Wednesday, February 8, 2012

இப்படியும் சில மனிதர்கள்

பரத்:

ஏழாம் செமஸ்டர் விடுமுறைக்கு எனது மாமா(க்கள்)/சித்தி வீட்டிற்கு சென்றிருந்தேன். எனது தம்பி/தங்கைகளுக்கு மிட் டெர்ம் பரீட்சை நடப்பதால், பொழுது போகாமல் நான்கு நாட்களில் கிளம்ப முடிவு செய்தேன். வைகை. தட்க்கலில் பயணச்சீட்டு வாங்கி நாளை புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருக்கிரேன்.

நாளை:

"பயணிகள்-கவனத்திற்கு-வண்டி-எண்- ஒன்று-இரண்டு-ஆறு-மூன்று-ஐந்து-இரண்டாம்-பிளாட்பாரத்தில்-இருந்து-இன்னும்-சிறிது-நேரத்தில்-புறப்பட-இருக்கிறது"

ஒலி பெருக்கிப்பெண்ணின் வெட்டிய தமிழ், மனிதன் எவ்வளவு இயல்பாக இயந்திரத்தனத்திர்க்கு பழகிவிட்டான் என்று நினைவுப்படுத்தியது.

ஒரு நாள் பொழுதை கழிக்க, ஒரு லிம்கா - 500 எம்.எல்., புதிதாய் வாங்கிய புத்தகம் - 'கடவுள்' - சுஜாதா,  ஐ-பாட், மற்றும் இளையராஜாவை நம்பி இருந்தேன்.

S3 கோச்சில் நான் கொண்டு வந்திருந்த பெரிய்ய்ய பையை ["எதுக்கும் இருக்கட்டும், மழை கிழை வந்தா மாத்து துணி வேண்டாமா?" என்று அம்மா வைத்துவிட்ட துணி உபயோகப்படாமல் இடத்தை அடித்துக்கொண்டிருந்தது] நுழைக்க சிரமமாக இருந்தது. ஒருவழியாக 43 வந்தடைந்தேன். ஜன்னல் சீட். புழுக்கம் கம்மி. இயற்பியல் விதிகளுக்கு நன்றி. 

மணி: 12:45pm.. ரயில் கிளம்பியது.

என் ஜன்னலோர பிரபஞ்சம் என்னை சூழ்ந்துகொண்டது.ஸ்ரீனிவாஸ் @ ஸ்ரீனிவாசன் 


Bloody hell! What am I supposed to do in THIS compartment? இவனுங்கள நம்பவே கூடாது. ஏ.சி ல புக் பண்ண சொன்னா,செகண்ட் கிளாஸ்ல புக் பண்ணிருக்கான். பார்வதி, உனக்கு ஏன் சிக்குன்குனியா வர வேண்டும்? நான் எப்படி அர்ச்சனாவை [வயது - ஒன்று] ஒரு நாள் பூரா சமாளிக்க போகிறேன்? இந்த க்ளையன்ட் மதுரைல ஏன் இருக்கான்? என் கம்பெனி ஆட்கள் என்னை ஏன் அனுப்பனும்? இந்நேரம் பாத்து உன் அம்மா அப்பா ஏன் யு.எஸ்.ஸில் இருக்க வேண்டும்? ச்ச!

லேப்டாப் - இருக்கிறது
டிக்கட் - இருக்கிறது
செல் போன் - இருக்கிறது
லுக்கேஜ் - இருக்கிறது
டாக்குமெண்ட்ஸ் - இருக்கிறது 
குழந்தை - இருக்கிறது

ஒரே ஒரு பகல். என் இனிய அர்ச்சனா, உறங்கிவிடு.

என் இருக்கையில் சென்று அமர்ந்தேன்.ஜன்னலோரம். எதிரே ஒரு வாலிபன் எதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தான். தமிழ் புத்தகம். அட!

அர்ச்சனாவை அவளுக்கென்று வாங்கிய இருக்கையில் [வேறு வழி?], அவள் அம்மாவின் சில்க் புடவை விரித்து படுக்கச்செய்தேன். ட்ரெயின் புறப்பட்டு விட்டது. இணையத்தில் என்னை இணைத்துக்கொண்டேன்.

