Saturday, May 2, 2015

உத்தம வில்லன் - விமர்சனம் | Uthama Villain | Uttama Villain Movie review.

(... pssst - created a Meme for the first time for a movie review! Meme at the end of the post.)

நான் மிகத்தீவிரமான கமல் ரசிகன். விஸ்வரூபம் விவகாரத்தில் கமலுக்கு காசோலை அனுப்ப எத்தனித்தவர்களில் நானும் ஒருவன். விஸ்வரூபம் படம் தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆகும் வரை வேறு எந்தப்படத்தையும் திரை அரங்குகளில் பார்க்காமல் ஒரே வாரத்தில் 4 முறை பார்த்தவன். 

... என்னைப்போல் பலர் உள்ளனர்.

சியாட்டிலில் நகரின் ராக்ஸி சினிமாவில் (Roxy Cinema) இன்றிரவு உத்தம வில்லன் படம் பார்த்தேன். ரமேஷ் அரவிந்த் இயக்கம், படம் மொக்கை என்று சில விமர்சனங்கள், தசாவதாரத்தை நினைவூட்டிய முன்னோட்டம் - இவை அனைத்தையும் தாண்டி கமல் மீதிருக்கும் நம்பிக்கையில் படம் பார்க்கச்சென்றேன். 

நான்கு ஆண்டிற்கு ஒருமுறை தன் ரசிகர்களை சோதித்துப் பார்ப்பதில் கமலுக்கு அலாதி பிரியம் போலும். மும்பை எக்ஸ்பிரஸ்சில் ஆரம்பித்த இந்த விஷப்பரீட்சை - மன்மதன் அம்பு, உன்னைப்போல் ஒருவன் என்று நீண்டு - இப்போது உத்தம வில்லனில் உச்சம் தொடுகிறது.

மனோரஞ்சன்ஒரு சூப்பர் ஸ்டார். அவருக்கு வாழ்க்கையில் அதி தீவிரமாக ஒரு பிரச்சனை. தான் முன் செய்த தவறுகளை திருத்திக்கொள்ளவும், நன்றி சொல்லவும், நன்றிக்கடன் செலுத்தவும், மன்னிப்பு கேட்கவும், மன்னி க்கவும் அவகாசம் இல்லாமல் போய்விடும் அவலம். அவற்றை எவ்வாறு சரி செய்கிறார் என்பதே கதை.

கதை சுருங்கக்கேட்க்கையில் நன்றாக இருகிறது. அனால் கமல் இதை விரிவு படுத்தி திரைக்கதையாய் வடித்த விதம் - கல்யாணப் பந்தியில் ஆசையாய் கேசரியை அள்ளி வாயில் வைக்கையில் இனிப்பதற்கு பதிலாக உப்புக்கைத்தால் எப்படி இருக்கும்? கஷ்டப்பட்டு ஒரு கரண்டி கேசரியை சாப்பிட்டு முடிக்கையில், நம்மை கேட்காமல் மேலும் நான்கைந்து கரண்டி உப்பு கேசரி பரிம்மாரப்பட்டால்? மிகவும் தெரிந்தவரின் கல்யாணம்.. சாப்பிட்டுத்தான் வர வேண்டும். என்ன செய்வீர்கள்? பிதுங்க பிதுங்க முழித்துக்கொண்டு சிரித்துக்கொண்டே சாப்பிட்டு எழுந்து வந்து - கேசரி எப்படி என்று வீட்டார் கேட்க்கையில் - 'முந்திரி சூப்பர்' என்று பதில் அளிப்பது போல் இருக்கிறது.

மனோரஞ்சன் தன குருவிற்கு நன்றிக்கடன் செலுத்த தான் நடிக்க இருக்கும் படத்தை அவரை இயக்க வைக்கிறார். அதுதான் திரைக்கதையில் இன்னொரு கதை. அதில் வரும் கமலின் பெயர் உத்தமன். மனோரஞ்சனின் மனத்தில் எழும் அச்சத்திற்கும் கேள்விகளுக்கும், உத்தமன் பதில் கூறுகிரார்ப்போல் திரைக்கதை. உத்தமனின் கதை காமெடிக்கதை. மனோரஞ்சனின் கதை tragedy கதை. இதில் உத்தமனின் காமெடிக்கு நாம் சிரிக்கவுமில்லை, மனோரஞ்சனின் சோகத்திற்கு அழவும் இல்லை. 


