Sunday, August 16, 2009

ஹாப்பி பெர்த் டே!

வருடாவருடம்
வந்து போகும் என் நாள்
வழக்கத்திற்கு மாறாய்
பிரம்மிப்பின் வாசலில்
இழுத்து நிறுத்தியிருக்கிறது
என்னை!

நேற்றைய நள்ளிரவில்..

இதுவரை நானறிந்திராத
திசைகளினின்று நீண்டு...

கதகதப்பாய்
என் விரல் கோர்த்த கரங்கள்...

கைகுலுக்கிய தோழமைகள்...

இதம் நிறைத்த
தலைகோதல்கள் எல்லாம்..

என் இருப்பை முழுதாய்
அர்த்தப்படுத்திப் போயிருக்கின்றன!

துக்கத்தில் தூக்கம் தொலைத்த
இரவுகள் உண்டு...
மிதமிஞ்சிய மகிழ்வும்
உறங்க விடாதென்ற உண்மை
விளங்குகிறது இப்போது..

வாழ்த்துச் சுமந்து வந்த
வார்த்தைகள் எல்லாம்
பூக்களாய் மலர்ந்து
மணம் பரப்புகின்றன மனதிற்குள்...

திக்கெங்கிலும்
நிரம்பி வழியும் அன்பினை
சேர்த்தெடுக்கத் தவிக்கிறேன்...

இதயம் மலர்ந்து...
கண்கள் பனிக்க...

'என்றும் என்னோடிருங்களெ'ன
வேண்டுவதைத் தவிர்த்து
வேறொன்றும்
சொல்லத் தோன்றவில்லை
இப்போது!
------->>>>>> http://www.youtube.com/watch?v=yyUItb3tRrk <<<<<<<<------------

வியப்பாயிருக்கிறது! சில மாதங்கள் முன்பு வரை நானும் தனிமையும் மட்டுமாய் நிரப்பியிருந்த என் நாட்கள் இப்போது எல்லைகள் கடந்த தொடர்புகளோடு கண்முன் விஸ்வரூபமாய் விரிகின்றன. இத்தனை வருடங்களில் எந்தப் பிறந்தநாளும் இப்படி வாழ்த்துக்களால் நிரம்பி வழிந்ததாய் நினைவிலில்லை!
இவ்வளவு அன்பும் எனக்கே எனக்கா என்ற திகைப்பு மேலிட பூரிப்பில் திளைத்திருக்கிறேன்.

இரவு 8 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போனில் வாழ்த்திக்கொண்டேயிருந்த அப்புஹய் மிகச்சரியாய் இரவு 12 மணிக்கு... வழக்கம் போல தூங்கிப்போனாள்!!

நள்ளிரவில் வாழ்த்து சொன்ன வினோ! வாய்ஸ் மெயில்லில் 'ஹாப்பி பெர்த் டே!" பாடிய பூக்கா :)

நடுநிசியில் குறுந்தகவல் அனுப்பி விடியும் வரை யாராயிருக்குமென யோசிக்க வைத்து அதிகாலையில் உற்சாகம் மிகுத்து பாசமாய் வாழ்த்தினாள் ஜி3.
சொந்த ஊருக்கு போயிருக்கும் ஜி நியாபகமாய் வாழ்த்தியது வியப்பு!

மாமா அதை சித்தி சித்தப்பா தங்கைகள் தம்பிகள் இந்திய நண்பர்கள்... ஐ.எஸ்.டி. போட்டு வாழ்த்து சொன்னார்கள்.

அப்பாவின் கவிதையும் அம்மாவின் கடிதமும் இதம் சேர்த்தது! நான் அதிக நாட்கள் இங்கு (சிகாகோ) இருக்க முடியாமல் தடுப்பது இவைகள் தாம் :)

அனைத்திற்கும் மேலாக எனது நண்பர்கள் என்னுடைய பிறந்தநாளை கடற்கரையில் கொண்டாடியது. சில சமயம் சந்தோசத்திலும் மனம் கணமாகும். அது அத்தகைய தருணம். உணர்ச்சிகள் குவியலாய் வந்தாலும் அதை வெளிக்காடக்கூட நேரம் இல்லாமல் எனது நண்பர்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.அவ்வளவு அழகாய் இருந்தது அந்த மாலை... முதன்முதலாய் சிகாகோவும் அன்று எனக்க்குப்பிடிதிருந்தது!

அனைத்திற்கும், அனைவருக்கும் இங்கு என் அன்பைச் சொல்லிக் கொள்கிறேன். நன்றியிலும் நெகிழ்விலும் நிறைந்திருக்கிறேன்.. இன்று மீண்டும் புதிதாய்ப் பிறந்திருக்கிறேன்!!

பி.கு. : இவ்வளவு நாள் ஏன் நான் அன்பினால் நன்றி செய்யவில்லை என்று தெரியவில்லை. அனால் இனியும் செய்யவில்லை என்றல் என்னால் தூங்கக்கூட முடியுமா? தூக்கம் இழந்த இரவுகள் போதும்.. இனி சந்தோஷ நிம்மதியில் தூங்குவேன்... மீண்டும் - "என்றும் என்னோடிருங்கள்!!" என்று வேண்டுவதைத்தவிர வேறு என்ன செய்ய?? தெரியவில்லை....

Thursday, August 13, 2009

தரையிறங்கும் விமானங்கள்...எனக்கும் உயரத்திற்கும் சின்ன வயசிலிருந்து பந்தம் உண்டு. உயரங்கள் மீது எனக்கிருந்த பயம் கலந்த பிரியத்திற்கு தீனி போட்டது முதன்முதலில் மரங்கள்..தலையெல்லாம் பூக்கள் பூத்து காற்றின் பாடலை மொழிபெயர்த்தபடி மரங்கள் என்னை மேலே வர அழைத்தன. மரங்களிம் உச்சாணிக் கிளையில் பறவைகளின் கூட்டிற்கு பக்கத்தில் அமர்ந்து அடி வயிற்றில் பயம் உருள பூமியைப்பார்க்க வேண்டும் என்ற பரவசம் இப்போதும் என்னிடத்தில் இருக்கிறது.. அனால் நான் மரங்கள் ஏறுவதில் அவ்வளவு கில்லாடி இல்லை.

எத்தனை எத்தனை மரங்கள்? ஒவ்வொரு மரதிடமும் சொல்வதற்கு ஒரு கதை ('நேற்று இரவு இங்கே என்ன நடந்தது தெரியுமா?'), கொடுப்பதற்கு ஒரு அனுபவம் ('வா என் நிழலை அனுபவி!'), விடுப்பதற்கு ஒரு சவால் ('என் மீது ஏறிவிடுவாயா நீ?') இருந்தது. ஏற முடியாத வழுக்கல்களுடன் சில மரங்கள்..முள் வெளியோடு சில மரங்கள்.. மாரெலாம் தழும்போடு சில மரங்கள்.. பார்ப்பதற்கு வலுவாகத்தேரியும் கிளைகளும், கால் வைத்தவுடன் உடைந்துவிடும் என்று நன் ஏற முயன்று விழுந்தபோது தெரிந்தது.. அன்று முதல் மரம் ஏறும் ஆர்வம் குறைந்தது.அப்போது நாங்கள் குடியிருந்த வீடு மிகச் சிறியது. அடுத்து நாங்கள் குடியேறிய வீடிற்கு கொஞ்சம் உயரம் ஜாஸ்தி. அதன் மொட்டை மாடியில் இருந்து பார்த்தல் மரத்தின் உச்சந்தலை தெரியும். அட! இங்கிருந்து மரங்களே குள்ளமாக இருக்கிறதே! என்று மகிழ்ந்தேன். மரம் ஏறுவதை விட மொட்டை மாடி ஏறுவது சுலபமாக இருந்ததால், மொட்டை மாடியின் மீது காதல் கூடியது! அங்கிருந்து பார்த்தல் சுற்று வட்டாரம் மிக ரம்மியமாகத் தெரியும். அந்த வீட்டில், நான் வீட்டிற்குள் இருந்ததை விட மொட்டை மாடியில் இருந்ததே அதிகம். யாரேனும் விருந்தாளிகள் வந்தால் அம்மா சமையலறை ஜன்னலில் இருந்து என்னை அழைப்பாள். நானும் "வரேன் மா!" என்று இறங்கிவிடுவேன்..

அப்படி ஒரு நாள் என் அம்மா அழைத்தபோது நான் கவனிக்க வில்லை.. காரணம், நான் மாடியில் பேசிக்கொண்டிருந்தேன், என் பக்கத்தில் அமர்ந்த காகத்திடம்.

" இந்த உயரம் போதுமா? மேல பறக்கலாம் வா!" என்றது.

"என்னால முடியாதே!" என்று உதடு பிதுக்கினேன்.

"நான் சொல்லித்தரேன் வா!"

"வேணாம். பயமா இருக்கு.."

"மேல போனா மேகத்தை பாக்கலாம். பூமியை பாக்கலாம்.. கடல் கூட காமிக்கறேன்..வா!"

"ரெக்கை முளைக்கட்டும் வரேன்!"

அன்று முதல் பறக்கும் பறவை எல்லாம் விமானமாகத தெரிந்தது... அல்லது பறக்கும் விமானம் எல்லாம் பறவைகளாக தெரிந்தது. விமானங்களால் வசீகரிக்கப்படாத குழந்தைகள் உண்டா? அதன் "ந்கிய்ய்ய்ய்ய்ய்ய் ..." சத்தம் கேட்டால் தெருவில் போகும் சிறுவர்கள் அனைவரும் அண்ணாந்து பார்ப்பதை பார்த்திருக்கிறீர்கள்தானே!? எல்லோரும் ஒரே மாதிரி வாயை பிளந்து பார்ப்பதை பார்க்கவே கவிதையாக இருக்கும். ஒரு முறை அப்படி வாய் பிளந்து பார்த்துக்கொண்டு நடக்கையில் கல் தடுக்கி கீழே விழுந்து முட்டி சிராய்ந்த தழும்பு இன்னும் இருக்கிறது.

அன்று 'இனிமேல் நாம அதை பாக்கவே கூடாது' என்று முடிவு செய்தேன். வாரம் இரு முறை தவறாமல் "ந்கிய்ய்ய்ய்ய்ய்ய்..." என்று சத்தம் போட்டு என்னை சமாதானப்படுத்தியது.. கொஞ்ச நாளில் 'சரி பொழச்சு போ' என்று மண்ணித்து விட்டேன்.

கோடை விடுமுறைகளின் போது சென்னைக்கு என் அப்பாவோடு ரயிலில் செல்வேன். மதுரையில் இருந்து சென்னை போகும் எல்லோரும் ஏன் பாண்டியன் ரயிலிலேயே செல்கிறார்கள் தெரியவில்லை! அப்போது ரயிலின் தடக்-தடக்கில் உறங்கிவிடுவேன். அதிகாலையில் ரயில் மீனம்பாக்கம் கடக்கையில் என் அப்பா என்னை எழுப்பி விடுவார். கண் விழித்தவுடன் 'குயின் பிரா' என்ற சுவர் விளம்பரம் தெரியும். அதையும் தாண்டி மீனம்பாக்கம் விமான நிலையம் தெரியும். அப்போது ரயில் கடந்து செல்லும் அந்த சில வினாடிகள்தான் எனக்கும் விமானத்திற்கும் இருந்த மிக நெருங்கிய உறவு. நான் மீனம்பாக்கம் கடக்கையில் கண்டிப்பாக எதோ ஒரு விமானம் மேலே ஏறிக்கொண்டோ, தரையில் இறங்கிக்கொண்டோ இருக்கும்.

வெகு நாட்கள் கழித்து, ஒரு சிநேக சந்திப்பிற்கு மும்பை செல்ல நேர்ந்தது. அப்போதுதான் முதன் முதலில் விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு வந்தது. நண்பர்களுக்கும் சுற்றங்களுக்கும் அனுமதிக்கப்பட்ட எல்லையில் நின்று டாட்டா காண்பித்த கால்கள்,எல்லை தாண்டி விமான நிலையத்தின் உள்ளே சென்றது.

விமான நிலையங்களில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். கதைகளை எல்லாம் அலசிப்பார்த்தால் சில கதைகளின் தொடக்கம், இன்னொரு கதையின் முடிவில் இருக்கும். எல்லா விமான நிலயத்திலும் விடைபெறும் ஒருவருக்காக ஒரு துளிக் கண்ணீர், ஒரு மனைவியின் பிரார்த்தனை, ஒரு தாயின் தேடல், ஒரு குழந்தையின் காத்திருப்பு, ஒரு நண்பனின் மகிழ்ச்சி - அதன் கான்க்ரீட் சுவர்களில் இழைந்தோடுகிறது.

விமான நியாயத்தின் எல்லா சடங்குகளையும் முடித்து விட்டு நானும் விமானத்தில் ஏறினேன். ஏர் இந்தியா விமான -சிப்பந்திகள் 'ஒரு வேளை' விமானம் நீரில் இறங்கினால் எதோ ஒரு மஞ்சள் சமாசாரத்திற்குள் காற்று ஊத்தி பிழைதுக்கொள்ளுங்கள் என்றார்கள். அதுவரை வயிற்றினுள் பரவசத்தோடு பறந்த பட்டாம்பூச்சிகள், அதன் பிறகு கொஞ்சம் பயத்தோடு பறந்தன. அனைவருக்கும் இந்த 'ஒரு வேளை' பயங்கள் இருக்கத்தானே செய்கிறது? இந்த மாதிரி தருணங்களில்தான் நீங்கள் நானாவதும், நான் நீங்களாவதும் சாத்தியம் என்று படுகிறது. எல்லோருக்கும் அதே பயம். அந்த பயத்தின் விளிம்பில் கொஞ்சம் நம்பிக்கை.

இதோ விமானம் புறப்பட்டு விட்டது. கொஞ்ச நேரம் தரையில் ஊர்ந்தது. பிறகு திடீரென்று வேகம் பிடித்து பூமியை உதைத்து பறந்தது. வைரமுத்து காதலன் படத்தில் சொல்வது மாதிரி - வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருண்டது. மெல்ல, ஜன்னலில் வெளியே எட்டிப்பார்த்தேன். பூமி வேகமாக சுருங்கிக்கொண்டிருந்தது. கட்டம் கட்டமாக, பச்சையும் சிவப்புமாக வேற்று நிலங்கள். எதோ நவீன ஓவியம் போல் இருந்தது. மெல்ல மேல சென்று கொண்டிருக்கிறேன் என்ற உள்ளுணர்வு சிலீரென்று இருந்தது. இப்போது விமானம், முழுவதும் மேலே சென்றுவிட்டது போலும். சாய்மானமாக இருந்த விமானம் இப்போது நேராகப்பறக்க ஆரம்பித்தது. பைலட் ஒலி பெருக்கியில், விமானம் ஆட்டோ பைலட்டில் இருப்பதாகச் சொன்னார்.

ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். அப்போதுதான் எனக்கு வானம் வேறு, மேகம் வேறு என்று புலப்படுகிறது. வானம் இவ்வளவு நீ(ல)ளமா? மேகம் இவ்வளவு வெள்ளையா? அதன் அமைதியான அழகை வார்த்தைகள் வர்ணிக்க முடியாது. ஒரு முறையேனும் விமானத்தில் சென்று பாருங்கள்.ஏதோ சரஸ்வதி சபதம் பட 'செட்'டிற்குள் நுழைந்தது போல, சுற்றிலும் மேகங்கள் இருக்கும். ஜன்னலின் ஓரம் எட்டிப்பார்த்தேன், எங்கேயேனும் நாரதர் வேடத்தில் சிவாஜி தெரிகிறாரா என்று! இல்லை.

எனக்கென்னவோ மனிதனின் வாழ்வும் ஒரு விமானத்தின் பயணம் போல இருப்பதாக தோன்றுகிறது. முதலில் மெல்ல ஊர்ந்து, பிறகு எதிர்கால பயத்தோடு மெல்ல எழுந்து, அதன் பிறகு வாழ்வில் 'ஆட்டோ பைலட்' போட்டுவிட்டு, சுதந்திர வானில் அலைந்து திரிந்து, பின்னதொரு நேரத்தில் இறங்க வேண்டிய இடம் நெருங்கியவுடன், மீண்டும் இறங்கி, ஊர்ந்து முடியும் மனிதனின் வாழ்வும் ஒரு விமானத்தின் பயணம் போலத்தான் தோன்றுகிறது.

மும்பை நெருங்குகிறது. மேகங்களில் இருந்து கீழே இறங்கத்தொடங்குகிறது எனது விமானம். இப்போது பயம் கொஞ்சம் குறைந்து இருந்தது. மனம் லேசாகி இருந்தது. காரணமே இல்லாமல் "பறக்காத பறவைக்கெல்லாம், பறவை என்று பெயரில்லை.." என்ற பாடலை முனு முனுத்தேன். கீழே எட்டிப்பார்த்தேன்.

அதோ அங்கே ஒரு சிறுவன் மரம் ஏற முயற்சிக்கிறான். அதோ இன்னொருவன் காகத்தோடு பேசுகிறான். எங்கோ போகும் ரயிலில் இருந்து ஒரு சிறுவன் கை அசைக்கிறான். வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுவன் கல் தடுக்கி கீழே விழுகிறான்.

எங்கோ ஒரு விமானம் மேலே ஏறுகிறது.. எங்கோ ஒரு விமானம் தரை இறங்குகிறது..

பி.கு. : வாழ்கை என்றாலும், விமானம் என்றாலும், சீட் பெல்ட் அணிந்து கொள்வது, உத்தமம்

Tuesday, August 11, 2009

அன்பே வெங்கடாசலம் ..!

வெட்டவெளியில் தனியாய்
புலம்பியபடி நிற்கிறது
- ஒற்றைப் பனைமரமொன்று..

*****

எங்கோ வழிதவறி
மேசையின் பரப்பில்
பதறியலைகிறது
- ஓர் சிற்றெறும்பு...

*****

கோவிலில்,
சிந்தும் கண்ணீரை
எவருமறியாமல்
துடைத்துக் கொள்கிறாள் ...
- பிரகாரம் சுற்றும் பெண்

*****

இன்றேனும் தன் பிள்ளைக்கு
புது செருப்பு வாங்கித்தர வேண்டும் என்று தேய்கிறார்
- ஒரு தந்தை..

*****


*****

கலைக்கப்படும் என்று தெரியாமல்
கூடு கட்டிக்கொண்டிருக்கின்றன
- தேனீக்கள்..

*****

பறிக்கப்படும் என்று அறியாமல்
மலர்கின்றன
- பூக்கள்..

*****

தான் கடந்து வந்த பாதைகளை
காற்றோடு பேசிக்கொண்டிருக்கிறது
- கூரை மேல் வீசப்பட்ட சைக்கிள் டயர்..

