம! நாம் அஞ்சும் ஆரே!" என்று என் காதில் கசிந்து கொண்டிருந்தார். எனக்குள் சிரித்துக்கொண்டேன். உலகத்தோடும், பக்கத்துக்கு இருக்கை நண்பரோடும், உறங்கச்சென்றேன். பார்வையற்ற நண்பரின் முகம் அவ்வப்போது வந்து போனது.. ரயிலின் 'தடக்..தடக்..'கில் உறங்கிவிட்டேன்.

இரவு: 
மணி: 1:20am
மதுரை கிழக்கு ரயில் நிலையம்:



மாரி: டேய் சிலுவை! இன்னிக்கு கலெக்சன் எப்புடி?

சிலுவை: அத்த ஏம்ப்பா கேக்கற! படா பேஜாரா போச்சு! காட்டு கத்து கத்தி பாடினாலும் சில்லறை இல்லைங்கறான்! எனக்கு இந்த குருட்டு வேஷம் போதுமப்பா.. நாளைலேருந்து நான் நொண்டியா போறேன். என்ன சொல்ற?

=====================

இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களை சுமந்து உலகம் இன்னும் சுழலத்தான் செய்கிறது.

=====================




Sunday, January 8, 2012

ஆசைகள்

சார், ஒரு சலனமற்ற மாலை வேளையில் என் அறையின் ஜன்னலோரம் அமர்ந்து இந்தக்கதையை எழுத ஆரம்பித்தேன்.

"வணக்கம் வாசகரே. ஒரு மாலையின் ஆரம்ப வேளையில் என் அறையின் ஜன்னலோரம் அமர்ந்து இந்தக்கதையை எழுத ஆரம்பித்தேன்.

"ரம்யா அழகானவள். அவள் ரம்யவாகவே இருப்பதால்தான் அழகோ என்னவோ. தெரியவில்லை. பத்திரிகை போடோகிராபர். ஆனால் இப்போது தன் உயிருக்காக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் அவளை மேலும் வர்ணித்து உங்கள் டெஸ்டோஸ்டிரோன்களின் சாபத்திற்கு ஆளாக விரும்பவில்லை. இது அட்ரினலின் தருணம்.

அவள் சற்று நேரத்திற்கு முன்பு எடுத்த போட்டோ, சில பெரிய்ய தலைகளுக்கு தலைவலி குடுக்கக்கூடியவை. அவள் துறைமுகத்தில் எதோ கடத்தல் நடப்பதைப்பற்றி அறிந்த... 'டுமீல்'.. கொஞ்சம் பொறுங்கள். மேலும் விபரம் பிறகு கூறிகிறேன். அவளை சுட முயற்ச்சிக்கிறார்கள்... 'டுமீல்'... மீண்டும் காதடைக்கும் சத்தம்.

இருட்டு. குறுகிய சந்துகளில் ஓடிக்கொண்டிருக்கிறாள் ரம்யா. 'எங்காவது மறைந்துகொள்ள இடம் கிடைக்காதா?' விடுக்கென்று இடதுபக்கம் இருந்த சந்து ஒன்றில் திரும்பினாள் . பிறகு வலது. வலது. இடது. பின்னால் பார்த்தாள். அவர்களை தொலைத்து விட்டேனா? சூப்பர். இல்லை. எதோ குரல் கேட்கிறது.

'நல்லா பாத்தியா? போயிட்டாளா? செக் பண்ணுங்கடா' என்று அதட்டியது ஒரு குரல்.

தப்பிக்க தருணம் இதுதான். சுற்று முற்று பார்த்தாள். அவள் இப்போது வந்தது ஒரு முட்டுச்சந்து. 'Damn!'. தெரு முனையில் ஒரு வீட்டில் இருந்து வெளிச்சம் வந்தது. 'இந்த நேரத்தில் யார் விழித்திரிக்கிரார்கள்?' வீட்டின் கதவு திறந்திருந்தது. விநோதமாக இருந்தாலும் இதுதான் தருணம். தப்பிக்க வேண்டும். விருட்டென்று உள்ளே சென்றாள்.