பரத்:

மிக சுவாரஸ்யமாய் ஆரம்பிக்கிறது - கடவுள். சற்று நிமிர்ந்து என் சக பயணிகளை ஒரு நோட்டமிட்டேன். எனக்கெதிரே, லேப்டாப்பில் உலகம் தேடும் மனிதர். அருகில் அவர் குழந்தை [என்று நினைக்கிறேன்]. எனதருகில் ஒரு இளைஞர் தூக்கத்தின் விளிம்பில் அமர்ந்திருந்தார். பக்கவாட்டு இருக்கையில் குறுக்காக ஒரு இளம் ஜோடி. அப்போதுதான் திருமணம் ஆகி இருக்க வேண்டும். காதல் திருமணம். பாசாங்குகள் இல்லை. கொஞ்சம் எட்டிப்பர்தேன். பல முகங்கள். சில பின்னல்கள். சில சொட்டைகள். அதில் அற்ப மயிர்கள்.

காதில் "தில்லுபரு ஜானே.." என்று மனோ காதலித்துகொண்டிருந்தார். மீண்டும் 'கடவுளில்' மூழ்கினேன்.

அந்த ஜோடி:

[ நீண்ட மௌனம்..]

"சுரேஷ், என்னை நீ ஒழுங்கா பாத்துப்பேல்ல?"

"ம்ம்ம்ம்.. வேற வழி?"

"விளையாடதடா..எனக்கென்னாவோ பயம்மா இருக்கு. என்னதான் அப்பா அம்மா ஒத்துக்கிட்டாலும்..."

புன்னகைத்தான்.

தோளில் சாய்ந்துகொண்டாள். கண்களினோரம், வரட்டுமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்த கண்ணீர், "ரமா.. ஐ லவ் யூ.. உன்ன விட்டு எங்க போயிட போறேன்?" என்று சுரேஷ் சொன்னவுடன், வந்துவிட்டது...

மீண்டும் மௌனாலோகம்..

அருகில் தூக்கதிதின் விளிம்பில் இருந்த இளைஞர்:

தூங்கிவிட்டார். அவ்வப்போது பரத்தின் மீது சரிந்து கொண்டு..

ஸ்ரீநிவாஸ் @ ஸ்ரீனிவாசன்.

ஐ டோன்ட் வான்ட் டு நோட்டிஸ் தீஸ்...பட்... கண்ணு முன்னால நடக்குது..தட் பெல்லோ இஸ் ஸ்லீப்பிங் ஆன் திஸ் கைஸ் ஷோல்டர்... மெட்ராஸ் ஜனங்களுக்கு மானர்ஸ் சொல்லி தரணுமா? இப்படி இருந்தா எப்டி உருப்படுவோம்? பர்சனல் ஸ்பேஸ் இலாம எப்படி பப்ளிக்ல இருக்க முடியும்? இட்ஸ் அன் ஈசி! சொல்லி விடலாமா? என்னால் சொல்லாமல் இருக்க முடியுமா?

"சார்!"

"ரம்..பம்..பம்.. ஆரம்பம்..."

"சார்..எக்ஸ்க்யுஸ் மீ!"

 "ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே.."

அவன் கண் முன்னே கை அசைத்து அழைத்தேன்.

"சாரி சார்.. பாட்டு கேட்டுட்டு இருந்தேன்.நீங்க கூப்பிட்டது கேக்கல." என்றான்.

"இட்ஸ் ஓகே... அது வந்து.."

"எஸ்.. சொல்லுங்க.."

"உங்க பக்கத்துல இருக்கறவர்..உங்க மேல வந்து வந்து விழறார். நீங்க சொல்லலாமே. இட்ஸ் மேக்கிங் மீ அன் ஈசி.."

"என்ன சார் நீங்க.. எதோ அசதியா துங்கறார். பாவம் தூங்கட்டுமே"

"இல்லை சார்.. அவன் உங்க மேல மேல வந்து விழறான். அவன் பாக்கவும் அவ்ளோ சரியான ஆசாமியா தெரியலை. நீங்க அவன் விழ விழ தள்ளி விட்டுட்டு இருக்கீங்க.. இந்த காலத்து ஜனங்கள நம்ப முடியாது சார்... ஹி இஸ் டிஸ்டர்பிங் யூ. ரைட்?"

"நோ!"

