Monday, October 26, 2009

இயற்கை நங்கை....
முதுவேனில் வந்த பேதை.. இளவேனில் மங்கை ஆனாள்..
குளிர் காற்றின் தொடுகையிலே இலை மேனி சிவந்து போனாள்..
ஆசையின் உச்சத்தில் ஆடைகளை துறந்து நின்றாள்..
நாணத்தின் எச்சத்தில், பனிப்போர்வை போர்த்திக்கொண்டாள்..

Thursday, October 15, 2009

ஒரு மழை நாளில்..

எல்லா தினங்களும் ஒரே மாதிரி விடிவதில்லை. சில தினங்கள் இருளை விட்டு மெதுவாகசோம்பல் முறிக்கும் போதே ஆசிர்வதிக்கபடுகிறது. அதனிடம் நமக்குக்கொடுக்க நிறையஇருக்கிறது. எடுத்துக்கொள்வதும் கொள்ளாததும் நம் இஷ்டம். சில தினங்கள் எதோ ஊடலில்இருக்கும் காதலி, ஒற்றை சொல்லிலேயே பதில் சொல்வது போல நம்மிடம் அளவாகபேசிச்செல்லும். சில தினங்கள் நம்மை அவமானத்தால் குளிப்பாட்டுகின்றன. சில தினங்கள்கோபத்தை உமிழ்கின்றன. காரணங்கள் அதற்குத் தேவை இல்லை. காரணமே இல்லாமல் யாரோநம்மை திட்டுவது போலவும், நாம் அதை மெளனமாக ஆமோதிப்பதைப்போலவும் இருக்கும். சில தினங்கள் பயத்தையும், சில தினங்கள் கோபத்தையும் ,சில தினங்கள் விரக்தியையும், சில தினங்கள் வெறும் வெறுமையையும் தந்து செல்கின்றன... மிக அபூர்வமாக சில தினங்கள் நம்மிடம்நம்மைத் தந்து செல்கின்றன. அவை எப்போதும் மழை வந்து ஓய்ந்த தினங்களாகவே இருக்கின்றன.

அவை நம்மோடு பேசும். நம்மோடு அழும். நமக்கு ஆறுதல் சொல்லும். நம்மிடம் மன்னிப்புகேட்கும். செல்லமாக கோபித்துக்கொள்ளும்.. நமக்குத் தாலாட்டு பாடும். "என்ன நீ? இன்னும்வெளியில் வரவில்லையா? வா! உலகம் எவ்வளவு அழகு? பார்!" என்று அன்பாகக்குட்டும். மழைநாட்கள் மரத்தோடு, மனத்திற்கும் கொஞ்சம் ஈரம் சேர்த்துச் செல்கின்றன...

-----------

சின்ன வயது மழை நாட்கள் எனக்கு காதிதக்கப்பல்களையும், மொட்டை மாடி மழை குளியல்களையும், அதன் பிறகு வரும் காய்ச்சலையும், பள்ளி விடுமுறைகளையும் ஞாபகப்படுத்துகின்றன..

நான் 8 வது படித்துக்கொண்டிருந்தேன்.மதுரையில் அப்போது வெள்ளம்.. வைகை வெகு நாட்கள் கழித்து பொங்கினாள். பள்ளியில் காலாண்டு பரீட்சை நடந்து கொண்டு இருந்தது. பேருந்து வரவில்லை. எனது நண்பர்களையும் என்னையும் காரில் போட்டு எனது அப்பா மதுரை வெள்ளத்தின் ஊடே பள்ளிக்கு அழைத்து சென்றபோது அன்று பரீட்சை ரத்து செய்யப்பட்டுள்ள செய்தி தெரிந்தது...

அப்போது வெள்ளத்தில் வீடிழந்தவர்களைப் பற்றி யோசிக்க வில்லை, உயிரிழந்தவர்களை பற்றி யோசிக்க வில்லை, உடமையிழந்தவர்களைப் பற்றி யோசிக்கவில்லை... யோசிக்கத்தெரியவில்லை.. கணக்கு பரீட்சை அன்று இல்லை.. அவ்வளவுதான் தெரிந்தது..

மழையின் வீரியத்தை உணராத வயது அது... விடுமறையாக மட்டுமே தெரிந்த மழை நாள் அது..