*****

பேச்சிலும்...
மடல்களிலும்...
நியாபகக் குப்பிகளிலும்...
இட்டு நிறைத்த பின்னும்,
இன்னும் மிச்சமிருக்கும் காதலோடு காத்திருக்கிறான்
- ஒரு காதலன்..

*****

யாரும் வாழ்ந்திராத
அவ்வீட்டில்
எப்போதும்
- நிறைந்திருக்கிறது இருள்..

*****

எண்ணற்ற கனவுகளோடும்
கொஞ்சம் சிள்ளரைகளோடும்
எங்கோ தொடங்குகிறது
- ஒரு பயணம்..

*****

மெளனமாய்
கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்
- நான்!

*****
அதைவிட மௌனமாய்
உறங்கிக்கொண்டிருக்கிறார்
- திரு. வெங்கடாசலபதி...


Sunday, August 9, 2009

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்.. 3


எல்லாம் வல்ல பரமபிதாவே,
நேற்று நான் உண்ட
கோழியை உயிர்த்தெழச்செய்து ரட்சியும்...

மிகவும் சுவையாக இருந்தது.
ஆமென்...

Saturday, August 8, 2009

பாலகாண்டம்

சிறுவர்களின் உலகம் மிகவும் சிறியது. சலனமற்றது. இயல்பானது. பயம், அச்சம், அவமானம், தோல்வி,காதல், எதிர்காலம்.. எதுவும் அவர்களுக்கு தெரியாது. அவர்களது அதிகபட்ச பயம் காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போது கண் முன்னால் பிம்பங்களாக கையில் பிரம்போடு வரும் கணக்கு வாத்தியார்கள்தான்.. குழந்தைப் பருவத்தின் புதிர்களை கேள்விகள் ஆக்ரமித்தன.. நிறம் என்றால் என்ன? இசை என்றால் என்ன? வாசனை? தூக்கம் ஏன் வருகிறது? இன்று இரவு பூரி கிடைக்குமா? அவ்வளவுதான் அவர்களது கேள்விகள்.. இவை அனைத்திற்கும் பதில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் கேள்விகள் இருந்துகொண்டே இருக்கின்றன..

முதன் முதலில் 'மர'த்திற்கு 'மரம்' என்று பெயர் வைத்தவனுடைய பரவசம் அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் போனது மாதிரி, கால ஓட்டத்தில் கேள்விகள் தொலைந்து பயங்களாக மாறுகிறது..

எண்ணங்களில் பின்நோக்கி செல்கையில், அதோ அங்கு ஒரு சிறுவன் டி .வி.யில் 'டாம் அண்ட் ஜெர்ரி' பார்த்துக்கொண்டிருக்கிறான்... மனதில் எள்ளளவும் சலனம் இல்லை.. அவனது முழு கவனமும் டாம், ஜெர்ரியை பிடித்துவிடுமா? ஜெர்ரி எப்படி தப்பிக்க போகிறது? என்பதில் இருக்கிறது.. நன் அவன் அருகில் அமர்ந்ததை அவன் கவனிக்கவில்லை.. கண் முன்னாள் கைகளை அசைத்தேன்.. ம்ஹூம்...பிரயோஜனம் இல்லை... அருகிலேயே, அவன் சற்று முன் வரைந்து, பாதியில் விட்டிருந்த ஓவியம் இருந்தது. கூடவே சார்ட்,பென்சில், ரப்பர், வாட்டர் கலர். ஒரு வெள்ளைத்தாளை எடுத்து அவனுக்கு ஒரு கடிதம் எழுதினேன்..

வணக்கம்..

நல்லா இருக்கியா? உனக்கு என்ன வயசு? 8? 9? நான் நல்லா இருக்கேன்..இது உனக்கான கடிதம். முடிந்தால் நீ மட்டும் படித்துவிட்டு கிழித்துவிடு. உனக்கு என்னைத்தெரியாது. அனால் எனக்கு உன்னை நன்றாகத் தெரியும்.

