பெங்களூரில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்த என் மகன், மருமகள் பேரனோடு கோவிலுக்குச்சென்றிருன்தேன். சன்னதியில் அபிஷேகம் நடந்துகொண்டிருந்தது.
"தாத்தா வாட்ஸ் ஹாப்பனிங்?"
"வின்னி.. ஷூ..சும்மா இரு" என்றாள் என் மருமகள்.
"இருக்கட்டும்மா..இதெல்லாம் எப்போ பாக்க போறான். கேக்கட்டும்.. வின்னி கண்ணா. நாமல்லாம் டெய்லி குளிக்கற மாதிரி கடவுளும் குளிக்க வேண்டாமா. அதான் பண்றாங்க."
"வாட்ஸ் தட் யெல்லோ லிக்விட்?"
"தட்ஸ் கால்ட் டர்மரிக். நாம சோப்பு போடறோம் இல்ல? அது மாதிரி."
அபிஷேகம் முடிந்து அலங்காரத்திர்க்காக திரையை மூடினார்கள்.
"இப்போ வாட்ஸ் ஹாப்பனிங்?"
"டேய் வின்னி லீவ் தாத்தா அலோன்"
"இருடா கேட்டுட்டு போறான்.. வின்னி.. கடவுள் குளிச்சார்ல. இப்போ அவங்கள்ளாம் அவருக்கு அலங்காரம் பண்றாங்க.."
"வாட்ஸ் அலங்காரம்?"
"அலங்காரம் இஸ்... டெக்கரேஷன்..."
"டெக்கரேஷன்?"
"வின்னி டிரஸ் போட்டு விடறாங்க.. நவ் தட்ஸ் எனப்.. அப்பா இவன் இப்படித்தான்.. நீங்க பேச பேச அவனும் கேள்வி கேட்டுட்டே இருப்பான்.."
வின்னியின் முகத்தில் எதோ ஒரு கேள்வி மிச்சம் இருந்தது. நான் என் மகனை பொருட்படுத்தாமல், "என்ன கண்ணா?" என்றேன்.
"இட்ஸ் ஸ்டுபிட்! தே லெட் அஸ் வாட்ச் ஹிம் டேக் பாத். பட் வோண்ட் லெட் அஸ் வாட்ச் ஹிம் டிரஸ்?"
திரை விலகியது.