"சார்.நீங்க இவன மாதிரி ஆட்களை ஒன்னுமே பண்ணாம விடரதுனாலதான் இந்தியா இன்னும் முன்னேறாம இருக்கு. தவறுகள் நடக்குது. நாம இவனை சகிச்சுட்டே இருந்தோம்னா, இது மாதிரி உதவாக்கரைகள் அதிகரிச்சுட்டே இருப்பாங்க! தே ஆர் ஸ்கம்!"

பரத்:

"சார். என்ன இப்படி பேசறிங்க?! அவர் உங்களுக்கு என்ன பண்ணார்? சாயறது என் மேல. நானே ஒன்னும் சொல்லல. நீங்க ஏன் உணர்ச்சிவச படறிங்க? எனக்கு அவரோட அசதி பெரிசா தெரியது. உங்களுக்கு ஏன் அது தெரியலை? விடுங்க சார் பாவம்" 

பக்கத்து இருக்கை நண்பர் மீண்டும் பரத்தின் மேல் விழுந்தார். இந்த முறை அவன் ஒதுக்கி விட வில்லை.

ஸ்ரீநிவாஸ் @ ஸ்ரீனிவாசன்:

என்னடா இது. ச்ச! இட்ஸ் எம்பாரசிங்! இவனிடத்தில் நாற்றம் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? அவன் எக்கேடும் கேட்டு போகட்டும். வை டூ ஐ பாதர்.காஷ்! ஐ நீட் எ ஸ்மோக் டெஸ்பரேட்லி. 

விருட்டென்று எழுந்து கதவோரம் சென்று தனது மால்போரோவை  [இறக்குமதி] நெஞ்சில் பரவ விட்டான். அர்ச்சனா தனியாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

அந்த ஜோடி:

"ரமா நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா?"

"எவ்வளவு?" 

அவள் காதில் ஏதோ குசுகுசுத்தான். வெட்கி, அவன் கைகளை கவ்விக்கொண்டாள். இன்னும் நெருக்கமாய் அமர்ந்துகொண்டார்கள்.

பக்கத்து இருக்கை இளைஞர்:

தன்னால் இருவர் அடித்துகொள்கிறார்கள் என்று தெரியாமல் பரத்தின் தோள்களில் உறங்கிக்கொண்டிருந்தார்.பரத்:

மனுஷங்க ஏன் இப்படி இருக்காங்க? ஒருவன் பார்க்க நன்றாக இல்லை என்றால், அவனை உடனே ஏன் எடை போடுகிறார்கள்? அவனுக்கும் ஆசைகள், உணர்வு, குடும்பம், வேலை, கடன் எல்லாம் இருக்கத்தானே செய்கிறது? இவர்களுக்கு தெரிந்து இப்படி நடக்கிறார்களா இல்லை இவர்கள் இருப்பிலேயே ஏதும் கோளாறு இருக்கிறதா? ஐ.டி ஜனங்கள் இப்படித்தான் இருப்பார்களோ?

வெளியே புயல் அடிக்கும்போது கான்க்ரீட் வீட்டில் இருப்பவனுக்கு கூரைகள் பிய்த்து எறியப்படுவது எப்படித்தெரியும்? எப்படி புரிய வைப்பேன் நான்? ஒரு வேளை என் மீது தான் கோளாறா? மனுஷ.... 'க்ரீஈஈஈச்'...

இவனது எண்ண ஓட்டத்திற்கும் சேர்த்து பிரேக் போட்டது ரயில். 

பட்டுச்சேலை, இருக்கையின் வள வளப்பில் வழுக்கி, அர்ச்சனா கீழே விழுந்... அதற்குள் பரத் அவளை பிடித்துவிட்டான்.

கண் விழித்த குழந்தை, "ஓஒ..ஓஒ.." என்று அழத்துவங்கியது.

ஸ்ரீனிவாஸ் @ ஸ்ரீனிவாசன்:

அர்ச்சனாவா அது? என்ன ஆனது? இருக்கைக்கு விரைந்தான். பரத், அழும் குழந்தையை ஏந்தியிருந்தான்.

"சேலை வழுக்கிடுச்சு சார். விழறதுக்குள்ள புடிச்சுட்டேன். ஆனா அழ ஆரம்பிச்சுட்டான்."

"ஆரம்பிச்சுட்டா", என்று சரி செய்தேன்.

"ஓ.." என்று கொஞ்சம் வழிந்தான்.

என்னடா இது எழவாப்போச்சு. இவள் அழுகையை எப்படி சரி செய்வேன்?

"ஓஓ...ஊஉ...ம்ம்மம்பா...." என்று அர்ச்சனா அலறினாள். 

என்ன செய்ய வேண்டும் நான்? அழுகையை எப்படி நிறுத்த வேண்டும்? பார்வதீ... எவ்வளவு நாளா வேண்டுதல் இதுக்கு? டாம்! இந்த கம்பார்ட்மென்ட்டில் இருக்கும் அனைவரும் என்னையே பார்க்கிறார்கள். தி வொர்ஸ்ட் டே ஆப் மை லைப்! அர்ச்சனா அழுவதை நிறுத்து.

என்னவோ செய்தான் ஸ்ரீ. குரங்கு மாதிரி முகம் வைத்து காண்பித்தான். வினோதமாக சத்தம் செய்தான். அர்ச்சனா எதற்கும் மடியவில்லை.

"எக்ஸ்க்யூஸ் மீ.. மிஸ்டர்.."

"பரத்"

"பரத், இந்த பையில் ஒரு பால் புட்டி இருக்கும்.. எடுத்துத் தருவீர்களா?"

எடுத்துத்தந்தான்.

ரயில் மீண்டும் கிழம்பியது.

பரத்:

"சார்.. அவசரப்படாதிங்க. அம்மாக்களைத்தவிர நமக்கெல்லாம் கொஞ்சம் கஷ்டமான காரியம் தான்." என்று புன்னகைத்தேன்.

நான் சொன்னது அவருக்கு பிடிக்கவில்லை.

அப்போது திடீரென்று ஒரு குரல்..

 "அம்மம்மா...தம்பி என்று நம்பி... அவன் உன்னை வளர்த்தான்.."
என்று கணீர் குரலில் பாட்டு கேட்டது. என்னவென்று எட்டிப்பார்த்தேன். கண் பார்வை இல்லாத ஒருவர், கையில் ஜல்..ஜல்.. என்று தான் இதுவரை சேகரித்த சில்லறைகளை தெரிவித்துக்கொண்டு எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

"தாய் என்றும்..தந்தை என்றும்..."

என்று அவர் பாடப்பாட, அவரது குரல்,  என்னை ஏதோ செய்தது..திடீரெண்டு என்னைச்சுற்றி எல்லாம் இருண்டது. கண் பார்வை மட்டும் இல்லை என்றால் எவ்வளவு கஷ்டம்? நிறம் - தெரியாது. உருவம் - தெரியாது.. தெரிந்த நிறம் - கருமை..மற்றனைத்தும் - வெறுமை.

நான் என் கண்களை மூடினேன். என் முகத்தில் அறைந்த காற்றை கண் பார்வை இல்லாதவர் எப்படி வர்ணிப்பார்? பார்வை இருக்கும் நமக்கே அதை வர்ணிக்கத் தெரியாதே! அழகு? சூரியன்? - தெரியாது. எழுத்துகள்? தெரியாது. ஆண் பெண் வித்தியாசம்? - தெரியாது. அடுத்த அடி எடுத்து வைப்பது பள்ளமா மேடா? தெரியாது. தன் முகம் எப்படி இருக்கும்? தெரியாது? என்ன ஆடை அணிந்து கொண்டிருக்கிறோம்? தெரியாது.

எனக்கு அடிவயிற்றில் சோகம் கவ்வியது. ஒரு வேளை எனக்கு எதிரே அமர்ந்திருந்த மனிதருக்கு கண் பார்வை இல்லாமல் இருந்திருந்தால் எங்களுக்குள் நடந்த வாக்குவாதங்கள் இருந்திருக்காது இல்லை?

"அம்மம்மா..."ஸ்ரீனிவாஸ் @ ஸ்ரீனிவாசன்::

என்ன செய்ய வேண்டும்? அழுகையை நிறுத்து அர்ச்சனா! நீ வளர்ந்த பிறகு உனக்கு நிறைய பாக்கெட் மணி தருகிறேன். இப்போது தயவுசெய்து நிறுத்து.

