Wednesday, August 14, 2013

தலைவா - It's a die!(Spoiler filled review.. please read after watching the movie!)

வெகு நாட்களாய் நான் செய்யாத சில விஷயங்களை மீண்டும் செய்யத்தூண்டியதர்க்காக / நினைவுபடுத்தியதற்காக இயக்குனர் விஜய்க்கு நன்றி. அவை -

1. முழு நீள blog post எழுதுவது.
2. சினிமா விமர்சனம் எழுதுவது.
3. திரைப்படம் முடியும்முன் அரங்கை விட்டு வெளியேறுவது.
4. நீண்ட நாட்கள் கழித்து ஒரு 'விஜய்' படம் பார்த்தது 

நன்றி தலைவா! (ரிலீஸ் அன்றே அமெரிக்காவில் முக்கால் படம் பார்த்துவிட்டேன்.)

இயக்குநர் விஜய், நடிகர் விஜய் இருவருக்குமே சொந்த சரக்கில் நம்பிக்கை இல்லை என்பதற்கு இன்னொரு சான்று தலைவா.

தனது தந்தையின் முகவரி கூட தெரியாமல், ஆஸ்திரேலியாவில் வளரும் விஜய், அவரின் மரணத்திற்குப் பிறகு  மும்பைவாழ் தமிழ் மக்களின் அடுத்த தலைவனாகும் கதை.

தமிழில் தேவர் மகன், ஹிந்தியில் சர்கார் ராஜ், ஆங்கிலத்தில் காட்பாதர் என வந்த கதைதான். அந்தப்  படங்களை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவு படுத்த மாங்கு மாங்கென்று உழைத்திருக்கிறார் எ.எல்.விஜய் - படத்தின் இயக்குனர். படத்தின் டைட்டில் கார்டில் ராம் கோபால் வர்மா, மணிரத்னம் இருவருக்கும் சமர்ப்பணம் என்கிறார். அவர்கள் கோர்ட்டில் மான நஷ்ட கேஸ் போடாமல் இருக்கவேண்டும்! 

படத்தின் ஒரே நோக்கம் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு அஸ்திவாரம் அமைப்பது. அதற்க்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட  ஒவ்வொரு காட்சியும் அதில் வரும் வசனங்களும் நம்மை அசௌகர்யப்படுத்தியதே தவிர அஸ்திவாரம் போட்டது மாதிரி தெரியவில்லை.
இவற்றை எல்லாம் எப்படி யோசித்திருப்பார்கள்? சிறு கற்பனை 

*******************************************

"விஜய் சார், படத்துல என் மகன் காரக்டர பாத்து மக்களுக்கு அடுத்த தலைவன் இவன்தாண்டான்னு  மனசுல பதியனும்.." - இது S.A.C 

"பண்ணிடலாம் சார்"

"எதாவது ஐடியா சொல்லுங்கண்ணா  பாப்போம்.." - நடிகர் விஜய் 

"அடுத்த வாரிசுன்னா கண்டிப்பா தேவர் மகன், காட் பாதர் மாதிரி பண்ணிடலாமா சார்?" 

"அதெல்லாம் நீங்க பாத்துக்கோங்க.. அடுத்த எலக்ஷன்ல என் பையன் 96ல ரஜினி மாதிரி இருந்தா நல்லது.."

"ம்ம்ம்.. கண்டிப்பா சார்.. வாரிசு..ம்ம்ம் . படத்துல உங்க அப்பா பெயர் ராமச்சந்திரன்.. எம்.ஜி.ஆர்  மாதிரி.. என்ன சொல்றிங்க? நீங்க அவரோட வாரிசு..ஓகே வா?"

"அதுதான் கடுப்பு எம்.ஜி.ஆர்..சாரி.. கருப்பு எம்.ஜி.ஆர் வந்துட்டாரே ஆல்ரெடி .. வேற வேற!"

"ம்ம்ம் ... அண்ணாதுரைன்னு வெச்சுட்டா?"

"ம்ம்ம்... இப்டி பண்ணா என்ன? ராமச்சந்திரனையும் அண்ணாத்துரையையும் சேத்து ராமதுரைன்னு வெச்சுட்டா?"

"மேல சொல்லுங்க..."

"அப்டியே அவரு பெரிய தாதாவா வந்த ஒடனே எல்லாரும் அவரை அண்ணான்னு கூப்பிட ஆரம்பிக்கறாங்க"

"சூப்பர் சார் சூப்பர் சார்"

"படத்துல "இவன் சின்ன பையன் இல்ல..அண்ணாவோட பையன்"ன்னு டயலாக் வைக்கலாம்.."

"அடுத்த அண்ணா இவந்தாண்டா - இது எப்படி இருக்கு?" 

"அம்சமா இருக்கு சார் ... அப்டியே ப்ளோல யோசிக்கலாம்.."


*****************************

"அப்புறம்ங்ணா நமக்கு உருப்படியா வர்றது டான்ஸ்ங்க.. அத எப்படியாவது படத்துல வெச்சுடனும்.."

"கண்டிப்பா சார்,, அது இல்லன்னா உங்க படத்துல வேற என்ன இருக்கும்..? இந்த சூர்யால இருந்து மிர்ச்சி சிவா வரைக்கும் பிளாஷ் மாப் (flash mob) டான்ஸ் ஒண்ணு பண்ணிட்டாங்க.. ஆனா நீங்க இன்னும் ..."

"பண்ணுருங்கண்ணா... அப்பறம் அப்பா சொன்னாருங்கண்ணா நமக்கு ஃபாரின்லயும் சென்னைலயும் நல்ல மார்க்கெட்டுங்க..சௌத்லதான் கொஞ்சம் இடிக்குது.. அப்பறம் மத்த ஸ்டேட்லயும் நம்ம மார்க்கெட் கொஞ்சம் சுமார்தாங்க.. அதுக்கு எதாவது செய்யலாமா?"

"நீங்க சொல்ல சொல்ல எனக்கு கண்ணு முன்னாடி ஸ்க்ரீன்ல வரிங்க சார்... உங்க அப்பா திருநெல்வேலி..ஆனா அவரு பாம்பேல பெரிய டான்.. அவருக்கு நீங்களும் அப்படி ஆகிடக்கூடாதுன்னு ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்.. அங்க நீங்க டான்ஸ் ட்ரூப் ஒண்ணு வச்சுருக்கிங்க.."

"கலக்குறிங்கண்ணா.. டான்ஸ்.. திருநெல்வேலி.. ஆஸ்திரேலியா..டான்..சூப்பர்!"

"வேற ஏதாவது வேணுமா சார்?"

"இந்த யோ (yo) பசங்க நம்ம பக்கம் திரும்பக்கூட இல்ல இன்னும்.. அவங்க மார்கெட்டுக்கு?"

"சார் என்னா சார் நீங்க கையில வெண்ணை வெச்சுக்கிட்டு நெய்க்கு அலையலாமா?"

"என்னங்கண்ணா சொல்றிங்க?"

"அட! நீங்க இப்போ சொன்னத அப்படியே englishல சொல்லுங்க"

"எதைங்கண்ணா?"

"அதைத்தான்"

"What brother - இப்படியா?"

"அதேதான்.. அப்படியே அத சுருக்குங்க.."

"what bro"

"அவ்வளவுதான் ப்ரோ! இந்த அனிருத் மாதிரி ஆளுங்களும் உங்கள follow பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க"

"சூப்பர்ங்கண்ணா..வ்வ்வ்..சாரி .. சூப்பர் ப்ரோ!"

"பண்டாச்டிக்.. காரக்டரோட ஒட்டிடிங்க.."

***************************

இதுவரை நடந்த டிஸ்கஷனை S.A.Cயிடம் கூறிவிட்டு they were waiting..

***************************

"தம்பி, நீ துப்பாக்கி படத்துல நாலஞ்சு வார்த்தை englishல பேசினது பயங்கரமா பத்திக்கிச்சே! அது மாதிரி ஏதாவது வெய்க்கனும்ப்பா."

"வச்சாச்சு சார்" - டைரக்டர் 

"சொல்லுங்க பாப்போம்"

"அதாவது - அண்ணா போனதுக்கு அப்புறம், விஜய் சார் தான் அந்த மக்களுக்கு எல்லாம். அப்போ அந்த ஏரியா பிக்-பாக்கெட் ஒருத்தன புடிக்க கார்ல நாலஞ்சு அடியாட்களோட கெளம்பராறு.. அந்த பிக்-பக்கெட்காரனை புடிக்கரதுதான் ஒரு மக்கள் தலைவனுக்கு ரொம்ப  முக்கியம்.. அப்போ சொல்ற வசனம் - Its a do.. or die! ஓகேவா சார்?"

"ஏதோ ஒண்ணுப்பா இந்த மெட்ராஸ் பசங்க மார்க்கெட்ட புடிக்கணும்.. மத்த படி அரசியல் இல்லையே படத்துல.."

"அதுக்குதான் சார் உங்ககிட்ட வந்துருக்கேன்..."

"சரிப்பா.. என் மகன் எப்போ தலைவன் அவதாரம் எடுக்கறானோ அப்போ மக்களை பாத்து எதோ ஒரு உயரமான எடத்துல இருந்து டாட்டா காமிக்கணும்.. அதும் M.G.R மாதிரியே காமிக்கணும்.."

"M.G.R டாட்டா காமிக்கறது மாதிரி நான் எங்க சார் கண்டுபுடிக்கறது?"

"தம்பி, நன் இவ்வளவு நேரம் சொன்னது இருவர் படத்துல ஒரு சீன் வரும். அதைத்தான். அந்த படம் பாருப்பா"

"சரி சார்"

"தலைவன் ஆன ஒடனே அவன் வெள்ளை சட்டை மட்டும்தான் போட்டுக்கணும்.. அதுவும் டைட்டா அரைக்கை சட்டை.. எல்லாம் MGR ஸ்டைல்!"

"வேஷ்டி?"

"என்னப்பா நீ! என் பையன் யூத்துப்பா.. வெள்ளை சட்டை.. ஜீன்ஸ்..ஒரு கருப்பு கூலிங் கிளாஸ்!"

"ஓ!"

"படத்துல சின்னக் குழந்தையில இருந்து பாட்டி வரைக்கும் என் மகன் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டுதான் காப்பாத்தணும். ஸ்லோ மோஷன்ல அஞ்சாறு சீன் நடந்து வர்றது மாதிரி வைக்கணும்... அப்புறம் மக்களுக்காக த்யாகம் பண்ணி அவங்களோட மனசு நோகாம கல்யாணம் பண்ணிக்கணும்.. தலைவா தலைவான்னு பாட்டு ஓண்ணு கண்டிப்பா இருக்கணும்..எல்லாரும் அவனை மகன்னு சொல்லணும் .. இருக்கற எடம் கோவில்ன்னு சொல்லணும்...சின்ன பசங்க எல்லாம் அண்ணான்னு சொல்லணும்..."

"ஓகே சார்..."

"இதுக்கு மேல நீதான் சொல்லணும்... நானே சொல்லிட்டு இருந்தா எப்படி.. நான் கட்சிக்கொடி டிசைன் முடிவு  பண்ண போகணும்..வரேன்!"

"சார் எனக்கு ஒரு ஆசை.."

"சொல்லுப்பா"

"விஜய்சார் டான்ஸ் மாஸ்டர் ரோல் பண்ணறார்.. அதுனால புன்னகை மன்னன்ல வர்ற மாதிரி இவருக்கும் அமலா பாலுக்கும் ஒரு டான்ஸ் தீம் வைக்கலாமா?"


"அதுவும் காப்பிதானா? அமலா பால்தான் ஹீரோயினா?"

"நான் தான சார் டைரக்டர்.. சோ அவங்கதான் ஹீரோயின்" என்று வழிகிறார் விஜய்..

"எதோ நல்லா இருந்தா சரி"

***********************************************


இவற்றோடு மானே தேனே பொன்மானே என்று நான்கைந்து சீன்களை எடுத்து படத்தை முடித்து விடுகிறார்கள் (என்று நினைக்கிறேன்.. நான் அரங்கை விட்டு வெளியேறியபோது இன்னும் climaxகூட வரவில்லை..)

விஜய் பார்க்க நன்றாக இருக்கிறார், வழக்கம்போல் நன்றாக ஆடுகிறார். சந்தானம் வெளுத்துக்கட்டுகிறார்.
சத்யராஜ் பெரிய டான் என்று எல்லோரும் திரையில் சொல்கிறார்கள். ஆனால் எதோ கடனுக்கு டானாக இருப்பது போலத்தான் தெரிகிறது. ரொம்பவும் சோகமாகவும் பயப்பட்டுக்கொண்டும் இருர்க்கிறார். நாயகனில் வேலுநாயக்கர் டான் என்றல் நம்பலாம். தேவர் மகனில்பெரியதேவர் ஊரில் பெரியவர் என்றால் நம்மால் நம்ப முடியும். காரணாம், அவர்களிடத்தில் ஒரு கோவம் இருக்கும். அந்த கதாபாத்திரத்தின் மேல் மக்களுக்கு பயம் கலந்த பிரியம் இருக்கும். மனம் இருக்கும். ஒரு நோக்கு இருக்கும். ஒரு தெளிவு இருக்கும். சத்யராஜிடம் இவை ஒன்றுமே இல்லை. எங்கோ கடலுக்குள் தலைமறைவாக தீவிரவாதிபோல் வாழ்கிறார். சாந்தமாக பேசுகிறார் கையெடுத்து கும்பிடுகிறார் (காதலியின் தந்தையிடம்).கெத்து பத்தவில்லை 

வேலுநாயக்கன் இறந்தபோது, பெரியத் தேவர் இறந்தபோது இருந்த பாதிப்பு சத்யராஜ் கதாபாத்திரம் இறக்கும்போது இல்லை. துளியும் இல்லை. அதனாலேயே இவருக்கு வாரிசு வந்தால் என்ன வராவிட்டால் என்ன? என்று தோன்றுகிறது. அந்த ஏனோ தானோ வாரிசாக விஜய் வரும்போது மனதில் நிற்கவில்லை . முழுக்க முழுக்க இயக்குனரின் குற்றம். 

காட்பாதர் முதல்பாகத்தில் முதல் ஒரு மணி நேரம் டான் கார்லியோனேவை சுற்றித்தான் படம் இருக்கும். தேவர் மகனிலும் அதே! அந்த கதாப்பாத்திரங்கள் மனதில் ஓட்ட அந்த அவகாசம் தேவை. இதில் முதல் பாதியில் சந்தானம்தான் மனதில் ஓட்டுகிறார்!! என்னத்த சொல்ல!?


  நாசர், பொன் வண்ணன், மனோ பாலா இருக்கிறார்கள். Y.G.மகேந்திரன் அவ்வப்போது வந்து பஞ்ச் டயலாக் அல்லது விஜய்-யை தலைவன் என்று அறிவித்துவிட்டு செல்கிறார் - why ஜீ?

வசனங்களும் பாடல்களும் படு மோசம்.ஏற்க்கனவே ஆழம் இல்லாத கதாப்பாத்திரம் விஜய்க்கு. இதில் அவர் குடித்துவிட்டு "வாங்கண்ணா வணக்கங்கண்ணா" என்று ஆடுகிறார். இப்போது புரிகிறது கமலின் ‘Of course Velu Nayakan doesn’t dance’

 "தலைவா தலைவா" என்றொரு பாட்டு வருகிறது. பாடியிருப்பது ஹரிசரண். இளமையான குரல். அனால் திரையில் டர்பன் கட்டிக்கொண்டு 70 வயது தாத்தாக்கள் பாடுகிறார்கள் ஆடுகிறார்கள். சகிக்கவில்லை... அதே பாட்டில் "தளபதி தளபதி" என்றும் வருகிறது :) தலைவனா? தளபதியா? இரண்டும் முற்றிலும் வேறு. விஜய் தலைவன் என்றால் யாரை தளபதி என்கிறார்கள்? விஜயோடு சுற்றிக்கொண்டிருக்கும் யாரையோவா? 'இல்லை இல்லை விஜய்தான் எங்கள் தளபதி' என்றால் யார் தலைவன்? :)  only the confusions!!

இது போதாதென்று மும்பை நமக்கு ஒட்டவில்லை. மும்பையில் மிலிட்டரி ஆபீசர் - ஓ.கே. மும்பையில் டான் - ஒ.கே.. மும்பையில் தலைவன்? கஷ்டம்! செண்டிமெண்ட் பார்த்து சொதப்பியிருக்கிறார்கள். ஒரு வில்லன் வருகிறான். கேட்ட காமெடி! சத்யராஜை கொலை செய்வதற்கு "ராமு..ராமு" என்று த்யானம் இருக்கிறான்.. விஜய் வந்தவுடன் "விஷ்வா..விஷ்வா" என்று விஜய்யை அல்ல, நம்மைக்கொல்கிறான்.இந்த மாதிரி வில்லன்கள் கொஞ்ச நாள் காணாமல் போயிருந்தார்கள் . கவலையாக இருக்கிறது. 

ஆக, படத்தில் இயக்குவதாக நினைத்துக்கொண்டும், இசை அமைப்பதாக நினைத்துக்கொம்டும், அரசியல் அஸ்திவாரம் என்று நினைத்துக்கொண்டும் ஏதேதோ செய்திருக்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை. எழுந்து வந்துவிட்டேன். சொச்ச படத்தையும் பார்த்தால் பிறகு update செய்கிறேன்,

விஜய் அரசியலுக்கு வர லாயக்கு இல்லாத ஆள். யோசித்துப்பர்த்தால் இறந்த வீட்டில் வாழ்த்து சொல்லும் தலைவருக்கு விஜய் தேவலைதான். இருந்தாலும்.. ரொம்ப கஷ்டம்ப்படும்!!

இந்தப்படம் வெளிவராததற்கு ஒரு இளைஞன் தற்கொலை செய்திருக்கிறான்! எவ்வளவு பின்தங்கி   இருக்கிறோம்? ஒரு வேளை வெளிவந்தால், மேலும் சிலர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஜாக்கிரதை.

உண்மையில் என்னால் இன்னும் அதிகம், படம் பற்றி, திரையரங்கில் பலர் அடித்த கமெண்ட் பற்றி என்று எழுத முடியும்… ஆனால், எனக்கே பாவமாக இருப்பதால், இதோடு முடித்துக்கிறேன்.

தலைவா - "ஒரு தடவ தலைவா படம் பாத்துட்டா ஒண்ணு தலைவலிக்கும் இல்ல தூக்கம் போகும்..நிம்மதியா மட்டும் இருக்க முடியாது!"

இந்த ரிலீஸ் பிரச்சனை எல்லாம் சும்மா உள்ளுள்ளாய்! படம் கல்லா கட்ட ஒரு நாடகம்!

4 comments:

 1. He He He... Marana review... Didnt expect this....!!!
  Americaala irunthutu, current la irukka madurai payan maathiri padatha review pannirukeenga!!!! especially 'vaazhthu sollum thalaivar' comment super!!!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. He He He....
   Same Ponsundar thaan....

   Delete