சார், ஒரு சலனமற்ற மாலை வேளையில் என் அறையின் ஜன்னலோரம் அமர்ந்து இந்தக்கதையை எழுத ஆரம்பித்தேன்."வணக்கம் வாசகரே. ஒரு மாலையின் ஆரம்ப வேளையில் என் அறையின் ஜன்னலோரம் அமர்ந்து இந்தக்கதையை எழுத ஆரம்பித்தேன்."ரம்யா அழகானவள். அவள் ரம்யவாகவே இருப்பதால்தான் அழகோ என்னவோ. தெரியவில்லை. பத்திரிகை போடோகிராபர். ஆனால் இப்போது தன் உயிருக்காக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் அவளை மேலும் வர்ணித்து உங்கள் டெஸ்டோஸ்டிரோன்களின் சாபத்திற்கு ஆளாக விரும்பவில்லை. இது அட்ரினலின் தருணம்.அவள் சற்று நேரத்திற்கு முன்பு எடுத்த போட்டோ, சில பெரிய்ய தலைகளுக்கு தலைவலி குடுக்கக்கூடியவை. அவள் துறைமுகத்தில் எதோ கடத்தல் நடப்பதைப்பற்றி அறிந்த... 'டுமீல்'.. கொஞ்சம் பொறுங்கள். மேலும் விபரம் பிறகு கூறிகிறேன். அவளை சுட முயற்ச்சிக்கிறார்கள்... 'டுமீல்'... மீண்டும் காதடைக்கும் சத்தம்.இருட்டு. குறுகிய சந்துகளில் ஓடிக்கொண்டிருக்கிறாள் ரம்யா. 'எங்காவது மறைந்துகொள்ள இடம் கிடைக்காதா?' விடுக்கென்று இடதுபக்கம் இருந்த சந்து ஒன்றில் திரும்பினாள் . பிறகு வலது. வலது. இடது. பின்னால் பார்த்தாள். அவர்களை தொலைத்து விட்டேனா? சூப்பர். இல்லை. எதோ குரல் கேட்கிறது.'நல்லா பாத்தியா? போயிட்டாளா? செக் பண்ணுங்கடா' என்று அதட்டியது ஒரு குரல்.தப்பிக்க தருணம் இதுதான். சுற்று முற்று பார்த்தாள். அவள் இப்போது வந்தது ஒரு முட்டுச்சந்து. 'Damn!'. தெரு முனையில் ஒரு வீட்டில் இருந்து வெளிச்சம் வந்தது. 'இந்த நேரத்தில் யார் விழித்திரிக்கிரார்கள்?' வீட்டின் கதவு திறந்திருந்தது. விநோதமாக இருந்தாலும் இதுதான் தருணம். தப்பிக்க வேண்டும். விருட்டென்று உள்ளே சென்றாள்.உள்ளே சென்று கதவை தன் பின்பக்கம் மூடிக்கொண்டாள். திரும்பி, முதல் முறையாக அந்த வீட்டை கவனித்தாள். வினோதமான வீடு. பெரிய்ய ஹால். அவ்வளவுதான் வீடே. பின் சுவற்றில் ஒரு கதவு இருந்தது. அதன் இடுக்குகளில் இருந்து வெளீரென்று வெளிச்சம் கட்டுப்பாட்டுடன் சிந்தியது. அவ்வளவு பெரிய்ய ஹாலும் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று பூத்த, இன்னும் வாடாத பூக்கள், மர வேலைப்பாடுகள், விஸ்தாரமான இருக்கை...ஓ! அதில் யாரோ அந்தக்கதவை நோக்கி உட்கார்ந்திருந்தார்கள். ரம்யா மெல்ல அவர்கள் அருகில் சென்றாள். பக்கவாட்டாக அந்த சோபாவை கடந்து முன்னாள் வந்தாள். தேநீர் கோப்பையுடன் ஒரு கிழவி."வாம்மா.." என்றாள்"என்ன?!" , ரம்யாவிற்கு இந்த இடம், சூழல், கிழவி, எல்லாம் விநோதமாக இருந்தது. 'பின்ஜாம வேளையில் ஒருத்தி வீட்டிற்க்குள் நுழைந்தால், தேநீருடன், வாம்மா என்று வரவேற்ப்பார்களா என்ன?. முன் பின் அப்படி சென்றதில்லை நான்' என்று நகைத்துக்கொண்டாள்."உன்னைத்தான் எதிர்பாத்துட்டு இருக்கேன்."அரை முழுவதும் பரவி இருந்த சன்னமான குளிர் அவளை மேலும் அசௌகரியப்படுத்தியது."என்ன?! come again!?""உன்னைத்தான் எதிர்பாத்துட்டு இருக்கேன்." , கிழவி."என்னயா?""உட்காரும்மா.. டீ குடி.. இளைப்பாரு"விநோதங்களை உதறி விட்டு - "விளையாடாதிங்க பாட்டி. என்னை சிலர் துரத்திட்டு வர்றாங்க. நான் தப்பிக்கணும். பின் பக்கம் ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க.. நான் போய்டறேன்.", என்றாள்."கவலைப்படாதே. அவர்கள் உன்னை துரத்த மாட்டார்கள்.""