 "அம்மம்மா...தம்பி என்று நம்பி... அவன் உன்னை வளர்த்தான்.."

என்ற கணீர் குரலில், அர்ச்சனா திடுக்கிட்டாள்.' என்னதிது? யார் அது? ' என்று திரும்பினேன்.

'ஓ! கடவுளே. இந்தியாவில் இன்னும் ஏன் இவர்கள் இருக்கிறார்கள்? அரசாங்கம் எதாவது செய்யலாமே! நாம் எப்படி முன்னேறுவது? '

என்று நினைத்துகொண்டிருந்த வேளையில் அர்ச்சனா, அழுகையை திடீரென்று நிறுத்தினாள். இன்னும் கண்ணீர் ததும்பிய கண்கள். ஆனால் கண்கள் விரிய எதையோ கவனிக்க தொடங்கினாள். அந்த குரல் அவளது கவனத்தை திசை திருப்புகிறது. அடடா! அவன் பாடுவது இவளது அழுகையை நிறுத்துமோ? பார்வதீ.. நீ இவளை தணிக்க பாடுவாயா என்ன?

அவள் அவனையே உற்று பார்த்துக்கொண்டிருக்கிறாள். இவனை வைத்தே இவளை சமாளித்துவிட வேண்டும்.'

அவள் பிஞ்சுக்கைகளை தனது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, "அதோ பாரு.. பூ...பூச்சாண்டி மாமா! அழுத புடிச்சு குடுத்துடுவேன். பாரு உன்னை பிடிக்கத்தான் வர்றார். பூ!"

அர்ச்சனா, பாடும் அவரை ஒரு வித வசீகரத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது அழுகையை முழுதாய் நிறுத்திவிட்டாள். அப்போது அவர் காலில் ஏதோ பட்டு, கொஞ்சம் தடுக்கினார்.

"கே..ங்..கூ..கி.." அர்ச்சனா சிரித்தாள்.

'அட! சிரிக்கிறாளே! அப்பாடா!'

"ஹாய்..பூச்சாண்டி மாமா விழுந்துட்டாரு..பூச்சாண்டி மாமா..ஹாய்.. ஜாலீ.." என்று தனது கைகளைத்தட்டினான். அர்ச்சனா மேலும் சிரித்தாள். அவர் மறுபடி கொஞ்சம் தடுமாற, ஸ்ரீ, மேலும் அர்ச்சனாவை குதூகலித்தான்.

பரத்:

'ஐய்யோ! இது என்ன கொடுமை!?.. எவ்வளவு தவறான வழிகாட்டியை இவள் தந்தையாக பெற்றுரிக்கிறாள் ? நினைக்க நினைக்க பதபதைப்பாக இருக்கிறது. நாளைய தலைமுறைக்கு இவரைப்போல எத்தனை தவறான தந்தைகள்? எத்தனை தவறான தாய்மார்கள்? ஒரு தலைமுறையே இப்படி பார்வையற்றுப் போனால் என்ன ஆவது?

பார்வை இழந்தது அவர் குற்றமா? 

ஏன் சிலருக்கு மற்றவர்கள் படும் அவலங்கள் புரிய மாட்டேன் என்கிறது? கொஞ்சமே கொஞ்சூண்டு பணத்தில் இவ்வளவு அலட்சியத்தை இலவசமாக பெறுகிறார்களா  ? அவருக்கு என்ன தெரியும்? தெரிந்ததெல்லாம் ரயிலின் இரைச்சல், இரண்டு அல்லது மூன்று பாடல்கள், 'சில்லறை இல்லை' குரல்கள், சில்லறை சத்தம். அவ்வளவு தான் அவரது உலகம்.

அவர் கடவுள் - இனிதாய் பேசும் யாரும். நண்பர்கள் - கைகளும், கால்களும்... மனிதர்கள் - அவர்களது குரல்கள்.. எல்லாமே பாதி பாதியாக இருக்கும் அவரை ஏன் இப்படி கேலி செய்து அவர் குழந்தையை சிரிக்க வைக்க வேண்டும்? இவ்வாறான செயல்கள் அந்த  குழந்தைக்கு என்ன அறிவுறுத்தும்? என்ன பண்பு கொடுக்கும்?

யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் எங்கள் அருகே வந்துவிட்டார். என்னால் இயன்றதை குடுத்தேன். பார்வை அற்றவர்களின் கண்களை பார்த்திருக்கிறீர்களா? பார்த்ததில்லை என்றால், ஒருமுறை பாருங்கள். அது உங்களில் ஏற்ப்படுத்தும் அதிர்வுகளை சொல்ல சொற்களும் சொர்ப்பம்தான்.

என் எதிர் இருக்கைக்காரர் இன்னும் அர்ச்சனாவை குதூகலப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

எனக்கு உலகின் மேல் வெறுப்பு வந்தது. மனுஷனை மனுஷனா பாக்க நமக்கு எப்போ தெரியாம போனது? ஏன் இவரைப்போன்றவர்கள் பச்சாதாபத்தை இழக்கிறார்கள்? காரணம்தான் என்ன? சுயநலமா? வளர்ப்பா? attitude? என்ன காரணம்?

அந்த ஜோடி:

"சுரேஷ். என்கிட்டே உனக்கு புடிச்சது என்ன?"

"எல்லாமே"

"எல்லாத்துலயும் ரொம்ப புடிச்சது எது?"

"உன் கண்ணு.. அதை பாத்துட்டே செத்துடலாம் ரமா!"

மீண்டும் எங்கேயோ வெறித்துப்பார்த்து காதலிக்க ஆரம்பித்தார்கள்.

பக்கத்து இருக்கை இளைஞர்:

...கொர்ர்...கொர்ர்...

ஸ்ரீனிவாஸ் @ ஸ்ரீனிவாசன்:

அப்பாடா.. இவள் சிரித்து விட்டாள். படுக்க வைத்தால் கொஞ்ச நேரத்தில் தூங்கி விடுவாள். உறங்க வைத்து விட்டு டாக்குமண்டேஷனை முடிக்க வேண்டும். பி.எல். கத்துவான்!

பரத்:

மனிதன் பரிணாம வளர்ச்சியில் மீண்டும் மிருகமாகிறானா?

எனக்கு இந்த அக்கறை அற்ற சமுதாயத்தை பார்க்க விருப்பமில்லை. புத்தகத்தை மூடி வைத்தேன். 

இளையராஜா "அன்பிலாதவரைக்கண்டால், அம்ம! நாம் அஞ்சும் ஆரே!" என்று என் காதில் கசிந்து கொண்டிருந்தார். எனக்குள் சிரித்துக்கொண்டேன். உலகத்தோடும், பக்கத்துக்கு இருக்கை நண்பரோடும், உறங்கச்சென்றேன். பார்வையற்ற நண்பரின் முகம் அவ்வப்போது வந்து போனது.. ரயிலின் 'தடக்..தடக்..'கில் உறங்கிவிட்டேன்.

இரவு: 
மணி: 1:20am
மதுரை கிழக்கு ரயில் நிலையம்:மாரி: டேய் சிலுவை! இன்னிக்கு கலெக்சன் எப்புடி?

சிலுவை: அத்த ஏம்ப்பா கேக்கற! படா பேஜாரா போச்சு! காட்டு கத்து கத்தி பாடினாலும் சில்லறை இல்லைங்கறான்! எனக்கு இந்த குருட்டு வேஷம் போதுமப்பா.. நாளைலேருந்து நான் நொண்டியா போறேன். என்ன சொல்ற?

=====================

இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களை சுமந்து உலகம் இன்னும் சுழலத்தான் செய்கிறது.

=====================
6 comments:

 1. Balaji's comment:

  Story has got good values. The values I can realise:
  Aduthavanga mela kuttham solli samoogam thirunthanum nu solitu than thirunthama irukravanga
  ellar melayum thangala poruthi parthi ivangala ippadi padachitanae andavan nu nenaikravanga
  etha pathiyum kavala illama irukravanga
  adutha vela sothukku ettha thinna pittham theliyum nu irukravanga
  ivanga ellarum irunthalum
  aetho balancing ulagam suthitruku
  ReplyDelete

  ReplyDelete
 2. Iniya kurum padam paarthathu pol irundhadhu. Finishing is super...

  ReplyDelete
  Replies
  1. thanks mama :) do give me tips and areas to improve upon :)

   Delete
 3. Aamaam...ippadium sila manidhargal.

  ReplyDelete