நீ நன்றாக படம் வரைவியமே? ம்ம்ம்.. இதோ இந்த படத்தை ஏன் பாதியில் விட்டு விட்டாய்? இப்போது உனது வீட்டின் பரணில் புழுதி படர்ந்து இப்படியே இருக்கிறது.. முடிந்தால் முடித்து விடு. பிற்காலத்தில் நீ ஓவியம் வரையப்போவதில்லை.. பாட்டு கிளாஸ் ஒழுங்கா போக மறுக்கிறாயா? சென்றுவிடு. பின்னாளில் அடிக்கடி வருத்தப்படுவாய்.. நேற்று நீ 'காளி'யுடன் 'டூ' விட்டாயாமே? நாளைக்கே 'பழம்' விட்டு விடு.. 10 வயதிற்கு மேல் அவன் வேறு திசை, நீ வேறு திசை.. உனக்கு மிகவும் பிடித்த அந்தக் கரடி பொம்மை கொஞ்ச நாளில் தொலயப்போகிறது... கவலைப்படாதே. இரண்டு தினங்கள் அழுவாய். பிறகு பழகிவிடும்.

இன்னும் பதினைந்து வருடத்திற்குள் நீ அமெரிக்கா செல்ல இருக்கிறாய் தெரியுமா? உனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப் போவதில்லை. உன் அம்மாவின் வைராக்கியத்தை தகர்க்க போகிறோம் என்று அறிவாயா? உலகின் மிகப்பெரிய ஏரியில் குளிக்கப்போகிறாய் தெரியுமா? நயாகரா என்றால் என்னவென்று தெரியுமா? :)இன்னும் ஓர் ஆண்டில் நீ வேறு பள்ளி செல்ல இருக்கிறாய். அதன் அச்சம் அறிவாயா? புதிய நண்பர்கள், புதிய சூழல், புதிய அனுபவம் வரப்போவதை உணர்வாயா? அவர்களில் சிலர் இருப்பார்கள் சிலர் விடுப்பார்கள் சிலர் கொடுப்பார்கள் சிலர் எடுப்பார்கள் புரிவாயா? தெரிந்தோ தெரியாமலோ நீ மற்றவர்களுக்கு இழைக்கும் தவறுகளை ஜீரணிக்க முடியுமா உன்னால்?

இரு.. எங்கே போகிறாய்?.. ஹா ஹா.. லட்டு எடுத்து வரவா? இப்போதே குறைத்துக்கொள். நீ சைட் அடிக்கப்போகும் பெண்கள் உன்னயும் சைட் அடிக்க வேண்டுமெனில் :) வாய் நிறைய லட்டு.. கண் முழுக்கச் சிரிப்பு.. இதயம் முழுக்க மகிழ்ச்சி.. வரமடா இது.. அனுபவி! அட! இதை அனுபவிக்கத் தெரியுமா உனக்கு?

பள்ளியின் farewellன் போதும், கல்லூரியின் இருதியாண்டிலும் சிறு களங்கங்கள் வருவதை உணர்கிறாயா? ஒரு பெண்ணிற்க்காக தலை மயிர் துறப்பாய் எனத்தெரிந்தால் இப்போது இவ்வளவு நிம்மதியாக இருப்பாயா? நண்பனின் துரோகம் தாங்க முடியுமா உன்னால்? உன் பதின்ப வயதின் கனவு மிகப்பெரியது. கனவுகளைத் துரத்த தெம்பு இருக்கிறதா?

நான் இப்போது பார்க்கும் சிறுவர்கள் போல் நீ இல்லை. உனக்கு இன்டர்நெட் தெரியாது. கம்ப்யுட்டர் தெரியாது. பவர் ரேஞ்சர்ஸ் தெரியாது. உன் உலகம் மிக ஏளிமையானது. சில சமயம் பொறாமையாகக் கூட இருக்கிறது. இவ்வளவு கேள்விகள் இல்லை உன்னிடம். இவ்வளவு குழப்பங்கள் இல்லை. உன்னிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். இப்போது புரியாவிட்டாலும் மனதில் வைத்துக்கொள்.