உள்ளே சென்று கதவை தன் பின்பக்கம் மூடிக்கொண்டாள். திரும்பி, முதல் முறையாக அந்த வீட்டை கவனித்தாள். வினோதமான வீடு. பெரிய்ய ஹால். அவ்வளவுதான் வீடே. பின் சுவற்றில் ஒரு கதவு இருந்தது. அதன் இடுக்குகளில் இருந்து வெளீரென்று வெளிச்சம் கட்டுப்பாட்டுடன் சிந்தியது. அவ்வளவு பெரிய்ய ஹாலும் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று பூத்த, இன்னும் வாடாத பூக்கள், மர வேலைப்பாடுகள், விஸ்தாரமான இருக்கை...ஓ! அதில் யாரோ அந்தக்கதவை நோக்கி உட்கார்ந்திருந்தார்கள். ரம்யா மெல்ல அவர்கள் அருகில் சென்றாள். பக்கவாட்டாக அந்த சோபாவை கடந்து முன்னாள் வந்தாள். தேநீர் கோப்பையுடன் ஒரு கிழவி.

"வாம்மா.." என்றாள்

"என்ன?!" , ரம்யாவிற்கு இந்த இடம், சூழல், கிழவி, எல்லாம் விநோதமாக இருந்தது. 'பின்ஜாம வேளையில் ஒருத்தி வீட்டிற்க்குள் நுழைந்தால், தேநீருடன், வாம்மா என்று வரவேற்ப்பார்களா என்ன?. முன் பின் அப்படி சென்றதில்லை நான்' என்று நகைத்துக்கொண்டாள்.

"உன்னைத்தான் எதிர்பாத்துட்டு இருக்கேன்."

அரை முழுவதும் பரவி இருந்த சன்னமான குளிர் அவளை மேலும் அசௌகரியப்படுத்தியது.

"என்ன?! come again!?"

"உன்னைத்தான் எதிர்பாத்துட்டு இருக்கேன்." , கிழவி.

"என்னயா?"

"உட்காரும்மா.. டீ குடி.. இளைப்பாரு"

விநோதங்களை உதறி விட்டு - "விளையாடாதிங்க பாட்டி. என்னை சிலர் துரத்திட்டு வர்றாங்க. நான் தப்பிக்கணும். பின் பக்கம் ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க.. நான் போய்டறேன்.", என்றாள்.

"கவலைப்படாதே. அவர்கள் உன்னை துரத்த மாட்டார்கள்."

"பாட்டி உங்களுக்கு சொன்ன புரியாது. நான் ஒரு பத்திரிகை போட்டோகிராபர். நான் இன்னை.." என்று கூறியவாரே தன் கமெராவை அனிச்சையாக எடுக்க முயன்றாள். காணவில்லை!!

"ஓடி வருகையில் விழுந்திருக்குமோ?" என்றெண்ணி, கேமராவை தேட வெளிய ஓடத்துவங்கினால்.

"இதைத்தான தேடற?" என்றாள் பாட்டி.

சட்டென்று நின்று திரும்பி, 'ஆமாம்!'... "எப்படி உங்களுக்கு கிடைத்தது" என்றாள் திகைப்புடன்.

"உட்கார். டீ குடி. சொல்றேன்."

"ஐயோ! உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது.. என்னை சிலர் துறத்.." என்று அவள் கூறும்போதே, கிழவி இவளை உற்றுப்பார்த்தாள். கண்கள் விரிய, பெரிய போட்டு, வெள்ளை முடி, சுருங்கிய உடல். கொஞ்சம் பயந்துதான் போனாள் ரம்யா. அமர்ந்தாள். அருமையான டீ.

"உன்னை அதோ தெரிகிறதே. அந்த கதவு வழியாகத்தான் அனுப்பப்போகிறேன்." என்று அந்த வெளீர் இடுக்கு கதவை காண்பித்தாள்.

"தேங்க்ஸ் பாட்டி."

"தேநீர் சுடுகிறதா?" என்றாள்.

"இல்லை பாட்டி. நல்லா இருக்கு. ஆனா சுடலை. சூடா இருந்த இன்னும் சூப்பரா இருந்துருக்கும்."

"இனி சுடாது."

"ம்ம்ம்?" என்றாள் டீ சிப்பிய படி, கோப்பைக்குள்.

நகைத்துவிட்டு, "சரி. உனக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதும் இருக்கா?"

ரம்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவள் பார்வையும் அதையே சொன்னது.

"உனக்கு உன் தாத்தாவை பார்க்க வேண்டுமா?"

"என்ன பாட்டி கேட்கறிங்க. அவர் இறந்து போய் பல வர்ஷம் ஆச்சு. இப்போ எப்படி?"

"நீ இறந்து போய் இருபது நிமிஷம் ஆச்சு."

"ஹா..ஹா.. என்ன பாட்டி, நீங்க பாலா படத்துல வர்ற சாமியார் மாதிரியா?. கஞ்சா கிஞ்சா அடிச்சுருக்கிங்களா?"

"இல்லை. உன்னை ஒரு தோட்டா துளைத்து இறந்துவிட்டாய். மார்பில் ரத்தக்கறை இருக்கும் பார்."

இருந்தது.

"அது நான் ஓடி வந்தப்போ நிறைய இடத்துல அடி பட்டுது. அதுல ஒண்ணா இருக்கும்."

"நம்புவதற்கு கடினம்தான். இது ஆன்மாக்களின் உலகம். கொச்சையாக சொல்லவேண்டும் என்றால் ஆவிகள் உலகம். வந்தனம்"

"பாட்டி. தயவுசெய்து விளையாடாதீங்க."

"உனது நிறைவேறாத ஆசைகள்தான் உன்னை இங்கு கொண்டு வந்திருக்கிறது. அது நிறைவு பெற்றவுடன் நீ இங்கிருந்து விடுதலை அடைவாய். சிலருக்கு நிறைவேறாமலே போய்விடும். அவர்கள் ஆவிகளாகவே இருப்பார்கள். உனது ஆசைதான் என்னென்ன?"

"ஹலோ.. பட்டி. நீங்க இன்னுமா இதெல்லாம் பெனாத்திட்டு இருக்கீங்க? திஸ் இஸ் ட்வென்டி பஸ்ட் செஞ்சுரி. இப்போ வந்து பேய் பூதம்னுட்டு. எனக்கு ரெண்டு காதும் சேத்து 16 ஓட்டை. fashion. இன்னும் குடுத்த இடம் இல்லை. ட்ரை பண்ணாதிங்க."

"பதிநேழாவதர்க்கு ஏற்ப்பாடு செய்கிறேன். வேறேதும் ஆசை? உனக்கு உன் தாத்தாவை பார்க்க வேண்டுமா?"

"கண்டிப்பாக. எங்கே இருக்கிறார்? தாத்தா... தத்தா.." என்று பலமாக சிரிக்க துவங்கினாள்.

"உனது தாத்தாவின் ஆசை உன் கல்யாணத்தை பார்க்க வேண்டும் என்பது. இனி அது நடக்காது. அவர் ஆசையை போக்க பயிற்ச்சிகள் தர வேண்டும். தியானம் செய்தால் தேறிவிடுவார்."

ரம்யாவிற்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. " Sorry.. this is too much!"

"சரி நீ நம்ப வேண்டாம். அதோ அந்தக்கதவை திறந்து உள்ளே போ. உனக்கே தெரியும்."

"கண்டிப்பாக. பார்த்துட்டா போச்சு." என்று கட கடவென்று கதவருகில் சென்று திறந்தாள்.

பளீர் வெள்ளை. கண்கள் கூசியது. உள்ளே ஒரு அடி எடுத்து வைத்தாள். அப்போதுதான் அவள் வயிற்றில் ஏதோ பயம் கவ்வியது.
'நல்லா பாத்தியா? போயிட்டாளா? செக் பண்ணுங்கடா' - என்று அவளை துரத்தியவன் கேட்டது ஞாபகம் வந்தது.
'ஒரு வேளை பாட்டி உண்மை சொல்கிறாளோ?'. பின்னால் திரும்பிப்பார்த்தாள்.

"வாப்பா ராஜேஷ். உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்." என்ற பாட்டியின் குரலோடு கதவு மூடிக்கொண்டது. அவள் உறைந்து நின்றாள்.

"ரம்யா!" - ஒரு வயதானவரின் குரல் கேட்டது."

என்ன பார்த்தா? அது யாரு? - அதை படிப்பவர்கள் முடிவு பண்ணட்டும்னு விட்டுட்டேன் சார். நல்லாத்தான சார் இந்த காதை இருக்கு? ஆனாலும் பிரசுரம் ஆகலை. பயங்கரமா வருத்தப்பட்டேன். எனக்கு ஒரு கதையாவது பிரசுரமாகனும்னு ஆசை சார். என்ன பண்றது? ஹும்ம்... ஆனாலும் நான் முயற்ச்சிக்காம இல்ல. இன்னொரு கதை எழுதி அனுப்பினேன். ஒரு பக்கம் வர்ற மாதிரி. அட்லீஸ்ட் அத போடுவாங்கன்னு. அது இதுதான்.

"
ராதா அந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். ராம் மிக மெல்ல அவளை அணுகினான்.

"ராதா நல்லா இருக்கியா?"

அவள் திடுக்கிட்டு,"யார் நீ?" என்றாள்.

"என்னைத் தெரியலை?"

ஒரே க்ஷணத்தில் ராதா கண்டுகொண்டாள். "ராம்!! ராம்..!! நீயா? என்னை பார்க்க வந்தியா? என்னை தனியா போகவிட்டுடியேடா!"

அணைத்துக்கொண்டாள்.

"என்னை மன்னிச்சுடு ராதா. அன்னைக்கு மரணம் கூட என்னை வேருத்துருச்சு..நான் அன்னைக்கு பிழைச்சுருக்கவே கூடாது. பிழைக்க வெச்சுட்டாங்க."

"36 வர்ஷம் காத்திருக்கேன்."

"நான் என் வாழ்க்கைல..ச்ச..", சிரித்து.."நான் இறந்த பிறகுகூட உன்னை சந்திப்பேன்னு எதிர்பாக்கல. ரொம்ப வினோதமா இருக்கு."

"இதென்ன தழும்பு.." என்று நேற்றியைக்காட்டி கேட்டாள்.

"மரணம் தந்த வடு"

"உனக்கு அழகா இருக்குடா." என்றாள்.

"நீ என்னை இன்னுமா ரசிக்கற? நீதான் அப்படியே இருக்க"

"நான் அழகா இருக்கும்போதே போயிட்டேனே..." என்று சிரித்தாள்.

"உன்னை இங்க பாத்ததும், இதுதான் சொர்க்கம்னு நினைச்சுட்டேன்."

"இன்னும் மாறலை நீ.." என்று வெட்கப்பட்டாள். வெள்ளையாக.

சற்று நேரம் காதல் மௌனம்.

"நான் உன்னோட வாழனும்ன்னு ஆசைலதான் இன்னும் இங்க இருக்கேன்."

"வாழரப்போதான் நமக்கு தைரியம் இல்லை..வா இப்போவே வாழலாம்."

"நீ இதை சொல்வன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா ஆவிகளுக்கு ஆசை தீர்ந்துருசுன்னா, சொர்கத்துக்கோ நரகத்துக்கோ கேளம்பிகிட்டே இருப்பாங்களாம். எனக்கும் உனக்கும் சேந்து வாழத்தான் ஆசை. அப்படி பண்ணோம்னா, நம்ம ஆசைகள் நிறைவேறி, வேற வேற எடத்துக்கு போயிட்டோம்னா?"

"இப்படி ஒரு சிக்கலா?"

சற்று யோசித்துவிட்டு, "நாம ரெண்டுபேரும் சொர்கத்துக்குதான் போவோம். வா. கவலைப்படாதே!"

"நீ ஆவியா வந்து என்னை பாப்பான்னு எதிர்பாத்தியா? இல்லைல்ல? ஏதாவது எதிர்பாக்காம நடந்துருசுன்னா?"

"நீ ஏன் இன்னும் அதே மாதிரி பேசற?"