பாட்டி உங்களுக்கு சொன்ன புரியாது. நான் ஒரு பத்திரிகை போட்டோகிராபர். நான் இன்னை.." என்று கூறியவாரே தன் கமெராவை அனிச்சையாக எடுக்க முயன்றாள். காணவில்லை!!"ஓடி வருகையில் விழுந்திருக்குமோ?" என்றெண்ணி, கேமராவை தேட வெளிய ஓடத்துவங்கினால்."இதைத்தான தேடற?" என்றாள் பாட்டி.சட்டென்று நின்று திரும்பி, 'ஆமாம்!'... "எப்படி உங்களுக்கு கிடைத்தது" என்றாள் திகைப்புடன்."உட்கார். டீ குடி. சொல்றேன்.""ஐயோ! உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது.. என்னை சிலர் துறத்.." என்று அவள் கூறும்போதே, கிழவி இவளை உற்றுப்பார்த்தாள். கண்கள் விரிய, பெரிய போட்டு, வெள்ளை முடி, சுருங்கிய உடல். கொஞ்சம் பயந்துதான் போனாள் ரம்யா. அமர்ந்தாள். அருமையான டீ."உன்னை அதோ தெரிகிறதே. அந்த கதவு வழியாகத்தான் அனுப்பப்போகிறேன்." என்று அந்த வெளீர் இடுக்கு கதவை காண்பித்தாள்."தேங்க்ஸ் பாட்டி.""தேநீர் சுடுகிறதா?" என்றாள்."இல்லை பாட்டி. நல்லா இருக்கு. ஆனா சுடலை. சூடா இருந்த இன்னும் சூப்பரா இருந்துருக்கும்.""இனி சுடாது.""ம்ம்ம்?" என்றாள் டீ சிப்பிய படி, கோப்பைக்குள்.நகைத்துவிட்டு, "சரி. உனக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதும் இருக்கா?"ரம்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவள் பார்வையும் அதையே சொன்னது."உனக்கு உன் தாத்தாவை பார்க்க வேண்டுமா?""என்ன பாட்டி கேட்கறிங்க. அவர் இறந்து போய் பல வர்ஷம் ஆச்சு. இப்போ எப்படி?""நீ இறந்து போய் இருபது நிமிஷம் ஆச்சு.""ஹா..ஹா.. என்ன பாட்டி, நீங்க பாலா படத்துல வர்ற சாமியார் மாதிரியா?. கஞ்சா கிஞ்சா அடிச்சுருக்கிங்களா?""இல்லை. உன்னை ஒரு தோட்டா துளைத்து இறந்துவிட்டாய். மார்பில் ரத்தக்கறை இருக்கும் பார்."இருந்தது."அது நான் ஓடி வந்தப்போ நிறைய இடத்துல அடி பட்டுது. அதுல ஒண்ணா இருக்கும்.""நம்புவதற்கு கடினம்தான். இது ஆன்மாக்களின் உலகம். கொச்சையாக சொல்லவேண்டும் என்றால் ஆவிகள் உலகம். வந்தனம்"
"பாட்டி. தயவுசெய்து விளையாடாதீங்க.""உனது நிறைவேறாத ஆசைகள்தான் உன்னை இங்கு கொண்டு வந்திருக்கிறது. அது நிறைவு பெற்றவுடன் நீ இங்கிருந்து விடுதலை அடைவாய். சிலருக்கு நிறைவேறாமலே போய்விடும். அவர்கள் ஆவிகளாகவே இருப்பார்கள். உனது ஆசைதான் என்னென்ன?""ஹலோ.. பட்டி. நீங்க இன்னுமா இதெல்லாம் பெனாத்திட்டு இருக்கீங்க? திஸ் இஸ் ட்வென்டி பஸ்ட் செஞ்சுரி. இப்போ வந்து பேய் பூதம்னுட்டு. எனக்கு ரெண்டு காதும் சேத்து 16 ஓட்டை. fashion. இன்னும் குடுத்த இடம் இல்லை. ட்ரை பண்ணாதிங்க.""பதிநேழாவதர்க்கு ஏற்ப்பாடு செய்கிறேன். வேறேதும் ஆசை? உனக்கு உன் தாத்தாவை பார்க்க வேண்டுமா?""கண்டிப்பாக. எங்கே இருக்கிறார்? தாத்தா... தத்தா.." என்று பலமாக சிரிக்க துவங்கினாள்."உனது தாத்தாவின் ஆசை உன் கல்யாணத்தை பார்க்க வேண்டும் என்பது. இனி அது நடக்காது. அவர் ஆசையை போக்க பயிற்ச்சிகள் தர வேண்டும். தியானம் செய்தால் தேறிவிடுவார்."ரம்யாவிற்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. " Sorry.. this is too much!""சரி நீ நம்ப வேண்டாம். அதோ அந்தக்கதவை திறந்து உள்ளே போ. உனக்கே தெரியும்.""கண்டிப்பாக. பார்த்துட்டா போச்சு." என்று கட கடவென்று கதவருகில் சென்று திறந்தாள்.பளீர் வெள்ளை. கண்கள் கூசியது. உள்ளே ஒரு அடி எடுத்து வைத்தாள். அப்போதுதான் அவள் வயிற்றில் ஏதோ பயம் கவ்வியது.
'நல்லா பாத்தியா? போயிட்டாளா? செக் பண்ணுங்கடா' - என்று அவளை துரத்தியவன் கேட்டது ஞாபகம் வந்தது.
'ஒரு வேளை பாட்டி உண்மை சொல்கிறாளோ?'. பின்னால் திரும்பிப்பார்த்தாள்."வாப்பா ராஜேஷ். உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்." என்ற பாட்டியின் குரலோடு கதவு மூடிக்கொண்டது. அவள் உறைந்து நின்றாள்."ரம்யா!" - ஒரு வயதானவரின் குரல் கேட்டது."என்ன பார்த்தா? அது யாரு? - அதை படிப்பவர்கள் முடிவு பண்ணட்டும்னு விட்டுட்டேன் சார். நல்லாத்தான சார் இந்த காதை இருக்கு? ஆனாலும் பிரசுரம் ஆகலை. பயங்கரமா வருத்தப்பட்டேன். எனக்கு ஒரு கதையாவது பிரசுரமாகனும்னு ஆசை சார். என்ன பண்றது? ஹும்ம்... ஆனாலும் நான் முயற்ச்சிக்காம இல்ல. இன்னொரு கதை எழுதி அனுப்பினேன். ஒரு பக்கம் வர்ற மாதிரி. அட்லீஸ்ட் அத போடுவாங்கன்னு. அது இதுதான்."ராதா அந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். ராம் மிக மெல்ல அவளை அணுகினான்."ராதா நல்லா இருக்கியா?"அவள் திடுக்கிட்டு,"யார் நீ?" என்றாள்."என்னைத் தெரியலை?"ஒரே க்ஷணத்தில் ராதா கண்டுகொண்டாள். "ராம்!! ராம்..!! நீயா? என்னை பார்க்க வந்தியா? என்னை தனியா போகவிட்டுடியேடா!"அணைத்துக்கொண்டாள்."என்னை மன்னிச்சுடு ராதா. அன்னைக்கு மரணம் கூட என்னை வேருத்துருச்சு..நான் அன்னைக்கு பிழைச்சுருக்கவே கூடாது. பிழைக்க வெச்சுட்டாங்க.""36 வர்ஷம் காத்திருக்கேன்.""நான் என் வாழ்க்கைல..ச்ச..", சிரித்து.."நான் இறந்த பிறகுகூட உன்னை சந்திப்பேன்னு எதிர்பாக்கல. ரொம்ப வினோதமா இருக்கு.""இதென்ன தழும்பு.." என்று நேற்றியைக்காட்டி கேட்டாள்."மரணம் தந்த வடு""உனக்கு அழகா இருக்குடா." என்றாள்."நீ என்னை இன்னுமா ரசிக்கற? நீதான் அப்படியே இருக்க""நான் அழகா இருக்கும்போதே போயிட்டேனே..." என்று சிரித்தாள்."உன்னை இங்க பாத்ததும், இதுதான் சொர்க்கம்னு நினைச்சுட்டேன்.""இன்னும் மாறலை நீ.." என்று வெட்கப்பட்டாள். வெள்ளையாக.சற்று நேரம் காதல் மௌனம்."நான் உன்னோட வாழனும்ன்னு ஆசைலதான் இன்னும் இங்க இருக்கேன்.""வாழரப்போதான் நமக்கு தைரியம் இல்லை..வா இப்போவே வாழலாம்.""நீ இதை சொல்வன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா ஆவிகளுக்கு ஆசை தீர்ந்துருசுன்னா, சொர்கத்துக்கோ நரகத்துக்கோ கேளம்பிகிட்டே இருப்பாங்களாம். எனக்கும் உனக்கும் சேந்து வாழத்தான் ஆசை. அப்படி பண்ணோம்னா, நம்ம ஆசைகள் நிறைவேறி, வேற வேற எடத்துக்கு போயிட்டோம்னா?""இப்படி ஒரு சிக்கலா?"சற்று யோசித்துவிட்டு, "நாம ரெண்டுபேரும் சொர்கத்துக்குதான் போவோம். வா. கவலைப்படாதே!""நீ ஆவியா வந்து என்னை பாப்பான்னு எதிர்பாத்தியா? இல்லைல்ல? ஏதாவது எதிர்பாக்காம நடந்துருசுன்னா?""நீ ஏன் இன்னும் அதே மாதிரி பேசற?""பேசாம நாம ரெண்டு பேரும் ஒண்ணுமே பண்ண வேண்டாம். இங்கயே இருந்துடலாம். இப்படியே பேசிட்டு. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு. உன்னை இதுக்கு மேலையும் பிரிய மனசில்லை.""இப்படி யோசியேன். ஒரு வேளை நாம ரெண்டு பேரும் சொர்கத்துக்கு போயிட்டா?""நீ ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணவன்..சத்யமா நரகம்தான்" என்று சிரித்தாள்.அவனும் சிரித்துவிட்டு, "எனக்கு நம்பிக்கை இருக்கு. வா!""டேய்! புரிஞ்சுக்கோடா என்னால உன்னை மறுபடியும் பிரிய முடியாது..""சரி. நாம் எப்போதும் பண்ணுவதை பண்ணுவோமா?""என்னது?" என்றாள்.இரண்டு விரல்கள் நீட்டி - "தொடு" என்றான்."பாத்தியா! நீ இப்படியெல்லாம் பேசி எவ்வளவு நாள் ஆச்சு? ஞாபகங்கள் மட்டும்தாண் இருந்துது. இப்போ நீயே வந்துட்ட. என்னை விட்டுடுடா ப்ளீஸ். நான் உன்னை பாத்துட்டே இருக்கேன். போதும்.""ராதா! சொல்வதை கேள். எனக்கு உன்ன மறுபடி ஏமாற்ற மனதில்லை. தொடு. சொர்கமோ நரகமோ. இருவரும் சேர்ந்திருந்தால் போதும். நான் உன்னோட வாழ வேண்டும்,. தொடு.!""அன்னைக்கு வாழறப்போ சாகறதுக்கு தொட சொன்ன. தொட்டேன். இப்போ இறந்ததுக்கு அப்பறம் வாழறதுக்கு தொட சொல்ற. ஆனா ஒண்ணுடா. இப்படி ஒரு crazy conversation நமக்குள்ள நடந்ததே இல்ல. இல்ல? சொர்க்கம் நரகம்ன்னு. எவ்வளவோ சண்டை! ஆனா இது ஒரு மாதிரி புதுசா இல்ல?" சிரித்தாள்."தொடு ராதா!""வேண்டாமே டா..பயம்ம்மா இருக்கு..""தொடு!!!"தொட்டாள்"அவ்வளவுதான் சார். இதுலயும் முடிவு உங்க கைலதான். இந்த கதைக்கு பாராட்டெல்லாம் கெடைச்சுது. ஆனா பிரசுரம் ஆகலை. ஒரு பக்கத்துல இது அடங்காதாம். அட வெங்காயம் ரெண்டு பக்கத்துல பிரிண்ட் பண்ணு! செம்மையா கடுப்பாகிட்டேன் சார்.நேர பத்திரிகை ஆசிரியரை போய் பாத்தேன். "இதெல்லாம் பழைய சரக்கு சார். புதுசா யோசிச்சு எழுதுங்க" என்றாரே பார்க்கணும். என்ன பண்ண முடியும் சொல்லுங்க? மறுபடி ஒரு காதை எழுதி அனுப்பிருக்கேன்.ரொம்ப சாதாரண காதை. பார்ப்போம்.சார் நீங்களே சொல்லுங்க. நான் ரொம்ப நல்லா மனுஷன் சார். இந்த ஒரு ஆசை நிறைவேறாம இப்போ ஆவியா அலையறேன். இந்த கதை பிரசுரமாகனும் சார். வேண்டிக்கோங்க. நான் பாட்டுக்கு என் வேலைய பாக்க போய்டுவேன். இந்த "ஆவிகள்" பத்திரிகை ஓட ஆசிரியர் ரொம்ப நல்லவர்ன்னு கேள்வி. பார்க்கலாம்."இந்த கதை பிரசுரமாகனும் சார். வேண்டிக்கோங்க. நான் பாட்டுக்கு என் வேலைய பாக்க போய்டுவேன். இந்த "ஆ.வி." பத்திரிகை ஓட ஆசிரியர் ரொம்ப நல்லவர்ன்னு கேள்வி. பார்க்கலாம்.
ramya kathai nallaave irukku....Good anbudan
ReplyDeletechithi
thanks chithi
ReplyDeletekathai nalla irukku. Amma,Appa
ReplyDelete