எதிர்காலம் எப்போதும் நிலையற்றது. புரிந்துகொள். கொஞ்சம் கோபம் தவிர். நிதானம் கொள். மேலும் மேலும் கனவு காண். ஒரு நாள் நடக்கும். நண்பர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய். ஒன்றும் எதிர் பார்க்காதே. எதிரிகளைப் பேசவிடு. சிறு நீர் களிக்கையில் சிரித்துக்கொள்.

பொறாமைப் படுபவர்களைக் கண்டு கோபப்படாதே. அது ஒரு வகையான பாராட்டு. துரோகங்களை மன்னித்து விடு. மறக்காதே. முடிந்தால் 10ம் வகுகப்பிற்கு பிறகும் ‘ஜெயா' missசிடம் ட்யூஷன் போ. 8ம் வகுப்பிற்குப் பிறகு ‘தமிழை' இரண்டாம் மொழியாகப் பயில். பின்னாளில் தமிழ் உனக்கு பிடிக்கும். ஆனால் படிக்க முடியாமல் போகலாம்.

Shuttle, Piano, Skating, Cricket, Swimming, Vocals எதையும் முழுசாக கற்றுக்கொள்ள மாட்டாய். தவறு. தயவு செய்து ஏதேனும் ஒன்றை முழுமையாக கற்றுக்கொள். நிறைய புத்தகங்கள் படி.

பயணம் செய். பயணங்கள் தரும் அனுபவங்கள் வேறு எப்படியும் கிடைக்காது.

உறவுகளை கொஞ்சம் நேசி. நண்பர்கள் - இருப்பார்கள். உறவுகள் - எப்போதும் இருப்பார்கள். ரொம்பவும் நேர்மையாக இருக்காதே. பிழைக்கக் கற்றுக்கொள். முடிந்தவரை உதவி செய். எதையும் கற்றுக்கொள். மூச்சுத்திணரப் படி. திகட்டத் திகட்டக் காதலி ( ஒரு வேளை, காதலி அமைந்தால் :))..

இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறாய் என்று கேட்கிறாயா? உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உந்தன் திறன் எனக்குத் தெரியும். மேலும் என்னால் மட்டும்தான் உன்னிடம் இவைகளைச் சொல்ல முடியும்...

இதோ இந்தக் கடிதத்தை உன் அருகில் வைத்திருக்கிரேன்.. முடிந்தால் படி... புரிந்தால் நட...

ஒரு ரகசியம்: இன்று இரவு உனக்க்குப் பிடித்த தக்காளி கொத்சும் இட்லியும் தான் :)

இப்படிக்கு,12 வருடத்திற்குப் பிறகு,

கால நதியின் எதிர்காலத்தில் கல்லெரிந்துகொண்டும்... கடந்த காலத்தில் மீன் பிடித்துக்கொண்டும்..

நீ...


Thursday, August 6, 2009

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்.. 2


உனக்கான என் எழுத்துக்கள்
வெறும் வாக்கியங்களாகவே இருக்கின்றன...

என்றேனும் நீ படிக்க நேர்ந்தால்
அவை கவிதை ஆகலாம்...

Saturday, August 1, 2009

ரகசியம்..


தூக்கமற்ற இரவுகளில்,

ஒவ்வொரு விண்மீனும்

“எனக்கு ஒரு ரகசியம் தெரியும்.. அதை உன்னிடம் சொல்ல மாட்டேன் போ!!”

என்று என்னைப்பார்த்துக் கண்ணடிக்கிறது..!!!

பி.கு. : அமெரிக்க வெளிச்சத்தில், இங்கு வானம் அதன் விண்மீன்களைத் தொலைத்துவிட்டது... :(