----------------

நான் டி.வி.எஸ். பள்ளியில் படித்தபோது அதிகாலை ஆறு மணிக்கு பள்ளிப்பேருந்து எனது வீட்டு வாசலில் நிற்கும். தூக்கம் கலையும் முன் ஷூ சாக்ஸ் பவுடர் எல்லாம் போட்டு ஏன் அப்பாவுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருப்பேன். முதுகில் சற்றே கனத்த பை, கையில் சுட சுட இட்லியோ தோசையோ நூடில்சோ. தூரத்தில் பேருந்து வருவது அதன் முன் விளக்கின் உபயத்தில் தெரியும். நான் தினமும் பயணித்த பேருந்தின் எண் 2 . பேருந்து, நிறுத்தத்தில் நின்றவுடன் முதலில் யார் ஏறுவது என்ற போட்டி இருக்கும்.எப்போதும் தொற்றுப்போவேன்.. :)

நான் ஏறியவுடன் விறு விறுவென்று ஒட்டுனருக்குப்பின்னல் இருக்கும் இருக்கை வரிசையில் 5 வது இருக்கையில் அமர்ந்து சடாரென ஜன்னல் திறந்து வீட்டு வாசலில் நிற்கும் என் அம்மாவிடம் 'டாட்டா' காட்டுவேன்... அந்த 5 வது இருக்கை எனக்கென்றே ஒதுக்கப்பட்டது. பேருந்தின் கண்டக்டர் அக்காவிடம் பட்டா எழுதி வாங்காத குறை.


அன்று மழை பெய்து ஓய்ந்திருந்தது.. மழை நாளின் குளிரில் ஜன்னல்கள் சிக்கிக்கொண்டன.. ஜன்னலை திறக்க முடியவில்லை.. அம்மா வாசலிலிருந்து ஜன்னலையே பார்ப்பது தெரிந்தது. திறக்க முயன்றுகொண்டே இருந்தேன். ம்ஹூம்.. பேருந்து கிளம்பிவிட்டது. அம்மா அந்த ஜன்னலுக்கு டாட்டா காண்பித்தாள். நானும் உள்ளே இருந்து டாட்டா காண்பித்தேன்... ஜன்னலின் ஓரத்தில் தேங்கி இருந்த மழை நீர் ""Sorry brother... " என்று சொல்லிக்கொண்டே ஜன்னலில் வழிந்தது....

மழையிடம் செல்லமாக கோபித்துக்கொண்ட நாள் அது .. :)
----------------
எல்லோருக்கும் ஒரு 'மல்லிகா டீச்சர்' இருக்கத்தான் செய்கிறார். எனது மல்லிகா டீச்சரின் பெயர் "மேரி". எனக்கு A,B,C,D சொல்லிக்கொடுத்தவர். அவரது முகத்தையும், கொண்டையையும், பூ போட்ட குடையையும் தவிர வேறு எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை. (எல்லா டீச்சர்களும் ஏன் பூ போட்ட குடை வைத்திருக்கிறார்கள்? வெயிலோ, மழையோ, ஏன் அதை பிடித்துக்கொண்டே நடக்கின்றார்கள்?).

அவரை 14 ஆண்டுகள் கழித்து ஒரு மழை நாளின் மாலைப்பொழுதில் அவர் வீட்டில் சந்தித்தேன் :)

"டேய் லட்டூ.. எப்டி இருக்க? எவ்ளோ வளந்துட்டடா? எங்க படிக்கற? நல்லா படிக்கறியா? அம்மா அப்பா எல்லாம் எப்டி இருக்காங்க? எங்க இருக்கீங்க? உனக்கு டான்சில்ஸ் இருந்துதே? சரியா போயிடுச்சா?ஸ்கூல் நல்லா இருக்கா? ஏன்டா கண்ணா கேத்தி ஸ்கூல விட்டு போன?" - அவரிடம், கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருந்தது! என்னிடம் ஒன்றே ஒன்றுதான் "என்னை எப்டி ஞாபகம் வேசுருக்கிங்க?" என்று கேட்கத்தோன்றியது. ஆனால் கேட்கவில்லை..

நான் பார்த்து கொஞ்சம் வயதான மேரி மிஸ்ஸை.. அனால் அவர் UKG பாரதியைத்தான் பார்க்கிறார் என்று விழங்கியது.. எத்தனை பேருக்கு தங்கள் 17 வது வயதில் அம்மாவைத்தவிர இன்னொருவரால் "லட்டூ" என்று அழைக்கப்படும் பாக்கியம் இருந்திருக்கிறது? "நீ கொடுத்துவைத்தவனடா" என்றது அந்த மழை நாள்..

