Thursday, June 29, 2017

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம் - 26

ஓரக்கண்ணால் பார்த்தபடி 
ஒன்றரை மாதம்..

ஒருவழியாக தைரியம் சேர்த்து - 
ஒரு மழை மாலையில், தன் காதலை 
ஒப்படைத்தாள் 
ஒருத்தனிடம்..

ஓட்டை பேருந்து நிலையத்தில்,
ஓரடி தூரத்தில் நான்..

ஒன்று சேர்ந்தார்களா?
ஒதுங்கி வாழ்ந்தார்களா?


---

கான்க்ரீட் சுவர் தாண்டி,
குட்டிச்சிறுவன் ஒருவன் - முதன்முதலாய் 
கால் நனைக்க வருகிறான்..

கடலின் மொத்த அழகையும் 
கவிதையாய் கடைந்தெடுத்து - அவன் 
காலடியில் கொட்டுகிறது  - அலை.

கால்களோடு கண்களும் நனைய 
காற்றோடு கலந்தது அவன் சிரிப்பு..

கடலை மென்றபடி, 
காத தூரத்தில் நான்..

Image result for besant nagar beach

---

அலுவல்கள் முடித்த 
ஆண்களும் பெண்களும் - வீட்டின் 
அன்றாடங்களை நோக்கும் மாலை ரயில்ப்பயணம்..
அவரவர் வசதிக்கேற்ப  சிறிது பெரிதென; பவுடர்கள் பழுதடைந்த 
அக்குள் வட்டங்கள்..

ஜன்னலோரம் அவள், 
கண்களோரம் கண்ணீர்...
காரணம் கேட்க வக்கில்லாமல் அருகில் நான்...

இடம் வந்ததும் 
இறங்கிச்சென்றாள். 

இமைகள் உலர்ந்ததா?
இனிமை மலர்ந்ததா? 

இன்று வரை பதில் தெரியாமல். நான்..

---

கடிதம் கொடுத்தவளிடம் 
கை குலுக்கி, "வாழ்த்துக்கள்" சொன்னதாகவும்,

கடல் சிறுவனோடு 
மணல் வீடு கட்டியதாகவும்,

கண்ணீர் குமரியிடம் 
ஆறுதல் கூறியதாகவும் 

சாலையை கடக்கையில், என்னை நானே 
சமாதானப்படுத்தி
சிரித்துக்கொண்டேன்..

---  x ---

எஷ்ட்ரா ஷ்பீடா  ஓட்ட சொல்ல,
யார்ரா இது எரும மாடு மாதிரி?..

"சோப்பு கலர்
சிக்னல் கண்ணுக்கு தெர்ல?" - நடூ ரோட்டுல
சிரிச்சுகினே போவுது பாரு 
சாவு கிராக்கி!

---  x ---