"பேசாம நாம ரெண்டு பேரும் ஒண்ணுமே பண்ண வேண்டாம். இங்கயே இருந்துடலாம். இப்படியே பேசிட்டு. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு. உன்னை இதுக்கு மேலையும் பிரிய மனசில்லை."

"இப்படி யோசியேன். ஒரு வேளை நாம ரெண்டு பேரும் சொர்கத்துக்கு போயிட்டா?"

"நீ ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணவன்..சத்யமா நரகம்தான்" என்று சிரித்தாள்.

அவனும் சிரித்துவிட்டு, "எனக்கு நம்பிக்கை இருக்கு. வா!"

"டேய்! புரிஞ்சுக்கோடா என்னால உன்னை மறுபடியும் பிரிய முடியாது.."

"சரி. நாம் எப்போதும் பண்ணுவதை பண்ணுவோமா?"

"என்னது?" என்றாள்.

இரண்டு விரல்கள் நீட்டி - "தொடு" என்றான்.

"பாத்தியா! நீ இப்படியெல்லாம் பேசி எவ்வளவு நாள் ஆச்சு? ஞாபகங்கள் மட்டும்தாண் இருந்துது. இப்போ நீயே வந்துட்ட. என்னை விட்டுடுடா ப்ளீஸ். நான் உன்னை பாத்துட்டே இருக்கேன். போதும்."

"ராதா! சொல்வதை கேள். எனக்கு உன்ன மறுபடி ஏமாற்ற மனதில்லை. தொடு. சொர்கமோ நரகமோ. இருவரும் சேர்ந்திருந்தால் போதும். நான் உன்னோட வாழ வேண்டும்,. தொடு.!"

"அன்னைக்கு வாழறப்போ சாகறதுக்கு தொட சொன்ன. தொட்டேன். இப்போ இறந்ததுக்கு அப்பறம் வாழறதுக்கு தொட சொல்ற. ஆனா ஒண்ணுடா. இப்படி ஒரு crazy conversation நமக்குள்ள நடந்ததே இல்ல. இல்ல? சொர்க்கம் நரகம்ன்னு. எவ்வளவோ சண்டை! ஆனா இது ஒரு மாதிரி புதுசா இல்ல?" சிரித்தாள்.

"தொடு ராதா!"

"வேண்டாமே டா..பயம்ம்மா இருக்கு.."

"தொடு!!!"

தொட்டாள்

"

அவ்வளவுதான் சார். இதுலயும் முடிவு உங்க கைலதான். இந்த கதைக்கு பாராட்டெல்லாம் கெடைச்சுது. ஆனா பிரசுரம் ஆகலை. ஒரு பக்கத்துல இது அடங்காதாம். அட வெங்காயம் ரெண்டு பக்கத்துல பிரிண்ட் பண்ணு! செம்மையா கடுப்பாகிட்டேன் சார்.

நேர பத்திரிகை ஆசிரியரை போய் பாத்தேன். "இதெல்லாம் பழைய சரக்கு சார். புதுசா யோசிச்சு எழுதுங்க" என்றாரே பார்க்கணும். என்ன பண்ண முடியும் சொல்லுங்க? மறுபடி ஒரு காதை எழுதி அனுப்பிருக்கேன்.

ரொம்ப சாதாரண காதை. பார்ப்போம்.

சார் நீங்களே சொல்லுங்க. நான் ரொம்ப நல்லா மனுஷன் சார். இந்த ஒரு ஆசை நிறைவேறாம இப்போ ஆவியா அலையறேன். இந்த கதை பிரசுரமாகனும் சார். வேண்டிக்கோங்க. நான் பாட்டுக்கு என் வேலைய பாக்க போய்டுவேன். இந்த "ஆவிகள்" பத்திரிகை ஓட ஆசிரியர் ரொம்ப நல்லவர்ன்னு கேள்வி. பார்க்கலாம்."

இந்த கதை பிரசுரமாகனும் சார். வேண்டிக்கோங்க. நான் பாட்டுக்கு என் வேலைய பாக்க போய்டுவேன். இந்த "ஆ.வி." பத்திரிகை ஓட ஆசிரியர் ரொம்ப நல்லவர்ன்னு கேள்வி. பார்க்கலாம்.