வீடு திரும்புகையில் இடிகள், "A for Apple" என்றது...
--------------

என் தோழியின் தோழி ஒருத்தி எனக்காக ஒரு மழை மாலையில் பாடிய பாடல், மழை பற்றியது.. இப்போதும் எனது அலைபேசியில் பதிவாக இருக்கிறது.. அது பாரதியின் "கற்றே வா!" என்ற வசன கவிதை.. பாடியவள் - அனு. எனது தோழி - சிந்துஜா. இருவருக்கும் நன்றி... அவ்வளவு இனிமை அந்த பாடல்..

"மழைக்காலம்.
மாலை நேரம்.
குளிர்ந்த காற்று வருகிறது.
மலைக்காற்று நல்லது.
கடற்காற்று மருந்து.
வான் காற்று நன்று.
காற்று தேவனை வணங்குவோம்
காற்றே வா, காற்றே வா
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு
மனதை மயக்குகின்ற இனிய வாசனையுடன் வா
காற்றே வா காற்றே வா!..

மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு,
மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா!
இலைகளின் மீதும்,
நீரலைகளின் மீதும் உராய்ந்து,
மிகுந்த ப்ராண - ரசத்தை எங்களுக்குக் கொண்டு வா! காற்றே வா!"

இன்னும், அனு பாடல் பயின்று கொண்டிருக்கிறாள் என்று நம்புகிறேன்.. வேண்டும் என்று விரும்பிகிறேன்..மழை வரும்போதெல்லாம் மனதில் அந்தப்பாடல் வரும்... பாடலை கேட்கும்போதெல்லாம் புலன்களில் மழை வரும்..

இப்போது இருவரும் என்னிடம் முன்புபோல் பேசுவதில்லை.. காரணம் - நான்!! உறவுகளின் முக்கியத்தை உணர்த்திய மழை அது..


--------------

ஒரு குளிர் நிரம்பிய மழை இரவில் கல்லூரி விடுதியில் படுத்திருந்த சக மாணவனுக்கு வலிப்பு வந்தது. அதன்பிறகு வலிப்பு வரும் காட்சியை பார்த்தாலே அந்த நண்பனும் பின் குளிர் நிரம்பிய இரவும் ஞாபகம் வரும்.

-------------
ஒரு இருள் படர்ந்த மழை நாளில் என் கல்லூரியின் அருகில் இருக்கும் குன்றின் மீது ஏறி, அமர்ந்து என் ஊரை கொஞ்சம் உயரத்தில் இருந்து பார்த்தேன்.. உலகம்தான் எவ்வளவு பெரிது? மிகச்சிறியவனாக உணர்ந்தேன்.. மேகம் கசிந்த நீர்த்துளியில் ஞானம் பெற்ற நாள் அது..
-------------

ஒரு மழை இரவில்தான் வெளித்திண்ணையில் இருந்த நாய்க்குட்டி குளிரில் விரைத்து செத்துப் போயிருந்தது.

-------------

ஒரு மழை நாளில்தான் எனது பத்தாம் வகுப்பு பரீட்சை முடிவுகள் வந்தது.. என்னால் மறக்க முடியாதை சந்தோஷ தினம் அது..

-------------

ஒரு மழை நாளின் மாலையில்தான் எனது நண்பன் இறந்து போனான்..

-------------

ஒரு மழை நாளின் இரவில்தான் எனது உயிர் தோழியிடம் தோல்வியின் அழுத்தத்தில் கதறி அழுதேன்.. எனக்காக கண்ணீர் சிந்த இன்னும் இரு விழிகள் இருப்பதை புரிந்தேன்...

-------------

இன்னும் எத்தனை எத்தனை மழை நாட்கள்? மழையின் ஈரப்பசையோடு நம் நினைவுகளில் ஒட்டிக்கொள்கின்றன, அதன் நிகழ்வுகள்..வாழ்வின் மிகுந்த மகிழ்ச்சிகளையும், அதனினும் மிகுந்த துயரங்களையும் இந்த மழை நாட்கள் தந்திருந்தாலும் அத்தனை கொடுமையாக இருக்கவில்லை.... மழையை பிடிக்காதவர் யார்? மழைக்குப் பிடிக்காதவர் யார்?