உத்தமனின் கதையில் - தெய்யம் நடனங்கள், பூஜா குமாரின் நடனம், ஞானசம்பந்தரின் "என்ன இருந்தாலும் இடது காது போல வருமா?" என்ற வசனம் - இவைதான் கேசரியின் முந்திரிகள். மற்றனைத்தும் உப்புதான்! 

கமலிடம் அவர் ரசிகர் பட்டாளம் தாழ்மையோடு கேட்டுக்கொள்வது - தயவு செய்து நகைச்சுவை எழுதாதீர்கள். மிகவும் மோசமான வசன நகைச்சுவை. இதில் slapstick வேறு முயன்றிருக்கிறார் கமல். கமலுக்கு வராத நடிப்பென்று ஒன்று இருப்பின் அது இதுவாகத்தான் இருக்கும்... 

மனோரஞ்சன் கதையில்  - ஊர்வசி அவரது மனைவி. அண்ட்ரியா - செட் அப். ஆங்கிலம் பேசும் பையன் (பைய்யனுக்கு அழ வரவில்லை என்று நினைக்கிறேன். ஒரு காட்சியில் முகத்தை மூடிக்கொண்டே அழ வைத்திருக்கிறார்கள்). ஊர்வசிக்கு முன்னால் இருந்த காதலிக்கு ஒரு பெண் குழந்தை ('பூ' பார்வதி), அவரின் வளர்ப்பு தந்தை ஜெயராம் - தெலுகு பேசும் மாமனார் (கே விஸ்வநாத்) மாமியார், கூடவே எம்.எஸ். பாஸ்கர். [அந்த முன்னாள் காதலியின் பெயர் யாமினி. இந்த பெயரை வைத்துக்கொண்டு யாம் இனி, யாமினி என்று வார்த்தை விளையாட்டு வேறு! ஐய்யோடா சாமி! - if I split this word into parts like Kamal - Ai! Yoda Saami! - If Star wars were dubbed in Tamil.. you get the point. கடுப்பாகுதுல்ல? லைக் லைக். சேம் சேம்.]

இவர்கள் அனைவரோடும் ஆளுக்கு ஒரு எமோஷனல் காட்சி இருக்கிறது. இவை எதுவுமே ஒட்டவில்லை. ஊர்வசியோடு மருத்துவமனையில் வரும் காட்சி பாஸ் மார்க். மற்ற அனைத்திலும் பொதுவாக ஈரம் இல்லை. 'க்ரேவ் டேஞ்சரில்' இருக்கும் மனோரஞ்சனின் மேல் நமக்கு அனுதாபம் வர வேண்டாமோ? சுத்தமாக வரவில்லை. "அன்பே சிவத்தின்" நல்லாவின் மேல் எவ்வளவு அபிமானம்/அனுதாபம் வந்தது? ஒரு வேளை அது மதனின் எழுத்தாலா? இருக்காலம்!

மீண்டும் கூறியாக வேண்டும் - படத்தின் பெரிய மைனஸ் - கமலின் எழுத்தும், திரைக்கதையும். படத்தில் ஒரு காட்சியில் மனோரஞ்சன் நடித்த ஒரு காட்சியை திரையில் ரஷ் பார்ப்பார்கள்.அப்போது மனோரஞ்சன் தூங்கிவிடுவார். எனக்கென்னவோ நிஜமாகவே கமல் தூங்கியிருப்பார் என்று தோன்றுகிறது. அவ்வளவு போர்!! 

வாழ்கை நிரந்தரமில்லை என்று படத்தில் கருத்து சொல்லும் கமலுக்கு -  தனது எழுத்துக் கூர்மை கூட நிரந்தரமில்லை என்று  யார் கூறுவார்??

இசை, ஒளிப்பதிவு நன்று. கமல் படத்தில் கிரீன் மேட் பிரயோகம் அப்பட்டமாக தெரிவது புதிதில்லை. இதுலும் சப்-ஸ்டாண்டர்ட் VFX. 

பாலச்சந்தரை கடைசியாக திரையில் பார்த்தது மட்டுமே மனதில் நிற்கிறது.

உத்தம வில்லன் - உத்தமனும் இல்லை. வில்லனும் இல்லை. அட! ஒரு எழவும் இல்லை! 

Created a Meme for Uththama Villain as part of the review! 


1 comment: